
பாடல்
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து – திருக்கருவூரானிலை திருத்தலத்து இறைவனின் வடிவழகை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருக்கருவூரானிலை எனும் திருத்தலத்தில் உறையும் தலைவனும் இறைவனும் ஆனவர் தாமரை போன்ற திருவடிகளை உடையர்; தம்முடைய திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர்; ஆலகால விடம் தாங்கியதால் நீல மணி போன்ற கண்டத்தினை உடையவர்; ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வரும் கங்கையைத் தாங்கியவர்; அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை கொண்டவர்.
விளக்க உரை
• திருக்கருவூரானிலை எனும் கொங்கு நாட்டுத் திருத்தலம்
• பங்கயம் – தாமரை
• பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர்
• வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர்
• அம் – அழகு
• ஆடு அரவம் – ஆடுகின்ற பாம்பு