அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 16 (2021)


பாடல்

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

கைவல்ய நவநீதம் – தத்துவ விளக்கப் படலம் – நன்னிலம் தாண்டவராயர் சுவாமிகள்

கருத்து – ஒன்றைக் கண்டு மகிழ்வு கொள்ளும் ஆன்மாவானது இறைவனோடு  முற்றிலும் ஒத்து ஆடும் ஆனால் ஆடும் சிவசத்தி ஆகாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும், இது மனிதன் அல்ல வினைக் கூடு ஆகிய கட்டைதான் என்று தெளிவது போலவும், குரு உபதேசிக்கப்பட்ட  உபதேசத்தின் தெளிவினாலும், அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட வேத,  வேதாந்த நூல்களின் சாரத்தைக் கொண்டும் இது உடல் அல்ல, இது உலகமும் அல்ல, இது பஞ்சபூதங்களும் அல்ல, இவை உண்மைப் பொருளும் அல்ல என்று உணர்ந்து மாறுபாடு இல்லாத ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்பதை மன வேற்றுமை இல்லாமல் ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே பழித்து உரைப்பதாகும் என்று அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • இந்த உலகை அவன் அவள் அது எனும் அவை என்று சுட்டறிவால் அறிவது, கயிற்றை பாம்பென உணர்வது போல ஓர் கற்பித அறிவு. ஒர் பிரம்மஞானியான குருவின் மகா வாக்கியப் பொருள் உபதேசத்தால் இந்த மாய மயக்கங்கள்  நீக்கி, அங்கே பரப்பிரம்மமே மெய்பொருளாக நிற்பதை அறிய இயலும்
  • அபவாதம் – அவதூறு, அவகீர்த்தி, பழி, பழி தூற்று, பழிதூற்றுரை, பழித்துரை, புறங்கூறுதல், கோள் சொல்தல்
  • குரவன் – ஆசாரியன்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.