பாடல்
பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – நீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)
விளக்க உரை
- நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
- பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்