அமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)

பாடல்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துநந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.

பதவுரை

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை  நன்றாக ஆற்றியதே ஆகும்.  ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.

விளக்க உரை

  • அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
  • நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
  • நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
  • ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச்  தம் வரலாற்றையே கூறுகின்றார்.
  • சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
  • எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
  • தண் – அமைதி.
  • அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் (  நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *