
உமை :
வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.
மகேஷ்வரர் :
துன்பம், நோய் மூப்பு இளைப்பினால் இந்த சம்சாகார சாகரத்தில் மனம் வெறுக்காதவனுக்கு முக்தி வருவதில்லை. எனவே இதுபற்றிய ஞானத்தினை உனக்குச் சொல்வேன். ஞானத்தின் வழியே அமிர்தம் எனப்படும் முக்தி கிட்டும். மூடனிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான துன்பங்களும் பயங்களும் தோன்றுகின்றன. கற்று அறிந்தவனிடம் அவைகள் இருப்பதில்லை. மூடன் பொருள் நட்டம் வந்த போது அதை நினைத்து துயரம் அடைகிறான். கடந்து போனதை நினைக்கக்கூடாது. அவ்வாறு நினையாதவனுக்கு துயரம் இல்லாமல் அழிந்து போகும்.
அற்ப புத்தியுள்ள மனிதர்கள் வேண்டாதது வருவதாலும், வேண்டியது போவதாலும் மனத்துயரம் அடைகின்றனர். இறந்தவனையும், கெட்டுப்போன பொருளையும் சிந்திப்பவன் துயரத்தையே அடைவான். மானிடர்களின் கர்ப்ப காலம் தொடங்கி இயற்கை அவ்வாறு உருவாக்கி இருக்கின்றது. இன்ப துன்பங்கள் பல வகையில் வந்தாலும், மனிதன் அதற்கு உட்படாமல் இருக்க வேண்டும்.
வைராக்கியவத்தை விரும்புவன் இன்பத்தைக் கண்டு மகிழாமலும், துன்பத்தைக் கண்டு துவளாமலும் இருக்க வேண்டும். எந்த பொருளிடத்தில் அன்பு உண்டாகின்றதோ அதில் இருக்கும் குற்றங்களை ஆராய்ந்து அதில் துன்பம் கலந்திருப்பதை உணரவேண்டும். இதனால் வைராக்கியத்தினை சீக்கிரம் பெறலாம்.
பெரும் கடலில் ஒரு கட்டையும், மற்றொரு கட்டையும் சேர்வது போன்றதே சுற்றங்கள் சேர்வதும். முன்பின் அறிமுகம் இல்லாமல் வந்து மீண்டும் காணாமல் போகும் மனிதர்களிடத்தில் ஸ்நேகம் கொள்ளக் கூடாது. பிள்ளை, பெண்டிர், உடல், சொத்து, அதிகாரம், நலம் ஆகியவை குடும்பம் போன்றவை. வைராக்கியம் கொண்டவன் அதில் மயங்கக் கூடாது.