அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)

பாடல்

காலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கி பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி               

தாயுமானவர்

கருத்துசிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்;  பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?

விளக்க உரை

  • மறலியையும், எமனையும்  இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
  • நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
  • பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
  • ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க  சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *