சித்த(ர்)த் துளிப்பு – 21-Jan-2021


பாடல்

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

தாயை நிரந்தரமான உறவு என்றும், தந்தையை ஒப்பு செய்ய இயலாதவர் என்று பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்தி மாயையானது வந்து சேர்ந்ததால் எனது மதி மயக்கம் கொண்டது; இது மாயையின் காரியம் என்று உண்மையினை உணர்ந்து மதியின் மயக்கம் தீர்ந்தவுடன் தாய் நிரந்தரமான உறவாகவும், தந்தை ஒப்பில்லாதவராகவும் ஆகிவிடுவார்களா?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Jan-2021


பாடல்

சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்

அருளிய சித்தர் : காரைச் சித்தர்

பதவுரை

சித்தர்கள் தான் கண்ட உண்மையினை பிறருக்கு உரையாமல் மறைத்து வைத்தார் என்று கூறி எண்ண வேண்டாம்; சித்தர்களில் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதே அதன் பொருளை விளக்க அனைத்து சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து வந்து அதன் பொருளை அருளுவார்கள்; சித்தர்களின் பால் வைத்த எண்ணங்களுக்காக அவர்கள் நாட்டம் கொண்டு அருளுவார்கள்; சித்தர் வழியில் அதன் பொருளைக் கண்டு நடக்கையில் அதன் உட்பொருளில் இருந்து மாறுபட்டு நடந்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வார்கள்; சித்தம் நிறைவு உள்ளவர்களுக்கே சித்திகள் எனப்படும் அட்டமா சித்திகள் தோன்றும்; அவ்வாறு சித்தம் நிலைபெறாமல் சித்தி கண்டவர்கள் என்று கூறி அவர்களால் செய்யப்படும் வித்தைகள் எல்லாம் சிரிப்பினைத் தான் தோற்றுவிக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Jan-2021


பாடல்

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம்

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

ஊனில் ஏற்படுவதாகிய உறக்கம் விடுத்து அதை நீக்கி யோக நிட்டை புரிந்தோம், உற்றவர்கள் என்று சொல்லப்படும் மனைவி, மக்கள், உறவுகள் அனைவரையும் விலகி அவர்கள் இடத்தில் பற்று கொள்ளாமல் இருந்து மலைக் குகைகளில் இருந்து (தவம் செய்து) வந்தோம்; புறக்கண்களால் காண இயலாததும், அகக் கண்களால் யோகம் பற்றி காணக்கூடியதான பரவெளியினைக் கண்டோம்; பசி, தாகம் மற்றும் இயற்கை உபாதைகள் தாக்காதிருக்க கற்ப மூலிகளைக் உட்கொண்டு உடலை வளர்த்துக் கொண்டோம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 14-Jan-2021


பாடல்

அட்ட கரு மம்தெரிய வேணும் அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும் இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்

அருளிய சித்தர் : கல்லுளிச் சித்தர்

பதவுரை

மனப்பயிற்சியால் தன் வயப்படுத்தலாகிய  வசியம், இயக்கச் செயல்களைக் கட்டுவதுவதாகிய  தம்பனம், தீய சக்திகளை தன்னிடம் இட்டு விரட்டுதலாகிய  உச்சாடனம், பிறறை தன் மீது  மோகம் கொள்ளச் செய்தலாகிய மோகனம், பகை உண்டாக்கிப் பிரித்தலாகிய  வித்வேடணம், துர்தேவதைகளை பணிய வைத்தலாகிய ஆகர்ஷணம், சுய நினைவற்று போகச் செய்தலாகிய பேதனம், உயிர்களுக்கு கேடு விளைப்பதுவாகிய மாரணம் ஆகிய அட்ட கருமங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த அட்ட கருமங்கள் எவ்வாறு தோற்றமும் ஒடுக்கமும் கொள்கின்றன என்பதன் மூலத்தினை அறிய வேண்டும்; எண்ணத்தில் மன உறுதி கொண்டு வாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அறிந்து கொண்டு சித்தன் என்று ஆக வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 3


புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

மாவட்ட அளவில் பெரிய அதிகாரியாக இருப்பவர் குரு நாதர். அவர் மாவட்ட அளவில் இருக்கும் இன்னொரு பெரிய அதிகாரியிடம் (சிவம் என்று கொள்வோம்) கீழ் இருந்து வேலை பார்ப்பவர்.

சிவத்திடம் இருவர் வேலை பார்த்து வந்தார்கள். ஒருவர் வெள்ளையன், மற்றொருவர் கருப்பன். தூய மனம் உடையவர் என்பதால் வெள்ளையன், லஞ்சம் பெற்று வாழ்வினைக் கொண்டதால் கருப்பன்.

குரு நாதர் : என்னப்பா, எப்டி இருக்க?
கருப்பன் : நல்லா இருக்கேன் சார்.
குரு நாதர் : நல்லா தூங்குகிறாயா?
கருப்பன் : நல்லா தூங்குகிறேன் சார்.

இரண்டு வாரம் கழித்து கருப்பன் வேலைக்கு வரவில்லை, விசாரித்த போது தனது மகளுக்கு புற்று நோய் எனவும், அதனால் வரவில்லை எனவும் உரைக்கப்பட்டது.

நீண்ட நாள் சுழற்சிக்குப் பிறகு எங்கேங்கோ சென்றும் பதில் / விடை கிடைக்காமல் கருப்பன் மீண்டும் குரு நாதர் இடத்திலே வந்தார்.

கருப்பன் : சார், நீங்க அன்னைக்கு கேட்டப்ப புரியல சார், இப்ப புரியுது, என் குழந்தையக் காப்பாத்துங்க சார்.
குரு நாதர் : நான் என்னப்பா செய்யமுடியும், நான் என்ன மந்திரவாதியா இல்லை வைத்தியரா?
கருப்பன் : இல்லை சார், நீங்கள் நினைத்தால் முடியும்
குரு நாதர் : ….

சில வாரங்கள் சென்றப்பின் கருப்பன் மீண்டும் பழங்களுடன் வந்து குரு நாதரை சந்தித்து ‘என் மகளைக் காக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

குரு நாதர் : நான் சொல்வதைக் கேட்பாயா?
கருப்பன் : நிச்சயமாக செய்கிறேன்.
குரு நாதர் : நாள் ஒன்று சொல்லி அன்றைக்கு என்னை வந்து பார்

அவர் சென்ற பிறகு பழங்களை பசுவிற்கு கொடுத்து விட்டார்.

குறிப்பிட்ட நாள் :
குரு நாதர் : நல்லா கேட்டுக்கோ,… இந்த பரிகாரங்களை குறைந்தது ஒருவடத்திற்கு செய்து வா, சிவம் உன் மேல் கருணை வைத்தால் இது விலகும்.
கருப்பன் : சரி, சார்.

மீண்டும் 3 மாதம் கழித்து வந்தார்

கருப்பன் : சார், எனது மகளுக்கு நேற்று சோதனை செய்து பார்த்தோம், 70% வரை சரியாகி விட்டதாக டாக்டர் எல்லாம் கூறி இருக்கிறார்கள். உங்களுக்குத் தான் நன்றி சார்
குரு நாதர் : நான் என்னப்பா செஞ்சேன், எல்லாம் ஈசன் செயல்.

கடைசி தகவலின் படி முறையற்ற முறையில் ஈட்டிய பணம் என்பதால் பல லகரங்களை மிகப் பெரிய பழமையான ஆஸ்ரமத்திற்கும், மற்றொரு மிகப்பெரிய லகரங்களை கண்கள் அற்ற அனாதை ஆஸ்ரமத்திற்கும் கொடுத்து விட்டதாகவும், தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் உரைத்து இருக்கிறார்.

சத்தியத்தின் வழி நிற்கும் குரு நாதருக்கும், அவர் பகிர்ந்த கருத்துகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 13-Jan-2021


பாடல்

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே

அருளிய சித்தர் : வால்மீகர்

பதவுரை

மூச்சை உள்ளிழுத்தல் ஆகிய பூரகம் என்பதே சரியை மார்க்கமாகும்; மூச்சை அடக்கி செய்தல் ஆகிய கும்பகம்  என்பதே கிரியை மார்க்கமாகும்; மூச்சினை இடம் வலம் எனப்பிரித்து மேலேற்றும் ரேசகமே யோக மார்க்கமாகும்; அவ்வாறு காற்றினை உள்ளும் புறமும் செலுத்தாமல் நிறுத்தி வைத்தலே ஞான மார்க்கமாகும்; மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு ஆகிய  இந்த உடலில் மரணிக்கச் செய்யாமல் இருக்க பிராண வாயு உடலில் புகுந்து செல்லும். சிவசிவா  என்று அவனைப் பற்றி உரைக்கலாம்; இதனை மனத்துள் உள்வாங்கி தெளிவடைந்து சேர்ந்தவன் சித்தன் ஆவான்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 11-Jan-2021


பாடல்

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

குதம்பாய்! அண்டம் அனைத்திலும் தன் நிலை மாறாது நீக்கமற நிறைந்து சோதி வடிவாக இருப்பதை அங்கம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக. (குறிப்பாக ஆறு ஆதாரங்களிலும்)
கால எல்லைக்களைக் கடந்து அண்டங்களுக்கு அப்பாலும் இருக்கும் சுடர்வடிவினை பிண்டம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக (உடல் முழுவதும் சுடராகவே)

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 8-Jan-2021


பாடல்

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்

அருளிய சித்தர் : பத்ரகிரியார்

பதவுரை

உலக வாழ்வில் ஆறாத புண் போன்று அழுந்திக் கிடப்பது போல் அல்லாமல்,  நன்மையும் வளமையும் தராத சிந்தனைக் கொண்டு அதில் இருந்து விலகி தேற்றிவருவது எக்காலம்?

பெற்றோர்களாகிய தந்தை, தாயார், தான் பெற்ற மக்கள், தன்னுடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஆகிய உறவுகள் அனைத்தும் பொய்யான வாழ்வு எனக் கண்டு, அதனால் சிந்தையினில் தெளிவு பெற்று  இருப்பது எக்காலம்?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 7-Jan-2021


பாடல்

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

கூட்டில் அடைக்கப்பட்டதான நான்கு சேவல்களும், ஐந்து கோழிக் குஞ்சுகளும் ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அவைகள் மடிந்து விடும். அந்தக்கூட்டத்தில் ஒரு கிழ நரியானது புகுந்துவிட்டால் சண்டை செய்யாமல் அவைகள் இறந்துவிடும். அதுபோல் இந்த உடலில் எமன் புகுந்துவிட்டால் அந்தக்கரணங்கள் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும், அது பற்றி அதோடு இருப்பதான மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் பஞ்ச இந்திரியங்கள் அனைத்தும் இறப்பினை எய்தி அனைத்தும் ஆன்மாவில் அடங்கிவிடும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 22 (2021)


பாடல்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவன் சிவபெருமான், வானத்தில் உள்ளவர்களுக்கு முதல்வனாகவும், ஆதிமூர்த்தியாகி  முதல்வனாகவும், தேவர்களுக்கும், படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாக்களின் ஆயுளுக்கும்  பிறகு அவர்களின் எலும்புகளையும்,  மண்டையோட்டுத் தலைகளை கோர்த்து அதை மாலையாக அணிந்து இருப்பவன். அவ்வாறு அந்த எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தாது ஒழிந்தால் அவை இற்று மண்ணொடு மண்ணாய்ப் போய் அழியும். 

விளக்கஉரை

  • சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான். சிவன் அவ்வாறு ஏந்துவதால் தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல் என்பதையும்,  ஏனை மண்ணவர் விண்ணவர் அனைவரும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும். அழியும்படியாக இருக்கும் மாயா காரியப் பொருள்களும் சிவபெருமான் கையேந்தல் பற்றியதால் அழிவினை அடையாது என்பதும் பெறப்படும்.
  • வலம் – வெற்றிப்பாடு.
  • சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 6-Jan-2021


பாடல்

ஓதும் சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன்
துரியத்தில் தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுதலாகிய சரியை, ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலாலும் அகத்தொழிலாலும் வழிபடுதலாகிய கிரியை, தவம், யோகம், ஞானம் ஆகியவற்றை  தெரிந்து அதை அமைத்துத் தந்தவன் அந்த சித்தனாகிய சிவன்.

நான்காம் அவத்தையும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரிய நிலையில் அவனை போற்றினால் அணுஅளவு துகளாயும், சுடரொளியாகவும் உருவாகவும் வந்து ஜனனம் செய்யக்கூடியவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 21 (2021)


பாடல்

அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே
அம்பலம் செய்து நின்றாடும் அழகர்
துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும்
சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே
உன்னைப் பார்த்து என்னைப் பாராதே
ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா
என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து – புறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல்  அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)

விளக்கஉரை

  • அவ்வாறு அகமுகமாக காணும் போது  காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 5-Jan-2021


பாடல்

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே
ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

பதவுரை

மாங்குயிலே! ஓங்கார வடிவத்தில் இருக்கும் வட்டத்தின் உட்பொருளை கண் கொண்டு பார்த்தப்பின் மாயை கொண்டு அழியும் பொருள்களின் மீது இருக்கும் நீங்காத ஆசை நிலைத்திருக்குமோ? உயிர்களில் உறையும் ஆன்மாவானது, நிலைத்ததான பரமான்மாவோடு கூடி அமர்ந்திருக்கும் திருக்கூத்தை என்னுடைய வாயினால் சொல்ல இயலுமோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 20 (2021)


பாடல்

உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரித்துரைத்து அவ்வாறு சிறப்புடைய அவன் மோன சமாதியில் எளியனாய் நிற்றலை உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன் இயல்பிலேயே உருவம் இல்லாதவனாகவும், தன் அடியவர்கள்பால் உருவம் கொளும் இடத்து அந்த உருவில் புலால் கொள்ளாதவனாகவும், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீக்கம் பெற்றதால் பாசத்தின் காரணமாக ஏற்படும் ஊனம் ஒன்றும் இல்லாதவனாகவும், அருள் உடைய தேவியை தன்னுடைய இல்லாளாக உடையவனும், ஏற்பதும், பெறுவதும் இல்லாமையினால் உலகில் வரும் நன்மை தீமை ஆகியவற்றிக்கு ஆட்படாதவனாகவும், தேவர்களுக்கு தேவனாகவும், ஒப்பில்லாதவனும், அனாதியே ஆகி அத்துவிதமாக கலந்து நிற்பவனாகிய சிவபிரான் வந்து என்னுடைய மனம் எனும் அறிவில் புகுந்தான்.

விளக்கஉரை

  • பொருவிலி – ஒப்பிலி, சிவபிரான்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 4-Jan-2021


பாடல்

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர்

பதவுரை

ஆனந்த வடிவில் இருக்கும் மனோன்மணித்தாயே! தொந்த வினையின் காரணமான கொடுமை கொண்டதான பிறப்பும், இறப்பும் வாசனையின் காரணமாக நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு எவ்விதமான மன மாறுபாடும் இல்லாமல் பிராணாயாமம் செய்தால் எல்லாவற்றிலும் மேம்பட்டதான பரம்பொருள் ஆகலாம். (என்பதை உணர்த்துவாயாக)

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 3-Jan-2021


பாடல்

குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே
சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 2-Jan-2021


பாடல்

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு – ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் – ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே

அருளிய சித்தர் : புண்ணாக்குச் சித்தர்

பதவுரை

நிறைவினை அடையச் செய்வதாகிய முக்தியினை பெறுவதற்கும், முக்தியினை அளிக்க நினைத்த குருவிற்கும், இறையினையும் கனவு போன்ற இந்த வாழ்வினில் இருந்து விலகி, மெய்யறிவு பெற்று அதில் நிறைந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு குரு இடத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த உலக வாழ்வினை நித்தியம் என்று எண்ணாமல் அநித்தியம் என்று கொண்டு அதுபற்றி அறிந்து வாழ்வினை கொள்ளும் போது கோபம் கொண்டு உயிரினை பறிக்க வரும் எமனும் தன்னுடைய தண்டத்தினை விட்டுச் செல்வான்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 1-Jan-2021


பாடல்

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! வாழ்தலுக்காக பொருள் தேடி நிற்கும் வேடர்கள் இடத்தில் போய் அவர்களிடத்தில் பொருள் வேண்டுதலுக்காக கையேந்தி, அவர்களைப் புகழ்ந்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். அவர்களிடத்தில் பொய்யாக புன்னகைக்காமல், அவர்களைப் பொய்யாக சேராமல், பொய்யான அந்த வேடம் புனைவர்கள் இடத்தில் செல்லாமல்  எனக்கு பொருள் தருவாயாக

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 31-Dec-2020


பாடல்

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! பட்டணம் எனப்படும் இந்த உடலினை ஆளக்கூடியவர்கள் பஞ்ச இந்திரியங்களாகிய பஞ்சவர்கள் எனப்படும் அரசர்கள்; இவர்கள் உடலினை விட்டு நீங்காமல் இருக்கும் வரையில் பெருமை கொண்டு ஆற்றலும் வல்லமையும் கொண்டு பேசி இருப்பார்கள்; அவ்வாறு பெருமை பேசும் போது ஆளுமை செய்யக்கூடிய பஞ்சவர்கள் வேற்றுமை கொண்டு உடலினை விட்டு பிரியும் போது பட்டணம் என்று சொல்லக்கூடிய இந்த உடலானது போய்விடும்; படைமன்னர் எனப்படும் பஞ்சவர்களும் மாண்டு விடுவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!