பாடல்
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – வினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப் வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
விளக்க உரை
- தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
- உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல்
- வெள்குதல் – வெட்குதல், அஞ்சுதல், கூச்சப்படுதல், மனங்குலைதல்