பாடல்
மூலத் துதிக்கும் ஞாயிறுமாய்
முளரி யிதழ்வாய்ச் சதுர்முகனாய்
மூல வுந்தித் திருமாலாய்
மூளுங் கால காலனுமாய்
மேலுற்றருளுஞ் சதாசிவனும்
விரியும் இதழொன்றருள்பரையும்
வித்தாரமுமாய் உலகனைத்தும்
விரிவாய் நின்ற விரிசுடரே
ஞாலத் தமைந்த இருபதமும்
நடனச் சிலம்பும் கிண்கிணியும்
நணுகிப் பெருகும் இந்துநதி
ஞான நதியாம் பரமந்தி
மாலற் றவர்க்கும் உதவிநிற்கும்
மதுர வசனி நவசரணி
மயிலா புரியில் வளர்சன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
கருத்து – அம்மையின் வடிவங்களையும், அவள் சிறப்புகளையும் கூறும் பாடல்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! அண்டத்தின் தொடக்கத்தில் தோன்றும் சூரியனுமாகவும், தாமரை இதழ்களில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், அதனை தாங்கி நிற்கும் கொப்பூழ் கொண்ட திருமாலாகவும், காலம் அறிந்தும், சினம் கொண்டும் உயிர்களை கவரும் கால காலனுமாகவும், ஐந்து கர்த்தாக்களுள் முதலாய் இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தமாகவும், உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தமும் ஆன சதாசிவமாகவும், சிவத்திடம் கூடியதான பராபரையாகவும், பரந்து விரிந்து உலகம் அனைத்திலும் விரிந்து விரிவாக நின்ற விரிந்த சுடராகவும், ஞால வடிவமாகியதும், அதைத் தருவதும் ஆன இரு பாதங்களும், நடனத்தில் ஒலிக்கும் சிலம்பும், கிங்கிணி ஓசைகளும் கொண்டு, கங்கையுடன் ஒன்றிக் கலக்கும் சிந்துநதி, ஞான நதியான பிரம்ம புத்ரா ஆகியவையும் ஆகி, முக்குணங்கள் நீங்கி மாசற்றவர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்து நிற்பவளும், இனிய மொழிகளை பேசுபவளும், ஒன்பது வகையான தேவதைகளாலும் வணங்கப்படுபவளும் ஆகி நிற்கிறாய்.
விளக்க உரை
- நணுகுதல் – கிட்டுதல், சார்தல், ஒன்றிக் கலத்தல், அணுகுதல்