
பாடல்
அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம்
ஆதிமணிச் சோதிநிற மான வாலை
விரிவான ராஜலிங்க சுரூப மாகி
வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச்
சரியான நடுவணையிற் பருவ மாகி
சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம்
குறியான பதியறிந்து குறியைக் கண்டு
கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும் பாடல்
பதவுரை
மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து அம்பலத்தில் ஆடினேன்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.