கூட்டில் அடைக்கப்பட்டதான நான்கு சேவல்களும், ஐந்து கோழிக் குஞ்சுகளும் ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அவைகள் மடிந்து விடும். அந்தக்கூட்டத்தில் ஒரு கிழ நரியானது புகுந்துவிட்டால் சண்டை செய்யாமல் அவைகள் இறந்துவிடும். அதுபோல் இந்த உடலில் எமன் புகுந்துவிட்டால் அந்தக்கரணங்கள் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும், அது பற்றி அதோடு இருப்பதான மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் பஞ்ச இந்திரியங்கள் அனைத்தும் இறப்பினை எய்தி அனைத்தும் ஆன்மாவில் அடங்கிவிடும்.
கருத்து – சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவன் சிவபெருமான், வானத்தில் உள்ளவர்களுக்கு முதல்வனாகவும், ஆதிமூர்த்தியாகி முதல்வனாகவும், தேவர்களுக்கும், படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாக்களின் ஆயுளுக்கும் பிறகு அவர்களின் எலும்புகளையும், மண்டையோட்டுத் தலைகளை கோர்த்து அதை மாலையாக அணிந்து இருப்பவன். அவ்வாறு அந்த எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தாது ஒழிந்தால் அவை இற்று மண்ணொடு மண்ணாய்ப் போய் அழியும்.
விளக்கஉரை
சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான். சிவன் அவ்வாறு ஏந்துவதால் தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல் என்பதையும், ஏனை மண்ணவர் விண்ணவர் அனைவரும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும். அழியும்படியாக இருக்கும் மாயா காரியப் பொருள்களும் சிவபெருமான் கையேந்தல் பற்றியதால் அழிவினை அடையாது என்பதும் பெறப்படும்.
வலம் – வெற்றிப்பாடு.
சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்
ஓதும் சரியை கிரியை தவயோக ஞானம் தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில் தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த் தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்
அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்
பதவுரை
சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுதலாகிய சரியை, ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலாலும் அகத்தொழிலாலும் வழிபடுதலாகிய கிரியை, தவம், யோகம், ஞானம் ஆகியவற்றை தெரிந்து அதை அமைத்துத் தந்தவன் அந்த சித்தனாகிய சிவன்.
நான்காம் அவத்தையும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரிய நிலையில் அவனை போற்றினால் அணுஅளவு துகளாயும், சுடரொளியாகவும் உருவாகவும் வந்து ஜனனம் செய்யக்கூடியவன்.
அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே அம்பலம் செய்து நின்றாடும் அழகர் துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும் சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே உன்னைப் பார்த்து என்னைப் பாராதே ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா
திருஅருட்பா – வள்ளலார்
கருத்து – புறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும்பாடல்.
பதவுரை
கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல் அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)
விளக்கஉரை
அவ்வாறு அகமுகமாக காணும் போது காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.
மாங்குயிலே! ஓங்கார வடிவத்தில் இருக்கும் வட்டத்தின் உட்பொருளை கண் கொண்டு பார்த்தப்பின் மாயை கொண்டு அழியும் பொருள்களின் மீது இருக்கும் நீங்காத ஆசை நிலைத்திருக்குமோ? உயிர்களில் உறையும் ஆன்மாவானது, நிலைத்ததான பரமான்மாவோடு கூடி அமர்ந்திருக்கும் திருக்கூத்தை என்னுடைய வாயினால் சொல்ல இயலுமோ?
கருத்து – சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரித்துரைத்து அவ்வாறு சிறப்புடைய அவன் மோன சமாதியில் எளியனாய் நிற்றலை உணர்த்தும் பாடல்.
பதவுரை
தன் இயல்பிலேயே உருவம் இல்லாதவனாகவும், தன் அடியவர்கள்பால் உருவம் கொளும் இடத்து அந்த உருவில் புலால் கொள்ளாதவனாகவும், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீக்கம் பெற்றதால் பாசத்தின் காரணமாக ஏற்படும் ஊனம் ஒன்றும் இல்லாதவனாகவும், அருள் உடைய தேவியை தன்னுடைய இல்லாளாக உடையவனும், ஏற்பதும், பெறுவதும் இல்லாமையினால் உலகில் வரும் நன்மை தீமை ஆகியவற்றிக்கு ஆட்படாதவனாகவும், தேவர்களுக்கு தேவனாகவும், ஒப்பில்லாதவனும், அனாதியே ஆகி அத்துவிதமாக கலந்து நிற்பவனாகிய சிவபிரான் வந்து என்னுடைய மனம் எனும் அறிவில் புகுந்தான்.
வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன் வாசனை என்றே அறிந்துகொண்டு சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில் தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே
அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர்
பதவுரை
ஆனந்த வடிவில் இருக்கும் மனோன்மணித்தாயே! தொந்த வினையின் காரணமான கொடுமை கொண்டதான பிறப்பும், இறப்பும் வாசனையின் காரணமாக நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு எவ்விதமான மன மாறுபாடும் இல்லாமல் பிராணாயாமம் செய்தால் எல்லாவற்றிலும் மேம்பட்டதான பரம்பொருள் ஆகலாம். (என்பதை உணர்த்துவாயாக)
குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு மாத்தித் தனது வசம் ஆக்கியே சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி யானிடப முந்தும் அருள் ஆனந்தன்
அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்
பதவுரை
மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.
நிறைவினை அடையச் செய்வதாகிய முக்தியினை பெறுவதற்கும், முக்தியினை அளிக்க நினைத்த குருவிற்கும், இறையினையும் கனவு போன்ற இந்த வாழ்வினில் இருந்து விலகி, மெய்யறிவு பெற்று அதில் நிறைந்து இருக்க வேண்டும். அவ்வாறு குரு இடத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த உலக வாழ்வினை நித்தியம் என்று எண்ணாமல் அநித்தியம் என்று கொண்டு அதுபற்றி அறிந்து வாழ்வினை கொள்ளும் போது கோபம் கொண்டு உயிரினை பறிக்க வரும் எமனும் தன்னுடைய தண்டத்தினை விட்டுச் செல்வான்
கண்ணம்மா! வாழ்தலுக்காக பொருள் தேடி நிற்கும் வேடர்கள் இடத்தில் போய் அவர்களிடத்தில் பொருள் வேண்டுதலுக்காக கையேந்தி, அவர்களைப் புகழ்ந்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். அவர்களிடத்தில் பொய்யாக புன்னகைக்காமல், அவர்களைப் பொய்யாக சேராமல், பொய்யான அந்த வேடம் புனைவர்கள் இடத்தில் செல்லாமல் எனக்கு பொருள் தருவாயாக
மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்
மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆடி மாத / நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்
மாவட்டம்
சிவகங்கை
முகவரி / திறந்திருக்கும் நேரம்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611
தேவாரத்தலங்களில் 202 வதுதலம் பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 18 திருமுறைஎண் 1
பாடல்
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
பொருள்
சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 11 திருமுறைஎண் 8
தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?
தாங்கள் தங்களுக்கு என்று விரும்பிச் செய்யும் சடங்குகளை குறைவாக மதிப்பிட்டு எள்ளி நகையாடாதே; உன்னை பலரும் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சியில் மகிழ்ந்து விடாதே; நிறைவான வாழ்வு வாழும் முன் வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என எண்ணாதே; மற்றவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் படி செய்யக்கூடிய செயலைச் செய்து நீ தாழ்ச்சியினை அடையாதே.
சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும் பூசி, கந்தை ஆடையினை கோவணமாகஅணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?
நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே விண்ணுறுவார்க் கில்லை விதி
நல்வழி – ஔவையார்
கருத்து – வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும்பாடல்.
பதவுரை
நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள் புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.
அருளை பெறுவதற்காக குற்றமற்றவனாக இருக்கும் அவனது திருவடிகளை தேடிக்கொண்டு, காலத்தால் குறிப்பிட்டுக் கூற இயலாததாக இருப்பதும், அளவிட முடியதாகவும் இருக்கும் பெரியதான சோதியினை நித்தமும் விரும்பி அதை நாடி, சோதி வடிவமாகவே இருக்கும் மனோன்மணியாள் அருளைப் பெற்று சுகத்தினை தருபவருமான பாதத்தினை மனத்தினாலே உற்று நோக்கு.
சுகர் – சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவரும், வியாச முனிவரின் புதல்வரான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார். எழுதிய சித்தர் பற்றி எக்குறிப்பும் காணப்படாமையால் சுகர் குருவாக இருந்திருக்கலாம்.
கருத்து – போற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என் செய்வேன்.
கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.
பதவுரை
உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.