பாடல்
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.
பதவுரை
நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல் சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.
விளக்க உரை
- ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
- கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்