அமுதமொழி – பிலவ – மார்கழி – 13 (2021)


பாடல்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும்,  மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால்  அறியப்பட வேண்டியவற்றை  உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?

விளக்க உரை

  • கபாலம் – பிரமனது மண்டையோடு
  • மறி – கன்று
  • இட்டம் – விருப்பம் .
  • எரி – பிரளயகாலத் தீ
  • தனை – அளவு .
  • எள் – அளவின் சிறுமையினை காட்டுவது

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 23 (2021)


பாடல்

அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம்
     ஆதிமணிச் சோதிநிற மான வாலை
விரிவான ராஜலிங்க சுரூப மாகி
     வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச்
சரியான நடுவணையிற் பருவ மாகி
     சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம்
குறியான பதியறிந்து குறியைக் கண்டு
     கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும்  பாடல்

பதவுரை

மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து  அம்பலத்தில் ஆடினேன்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)


அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)

பாடல்

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்

பதவுரை

நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

மீளாத நாண்

புகைப்படம் & மாடல் : திரு.அய்யப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

மீண்டும் அதே பிறப்பு
மீண்டும் இளமைத் துள்ளல்
மீண்டும் அதே கல்வி
மீண்டும் அதே கர்வம்
மீண்டும் அதே மயக்கம்
மீண்டும் அதே முயக்கம்
மீண்டும் அதே சிநேகம்
மீண்டும் அதே வான் பார்த்தல்
மீண்டும் அதே மது வாசனை
மீண்டும் அதே தனிமை
மீண்டும் அதே பேரொலி
மீண்டும் அதே ஓங்காரம்
மீண்டும் அதே ஒடுக்கம்
மீளாத நாண்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 9 (2021)


பாடல்

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – ஈசன் அனைத்தும் ஆகியும் அதில் இருந்து தனித்து இருக்கும் முறையை உரைக்கும் பாடல்.

பதவுரை

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்கள் ஆகியும் (84 லட்சம் வகை யோனி பிறப்புகள்), நாம் வாழும் பூலோகம் விடுத்து புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம்,   தபோலோகம், சத்யலோகம் ஆகிய மேல் உலகங்கள், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம்,  தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் ஆகிய கீழ் உலகங்கள் அனைத்தையும்  படைப்பவனாகவும் அதனில் இருந்து  தனித்து  நிற்பவனாகியும், அனைத்துக்கும் வெளியில் தனித்து நிற்பவனாகி திருவிளையாட்டினை நிகழ்த்துபவனாகவும், பின்னர் அவ்வாறான அந்த உயிர்களாகவும், அந்த உலகங்களாகவும் ஆதியாகவும் இருக்கும் பேரானந்தத்தைக் கண்டு பாம்பே ஆடுவாயாக

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 28 (2021)


பாடல்

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ?

அருளிய சித்தர் : அழுகணி சித்தர்

கருத்து – ஞானத்தின் உயர் நிலையில் உலகப் பற்றுக்கள் நீங்கும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கற்றவர்களும், உடன் இருப்பவர்களும், 96 தத்துவங்களும் உற்றாரும் சுற்றமும் குடும்பமும் நித்யம் என்றிருந்தேன். உற்றாரும் சுற்றமும் குடும்பமும் இந்த ஊரை விட்டுச் செல்கையில் எந்த விதமான சுற்றமும் இல்லாமல் துணை இழந்து நின்றேன்.

விளக்க உரை

  • கற்ற மெய்ஞானம், உடல் மனம் சார்ந்து அடையும் 96 தத்துவங்கள், தான் உடல் பெறுவதற்கு முன் செய்த வினைகள், உடல் எடுத்தப்பின் செய்யும் வினைகள் ஆகிய அனைத்தும் ஞானம் அடையிலே பற்றுக்கள் அனைத்தும் எனை விட்டு  சென்றதென்ன என்று பொருள் உரைப்பாருல் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஆன்ம தத்துவங்கள் – 24, உடலின் வாசல்கள் – 9, தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, குணங்கள் – 3, மலங்கள் – 3, நோய்கள் – 3, விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5, ஐவுடம்புகள் – 5

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 25 (2021)


பாடல்

ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு
ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து
செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே
தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு
ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு
அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று
மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய்
வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது என்றும், தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் அகத்தியர் உரைக்கும் அகத்தியர் மெய்ஞானப் பாடல்.

பதவுரை

குருவுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தும், கால் கடுக்க நின்றும், அவரிடத்தில் எந்த விதத்திலும்(மனம், மொழி, வாக்கு) பொய்யினை பேசாமல் மெய்ஞானத்தில் கூறியுள்ளவற்றை குரு உரைக்க அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை எனில் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும்; அந்த சீடன் எப்பொழுதும் மெய் தேடலில் விருப்பம் கொண்டு தனது குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த மெய்யறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்; யாசித்து பெற்ற பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 24 (2021)


பாடல்

உனக்குப் பணிசெய்ய உன்றனையெந் நாளும்
நினைக்க வரமெனக்கு நீதா – மனக்கவலை
நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்
ஆக்குகின்ற சொக்கநா தா

தருமை ஆதீன முதல் குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் – சொக்கநாத வெண்பா

கருத்து – சொக்க நாதருக்கு பணி செய்யவும், நினைவு அகலாமல் இருக்கவும் அவரிடம் விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

மனக்கவலையையினை நீக்குவதான தென்மதுரையில் வீற்றிருந்து அருளுபவனும், இயல்பாகவே தூய்மை உடையவனும் ஆனவனே, படைக்கப்படும் உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கும்  சொக்க நாதனே! உனக்கு  பணி செய்யவும், உன்னுடைய நினைவு அகலாமல் எப்பொழுதும் உன்னுடைய நினைவு கொண்டிருக்கும் வரத்தினை நீ அருள்வாயாக.

விளக்க உரை

  • நின்மலன் – அழுக்கற்றவனான கடவுள், அருகன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 23 (2021)


பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்

தாயுமானவர்

கருத்து – இறைவனின் மகிமையை அறிந்தவரின் அக அனுபவங்களை விளக்கும் பாடல்

பதவுரை

பிள்ளை பெறுவது வலி தரும் காரியம் என்பது பெற்றவளுக்கு மட்டுமே தெரியும், பிள்ளை பெறாதவளுக்கு அந்த பிரசவ வலி எப்படித் தெரியும்; அது போல இறைவனின் பெருமையை உணர்ந்து பேரானந்தம் கண்டவர்களின் கண்களில் இருந்து எவ்வித முனைப்பும் இன்றி தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கும்; இறைவனின் பெருமையை உணராதவர் நெஞ்சம் கல்லினை ஒத்து இருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 21 (2021)


பாடல்

தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச்  சித்தர் எனும் மதங்க நாதர்

கருத்து – தவநிலையை அறிந்தவர்கள் நவசித்தர்கள் என்பதை உரைக்கும் பாடல்

பதவுரை

மனமாகிய ஆனந்தப் பெண்ணே! எது தவம் என்பதையும், அதன் நிலை என்ன என்பதையும் அறிந்தவர்களுக்கு மெய்ஞானம் தன்னால் தெரியும். இவ்வாறு நவசித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்பதை நன்றாக அறிவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 20 (2021)


பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்

பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – திருஇரட்டைமணிமாலை

கருத்து – பஞ்சாக்கர மந்திரத்தினை அதன் பொருள் பற்றி உரைப்போர் அதன் பொருளைக் காண்பார் என உரைக்கும் பாடல்

பதவுரை

தலையாகிய அண்டமாகிய சிவலோகத்திற்கு உரியவனும், ஆதிரை நட்சத்திற்கு உரியவனும், ஆலகால விஷத்தை உண்டதால் கரிய கண்டத்தை உடையவனும், செம்மை உடைய பொன் போன்ற திருவடிகளை உடையவனும் ஆன சிவபெருமானுக்கு உரித்தானதான தலையான மந்திரமாகிய  பஞ்சாக்கர மந்திரத்தினை பற்றிக் கொண்டு அதன் பொருள் பற்றி தியானித்து தலை தாழ்த்தி வணங்குபவர் அந்த மந்திரத்தின் பொருளைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாயின – மேலான நூல்கள்
  • ஆதிரையான் – இறைவன்
  • தலையாய ஐந்தெழுத்து – மந்திரங்களுக்குள்ளே தலையான மந்திரம் பஞ்சாக்கர மந்திரம்
  • சாதித்தல் – பற்றிக் கொண்டு தியானித்தல்

தாழ்தல் – தலை தாழ்த்தி வணங்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 19 (2021)


பாடல்

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
   புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
   புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
   செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
   தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
   ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
   அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துஅன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே,  விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ?  வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ?  மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக

விளக்க உரை

  • தீனம் – வறுமை, கொடுமை, குரூரம், நோய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 18 (2021)


பாடல்

ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்
வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்
ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே
பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – யோக முறையில் ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்கையில் பிரம்மத்தினை உணரலாம் என உரைக்கும் பாடல்.

பதவுரை

மிகச்சிறியதான ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளானது ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இந்த உலக வடிவம் கொள்கிறது; இவ்வாறு ஒரேழுத்து கொண்டு பிரமமாகி நமக்குள் இருக்கும்  மெய்ப்பொருளை அறிந்து கொண்டு,   யோக முறையில், வாசியை ஏற்றி இறக்கி  அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரம்மத்தினை காணுமாறு செய்தால்  நீங்களே அந்த பரப்பிரம்மம் ஆவீர்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 17 (2021)


பாடல்

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துசிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை.  சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.

விளக்க உரை

  • பாடிலர் – பாடலாகவுடையவர்.
  • காடு அலால் – புறங்காடு அல்லாமல்
  • பாரிடம் – பூதம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 16 (2021)


பாடல்

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

கைவல்ய நவநீதம் – தத்துவ விளக்கப் படலம் – நன்னிலம் தாண்டவராயர் சுவாமிகள்

கருத்து – ஒன்றைக் கண்டு மகிழ்வு கொள்ளும் ஆன்மாவானது இறைவனோடு  முற்றிலும் ஒத்து ஆடும் ஆனால் ஆடும் சிவசத்தி ஆகாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும், இது மனிதன் அல்ல வினைக் கூடு ஆகிய கட்டைதான் என்று தெளிவது போலவும், குரு உபதேசிக்கப்பட்ட  உபதேசத்தின் தெளிவினாலும், அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட வேத,  வேதாந்த நூல்களின் சாரத்தைக் கொண்டும் இது உடல் அல்ல, இது உலகமும் அல்ல, இது பஞ்சபூதங்களும் அல்ல, இவை உண்மைப் பொருளும் அல்ல என்று உணர்ந்து மாறுபாடு இல்லாத ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்பதை மன வேற்றுமை இல்லாமல் ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே பழித்து உரைப்பதாகும் என்று அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • இந்த உலகை அவன் அவள் அது எனும் அவை என்று சுட்டறிவால் அறிவது, கயிற்றை பாம்பென உணர்வது போல ஓர் கற்பித அறிவு. ஒர் பிரம்மஞானியான குருவின் மகா வாக்கியப் பொருள் உபதேசத்தால் இந்த மாய மயக்கங்கள்  நீக்கி, அங்கே பரப்பிரம்மமே மெய்பொருளாக நிற்பதை அறிய இயலும்
  • அபவாதம் – அவதூறு, அவகீர்த்தி, பழி, பழி தூற்று, பழிதூற்றுரை, பழித்துரை, புறங்கூறுதல், கோள் சொல்தல்
  • குரவன் – ஆசாரியன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 14 (2021)


பாடல்

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
   கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
   பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
   மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
   விளையாட்டைப் பாரேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

கருத்து – குண்டலினி சிரசை அடையும் மார்க்கத்தைக் உரைக்கும் பாடல்

பதவுரை

உபதேசம் செய்யப்பட்ட முறைகளை அனுசரித்து தீட்சை முறைகளால் மலங்களை எரித்து, பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாதாரத்தில் இருந்து எழும் அக்கினியானது  மற்ற ஆதாரங்களாகிய  சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகியவற்றை கடந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்று அழைக்கப்படும்  சுழிமுனையினை நாடி வழியே மேலேறி, ஆக்ஞையைக் கடந்து  புருவ மத்தியில்  ஆத்ம சொரூபத்தை காண  சூழ்ந்துள்ள திரைகளை விலக்கி ஆத்மாவை விளக்கி மேலப்பதி எனும்  சகஸ்காரத்தில் அதன் அசைகின்ற விளையாட்டினை என் கண்ணால் பார்ப்பேனோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 30 (2021)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவன் சாராதவர்களுக்கு  அரியவன் என்பதும்,  சார்ந்தார்க்கு எளியன் என்பதையும் உணர்த்தி, அவனைச் சார்ந்து பயன் அடைக என்று கூறப்பட்ட பாடல்

பதவுரை

தேவர்களாலும், மூவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை இடைவெளி இன்றி உள்ளத்தால் பற்றுங்கள்; அவ்வாறு பற்றினால் பற்றிய அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்படுவான்.  அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்திலும், புறத்திலும் வழிபட்டால், உங்களது தன்மை சிவத்தன்மை ஆகிவிடும்.

விளக்க உரை

  • கண் – காலம் பற்றிய இடைவெளி என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ‘கண்ணற உள்ளே’ என்பதை முன்வைத்து ஆக்கினையில் நின்று தவம் செய்வதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்
  • காலை – காலம் `
  • இயற்றுதல், பண்ணுதல் – அகம், புறம் பற்றியது
  • பராபரன் – சிவனது தன்மையைக் குறித்தது

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!