வல்வினை நோய்

தந்தையின் தோள் பற்றி இருக்கும்
பெண் குழந்தை ஒன்று
தலை திருப்பி
‘எனக்கு இப் பொம்மை வாங்கி தருவாயா’ என்கிறது.
காரணம் விளக்காமல்
மறுதலித்து
நடக்கத்துவங்குகிறான் தகப்பன்.
சில வினாடிகளுக்குப் பின்
தகப்பன் மனம் மாறலாம் என
பொம்மை விற்பவன் தலை திருப்புகிறான்.
தொலை தூரத்தில் குழந்தையும்
தலை திருப்புகிறது
நிறைவேறா நிமிடங்களுக்காக

காலம் உறைந்திருக்கிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கழுகுன்றம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கழுகுன்றம்
•மூலவர் –  சுயம்புலிங்க மூர்த்தி
•ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக,அதர்வணவேத பாறை உச்சியில்  – சிவபெருமான் கோவில்
•  க்ருத யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், த்ரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், வாப்ர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், கலி யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் ழிபட்டுப் பேறு பெற்றது இத்தலம். இவர்கள் பிரம்மனின் மானச புத்திரர்கள்
•கருவறை கஜப்பிரஷ்ட அமைப்பு
•மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
•கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்
•சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்றத் தலம்
•மாணிக்க வாசகருக்கு அருட்காட்சி கிடைக்கப்பெற்ற தலம்
•சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் காட்சி
•மலைக் கோவில் சுற்றி 12 தீர்த்தங்கள். இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம்,ருத்ர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம்
•பெயர்க்காரணம் – கழுகுகள் வழிபாடு –  கழுகாச்சலம், கோடி ருத்ரர்கள்  வழிபாடு  – உருத்திரக்கோடி, மகாவிஷ்ணு வழிபாடு  – வேதநாராயணபுரி, இந்திரன் வழிபாடு  –  இந்திரபுரி, இறைவன் மலை உச்சி – கொழுந்து வடிவம் – மலைக் கொழுந்து
•சு‌ப்பையா சுவா‌மிக‌ள்(கடையனோடை சுவா‌மி, ‌பி.ஏ. சுவா‌மி, ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி ) முக்தி அடைந்த தலம்
 
தலம்
திருக்கழுகுன்றம்
பிற பெயர்கள்
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
இறைவன்
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
இறைவி
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
தல விருட்சம்
வாழை
தீர்த்தம்
சங்கு தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை – தேர்த்திருவிழா, கார்த்திகை – சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் – லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
வழிபட்டவர்கள்
இந்திரன், மார்க்கண்டேயர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 270  வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28  வது தலம்.
 
மலைக்கோயில் மூலவர் – வேதபுரீஸ்வர்
 
 
 
மலைக்கோயில்  அம்மன் – சொக்க நாயகி
 
 
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்    
திருமுறை               1ம் திருமுறை      
பதிக எண்                103   
திருமுறை எண்     8  
பாடல்
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே.

பொருள்
அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை கயிலை மலையின் கீழ்ப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி,  அவனுக்கு துன்பத்தை விளைவித்தவனும், பிறகு அவனுக்கு வரங்கள் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
கருத்து
நொடிவரை – நொடிப்பொழுது
பாடியவர்           சுந்தரர்       
திருமுறை             7ம் திருமுறை           
பதிக எண்             81       
திருமுறை எண்       8        
 
 
பாடல்
 
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே
பொருள்
 
எண்ணிக்கை அற்ற அடியார்களது மனதில் அவரவர்க்கும் தகுந்தவாறு உறைபவனும், திருமாலும் நான்முகனும்  தினமும் வழிபடும் செய்யும் வண்ணம் இருப்பவனும், மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே
கருத்து
அந்தம் இல்லா அடியார்  – எண்ணிக்கை இல்லா அடியார்
Reference
 
1.வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்
2.தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் – நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – உணவகங்கள்

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
என்னா சார், சாப்பாட்டு டோக்கனோட ஜெலுசில் மருந்து தரீங்க.
எங்க ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டா வயறு சரியில்லாம போகும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. அப்புறம் எப்படி எங்க மெடிக்கல் ஷாப்பை நடத்துறது?
2.
என்னா சார், ரவா தோசையோட பூதக்கண்ணாடி  தரீங்க.
அத வச்சித்தான் நீங்க தோச எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்,
3.
எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க எல்லாம் ஓட்டல் வாசல்ல உக்காந்து இருக்காங்க?
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஹாஸ்பிடலோட ரெப்ரசன்டேட்டிவ். குடுக்குற காசுக்கு தகுந்த மாதிரி சாப்பிட்ட ஒடனே ஆர்யபட்டா ஹாஸ்பிடல் மாதிரி  ஹாஸ்பிடல்ல சேர்ப்போம்.
4.
அடுத்த தடவைல இருந்து கார்த்திகேயன் ஒட்டலுக்கு சாப்பிட போகக்கூடாதுடா?
ஏண்டா?
இல்லடா, ஊசி பின் முனைய கரண்டியா மாத்தி வச்சிருக்காங்க, அதால சாம்பார் ஊத்ராங்க. இன்னும்         கொஞ்சம் வேணும்னா, கைய கழிவிட்டு Rs. 10312.21 க்கு பில் வாங்கிகிட்டு வரச்சொல்றாங்க.
5.
என்னா சார், சாப்பாட்ல உப்பு, ஒரப்பு ஒண்ணுமே இல்ல.

‘சன்யாசத்துக்கு முதல் நிலை எங்களது ஓட்டல்‘ அப்படீன்னு போர்டு எழுதி போட்ருக்கோமே, அத பாக்கலயா நீங்க.

Loading

சமூக ஊடகங்கள்

மெருகேறும் மௌனம்

செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக்க வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 22/25 திரிபாதர்

வடிவம்
இரண்டு சிரசு
நாலு கொம்புகள்
ஏழு புஜம்
மூன்று பாதம்
வேறு பெயர்கள்
முப்பாதன்
திரிபாதத்ரி மூர்த்தி
இதரக் குறிப்புகள்
பிரளயத்தின் முடிவில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் மகேஸ்வரனிடத்தில் லயமாகும் நிலை திரிபாத மூர்த்தி ஆகும்.
சரியை, கிரியை, யோகம் அனுஷ்டிக்கும்படி செய்யும் வடிவம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
மாமல்லபுரம் வடக்கு சுவர் சிற்பம்

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்

 
 
இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் ‘மாக்கான்’. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.’அம்மா சோறு போடுங்க‘  இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். ‘அம்மா சோறு போடுங்க‘. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
 
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சூன்யம் பயணக் குறிப்புகள்

என்னின் பிரதியாக
எனக்குள் என்னில் இருந்து,
மாயையின் சாயலாக நிழல்.
ஏற்றம் கொள்ளும்;
கண்ணில் பட்டு காலில் விழும்;
மாற்றம் கொண்டு இயல்பு மாறும்;
தருணம் ஒன்றும் தேவையில்லை
தானே தொடர.
தானும் சூன்யமாகும் தருணத்தில்
நேர் கோட்டில் பயணிக்கும்
சூன்யமும்.

நிழலும் புகைப்படமும் :  Sundar

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.
ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையே ‘மருவுசற் காரியத்தாய்‘ என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.
மாணவன்

‘தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளது‘ என்பதன் பொருள் ‘காணப்படாத நுண்நிலையில் உள்ளது‘ என்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.
காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது
மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? ‘

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது’ என்பது போலவே ‘அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்’ என்பதே உண்மை.


மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவே ‘உள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன‘ . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின் ‘முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்‘ என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆர்த்த பிறவி

பொம்மைகளுக்கு ஏது தனி வாழ்வு?
ஆட்டுவிப்பவன் இருக்கும் வரையில்
அனு தினமும் ஆடும் பொம்மைகள்.
கயிறு அறுபட்ட பொம்மைகள்
தனித்து வீதி அடையும்.
நாளின் பிற்பகுதியினில்
களிமண்ணில் இருந்து உயிர் பெறும்.
கலைகின்றன பொம்மைகளின் வேஷங்கள்;
கலைகின்றன பொம்மைகளின் கனவுகள்.
நிஜம் தேடும் நித்திய வாழ்வு;
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
மீண்டும்
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
பிறிதொரு நாளில்
அனைத்திற்கும் பிறகும்
நிலைபெற்றிருக்கும் பிரணவாகார ஒலி.
மௌன நாதத்தில் ஒடுங்கும் மனமும்.

புகைப்படம் :  Karthik Pasupathi
*ஆர்த்த பிறவி துயர் கெட – திருவாசகம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Neuron Repair

·   Scientists Connect Neurons in the Lab for the First Time
·   Injuries to the central nervous system — the brain and spinal cord — are particularly devastating because the body doesn’t regenerate neurons to repair connections between vital circuits and restore function. In other words, the damage is permanent or even fatal.
·   A team artificially connected two neurons using an atomic force microscope and tiny, polystyrene spheres.
·   Peter Grutter, likened the process to pulling a piece of chewing gum apart. In this case the gum, or axon, was roughly 1/100 the width of a human hair.
              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
ஏம்பா, ஏதாவது கட வக்கிலாம்னு இருக்கேன். Neuron Repair கட வக்கலாமா?
அட ஏம்பா அந்த பஞ்சர்  ஒட்ர  கட வேண்டாம்பா?
2
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நியூரான் வழியாக செலுத்த உதவும் மின்சாரம் இலவசமாக 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
3.
மருத்துவமனையில்
சார், அந்த நியூரான் மாற்று…
500 கோடி குடுங்க சார்
யோவ், அது என்னான்னு கேக்க வந்தேன்.
நாங்க தலவலின்னு வந்தாலே 10 கோடி வாங்குவோம். நீ வேற இதப்பத்தி கேக்றீயா. அதான். (Information is wealth)
4.
நோயாளி
சார், கொஞ்சம் மெதுவா சார், நீங்க செய்ற operation ல Axon சரியா connect ஆகல.  Dendrites affect ஆகி nucleus damage ஆகிடுச்சி
மருத்துவர்
என்னயா சொல்ற? உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
நோயாளி
நீங்க இப்ப படிச்சிட்டு வந்து இருக்கீங்க. நானெல்லாம் அந்த காலத்திலேயே Artificial Intelligence ம் Neural networks ம் அரியர் வச்சி பாஸ் பண்ணியிருக்கேன்.

5.
என்னா சார், தீடிர்னு இந்த மாசம் 1,00,000 கரண்ட் பில் ஏறி இருக்கு.
அது நீங்க Neuron Repair செய்தீங்க இல்ல. அதுக்கு recharge amt..
அப்ப போனமாசம் எங்க தாத்தாவுக்கு 50000 தான் வாங்கினீங்க?
வயசானவங்களுக்கு சார்ஜ் கம்மியாத்தான் ஆவும். அதான்.
 
Reference 
http://blogs.discovermagazine.com/d-brief/2016/02/09/scientists-connect-neurons-in-the-lab-for-the-first-time/#.VsbrjrR97IU

Continue reading “2038 – Neuron Repair”

Loading

சமூக ஊடகங்கள்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
இப்பழமொழி குறித்து சிந்தனைகள் செய்தது உண்டு.
பொது விளக்கம்.

1. ஆடம்பரமாக வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. துரோகம் செய்யும் உடன் பிறப்புக்கள்
5. பிடிவாத குணம் கொண்ட பிள்ளைகள்
தனி விளக்கம்
உடலில் செயல்கள் அனைத்தும் உயிருடனும் ஆன்மாவுடனும் ஒன்றி ஐந்து தொழில்கள் செய்யும். (காணல், கேட்டல், முகர்தல், ருசித்தல், அறிதல்). இறைவன் பஞ்ச வடிவினன். (ஈசான்யம், தத்புருஷம், அகோரம், வாமதேயம், சத்யோஜாதம்).
பெறுதல் என்பது நிகழ்த்தப்பட வேண்டுமாயின் ஒரு தருபவரும், ஒரு பெறுபவரும் இருக்கப்படவேண்டும். இரண்டுக்கும் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் இருக்க வேண்டும்.
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே
என்ற நீத்தல் விண்ணப்ப திருவாசக வரிகள் நினைவு கூறத் தக்கவை.
எனவே தரும் நிலையில் இருக்கும் இறைவன், வினைகளின் காரணமாக அகங்காரமாக மாயைக்கு உட்பட்டு அரசனாக இருப்பவனை அந்த நிலையில் இருந்து விலக்கி இயம்பு நிலைக்கு திரும்பச் செய்வான்.

ஐந்தொழில் புரியக்கூடிய இறைவனால் அரச கோலம் விலகுதல் என்பது மாயை விலகுதலை குறிக்கும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மௌனச் சொற்கள்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நிலம்





விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
‘மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்‘ என்கிறேன்.
‘என்னைக்கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறது‘ காளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீ‘ என்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.
புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.
ஆசிரியர்
பிரமாணம் – வடசொல், அளவை – தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதா– உயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம் – உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.
புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.
தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.
மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்

எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇடைச்சுரம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇடைச்சுரம்
•மூலவர் – மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி, சதுரபீட ஆவுடையார்
•பார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்
•அகழி அமைப்புடைய கருவறை
•சிவஸ்தல யாத்திரையின் போது  நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் மிகவும் களைப்படைந்த திருஞானசம்பந்தருக்கு இறைவன் இடையன் வடிவில் வந்து தயிர் தந்த ஸ்தலம்

சிவன் மறைந்த குளக்கரை காட்சிகுளம்









தலம்
திருஇடைச்சுரம்
பிற பெயர்கள்
திருவடிசூலம் 
இறைவன்
ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
இறைவி
கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
மதுரா தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவடிசூலம்
வழி செம்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603108
044 – 27420485, 09444523890
வழிபட்டவர்கள்
அம்பாள் ,கௌதமர், பிருங்கி முனி ,சனற்குமாரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாடு
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   27  வது தலம்.
இடைச்சுரநாதர்
 
 
 
இமயமடக்கொடி
 
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       8       
பாடல்
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்;
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி,
வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி,
தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?
பொருள்
தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், சடைமுடியில் பிறை மதியைச் சூடியவரும், இறந்தவர்களை எரித்து அந்த சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசியவரும், பல்வேறு விதமான புராண நிகழ்வுக்குக் காரணமானவரும், புராண நிகழ்வின் காரணமாக பலப்பல வேடம் வேடம் ஏற்று காட்சி தருபவரும், சந்தனம், அகில் போன்ற வாசனை மிக்க மரங்களின் வாசனைகளை வாங்கி அவற்றின் மணத்தினை ஏற்று மழையாக பொழிய வைத்து அதன் காரணத்தால் உருண்டு வரும் பெரிய மணிகளையும் (ஸ்படிகம்) போன்ற பளிங்குகளையும் வெள்ளமென அடித்து வரும் அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் உறையும் பெருமானது இயல்பு யாதோ?
கருத்து
வீந்தவர் – இறந்தவர்.
சாந்தம் – சந்தனம்.
பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       9       
பாடல்
பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
பொருள்
பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சையினை தனது ஒரு கையினால் ஏற்பவரும், பலவிதமாக புகழ்ச்சிகள் அல்லது இகழ்ச்சிகள் இல்லாதவரும்(இருமைகள் அற்றவர் எனும் பொருள்) ஏற்பவரும், நீண்ட முடிகளையிம் ஒளி பொருந்திய மகுடங்களையும் தரித்த பத்து தலை இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமை உடையவரும், மலையில் விழும் ஆர்ப்பரிக்கும் அருவிகள் கொண்டதுமான இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?
கருத்து
பல இலம் இடு பலி – பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சை.
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.)

Loading

சமூக ஊடகங்கள்

புனைவுகளின் அரிதாரங்கள்


ஆதியின் நாள் ஒன்றில்

பிறப்பொன்று நிகழ்ந்தது உயிருக்கு.
நிர்வாணத்தின் தன்மை அறியாது
தினமும் வீதியினில் விளையாடிது அக்குழந்தை.
எவரும் அறியா இரவுப் பொழுதில்
வீதியினை நனைத்தது மழையொன்று.
நிகழ்வறியாது விளையாட்டினை
தொடர்ந்தது அக்குழந்தை.
தொலைவு செல்லும் வாகனமொன்று
வீதி வழி சேற்றை
வாரி இறைத்துச் சென்றது அக் குழந்தைமேல்.
பெருங்கோபமுடன் மழலையில் கோபச்
சொற்களை வீசியது.
பின் தொடரும் வாகனங்களும்
தொடர்ந்தன அந் நிகழ்வை.
பிறிதொரு நாளில்
சொற்கள் அற்று இருந்தது அக்குழந்தை

உடலெங்கும் சேற்றின் படிமங்களை வாங்கியபடி.

புகைப்படம் : சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

படைப்புகள் – அகம் புறம் – ஒரு சிறு பார்வை

(எவரையும் முன்வைத்து எழுதப்படவில்லை)
 
அகம்
 
·   நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
·   நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
·   சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
·   முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
·   ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
·   எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.
 
புறம்
 
·   படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
·   தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும்.  எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்பு சார்.
·   இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 1000 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
·   கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
·   இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே – இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாக – அழகான் – அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
·   ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
·   லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
·   புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?
TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.
 
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 1 – ஹிங்குலாஜ் மாதா

மகாரம் – சக்திச் சுடர் – வாலை சூட்சம்
ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்
தாம்ப்பா மகார மென்ற வாலை தன்னை
தாரணியில் ஆர றிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவகெங்கை யான்
கன்னி மனோன் மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகின்றோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும் காரமாமே  
 
அகத்தியர் அந்தரங்க தீஷா விதி
சிவயோகம் போன்ற கடுமையான யோகமுறை மார்கங்கள் செய்யும் போது விலங்குகள் மற்றும் மனிதர்களால் தொல்லைகள் ஏற்பட வாய்புண்டு. இதற்காக சித்தர்கள் நெற்றியில் வசிய திலகம் அணிவார்கள். அப்படிப்பட்ட சிவயோகம் செய்ய அகார விளக்கமும் உகார விளக்கமும் சொன்னேன். மகாரம் என்ற வாலையை இந்த பூமியில் யார் அறிவார். (சிவயோக முறைக்கு விளக்கம் உண்டு, வாலை முறைக்கு விளக்கம் இல்லை என்பது மறைபொருள் – எனவே எளிதில் அறியப்பட முடியாதது. குருமுகமாகத் தான் அறிய வேண்டும் என்பதும் மற்றொரு பொருள்). அமுத தாரணை அறிய மகார மென்ற வாலையை அறிய வேண்டும். அவ்வாறு அறிய நீர் வேண்டும். அதுவே சிவ கெங்கைத் தீர்த்தம். இதுவே கன்னி மனோன்மணித் தாயாரின் நாதமென்றும், செந்தேன் என்றும், நாதாந்த நாதமென்றும் நாம் உரைக்கின்றோம்.- 
ஹிங்குலாஜ் மாதா
புகைப்படம் : தினமணி

எண்
குறிப்பு
விளக்கம்
1
தேவியின் பெயர்
ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்ஷ்மி / கோடரீ
2
உடல் பகுதி
ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி
3
பைரவர்
பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர்
4
இருப்பிடம்
பாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா  அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை – ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
5
வழித்தடம்
பாகிஸ்தான் – கராச்சி –  குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீ – ஜீரோ பாய்ண்ட்-மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன்- பௌஜி கேம்ப் (fauji camp) – அஸப்புரா சரை (asha pura sarai)
6
வடிவம்
புராணத் தொடர்பு
·   ஹிங்குலி –  முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு (அல்லது) செந்தூரம்
·   ராமன்,சீதை மற்றும்ம் இலக்குவன் ஆகியோர்கள் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்த தலம்
 
புராணம் – 1
 
தற்போதைய சிந்துப் பகுதியை ரத்னசேன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் பரசுராமர் காலத்தைத் சார்ந்தவன். அவனுக்கு ஐந்து மனைவிகள்  அவர்களின் பெயர்கள் சந்திரமுகி, பத்மினி, பத்மா, சுகுமாரி மற்றும் குசாவதி என்பனவாகும். அவர்களின் மகன்கள் முறையே ஜெய்சேன், பிந்துமான், விஷால், சந்திரசால் மற்றும் பரத் ஆகியோராவர். பரசுராமர் இம்மன்னனின் சமகாலத்தவர். எனவே பரசுராமரின் சபதம் (உலகின் அனைத்து சத்திரியர்களையும் அழிப்பேன்) முடிக்கும் காரணமாக இங்கு அவர் வருவது குறித்து அனைவரும் கவலை உற்றனர்.
 
அதனால் சரஸ்வதி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்திருந்த ததீசி முனிவரிடம் இவர்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர்.ரிஷிகளின் ஆஸ்ரம எல்லைக்குள் போரிடக் கூடாதென்று விதியிருந்ததால் பரசுராமர் அங்கு செல்லவில்லை
 
மன்னன் ஆஸ்ரம எல்லை அறியாது வெளியே சென்றுவிட பரசுராமர் அவனைக் கொன்றார். அவனது மனைவிகள் மன்னனுடன் உடன்கட்டை ஏறினார்கள். ததீசி முனிவர் சேய்களை பாதுகாத்து, அந்த ஐவருக்கும் பிராமணர் போல் வேடமிட்டு வேதங்கள் மந்திரங்கள் முதலிய பல பயிற்சிகளை அளித்திருந்தார். அதனால் பரசுராமர் அவர்களை அடையாளம் காணாது கொல்லாமம் விட்டுச் சென்றார்.
 
ததீசி முனிவர் அனைவருக்கும் அவர்கள் பாதுகாப்பிற்காக ஹிங்குலா தேவி மந்திரத்தை உபதேசித்தார்.
 
தன் தம்பிகளுடன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற ஜெய்சேன் ஹிங்குலா தேவி மந்திரத்தை பாராயணம் செய்து தேவியின் அனுக்ரகம் பெற்று ஆட்சி செய்தான். இதனால் அவனை அடையாளம் கண்ட பரசுராமர் அவனை அழிக்க எண்ணி விரைந்தார். ஹிங்குலா தேவி ஜெய்சேன் பற்றி ‘நல்லுள்ளம் படைத்தவனென்றும் அவன் தன் பக்தனென்றும்‘ கூறி பரசுராமரைத் தடுத்தாள். அதனால் பரசுராமர் கோபம் தணிந்து தேவியை வணங்கித் திரும்பிச் சென்றார். அதனால் ஜெய்சேன் ‘ப்ரம்மகுல க்ஷத்ரியன்‘ ஆனான். ஹிங்குலா தேவி ப்ரம்மகுல க்ஷத்ரியர்களின் குலதெய்வமானாள்
 
புராணம் – 2
 
முன்னொரு காலத்தில் கோயில் பகுதியில் ஹிங்கோலி என்ற ஒரு பிரிவினரை  விச்சதர் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஹிங்குல் மற்றும் சுந்தரன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

இளவரசன் சுந்தரன் அண்டை நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் பலரைக் கொன்று பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்தால் அப்பகுதி மக்கள் சிவனிடம் தங்கள் குறைகளை முறையிட்டதால் சிவன் விநாயகனை அனுப்பி சுந்தரனை சம்ஹாரம் செய்ய வைத்தார்.
 
ஹிங்குல் தன் சகோதரன் இறப்பிற்கு பழிவாங்க நினைத்து பல வருடங்கள் தவம் செய்து மூவுலகத்திலும் உள்ள எந்த உயிர்களாலும் தனக்கு மரணம் நிகழக் கூடாதென்றும் சூரிய ஒளி புக இயலாத இடத்தில்தான் தன் உயிர் போக வேண்டுமென்றும் வரம் பெற்றான். pin அனைவரையும் கொடுமைப்படுத்தி பெண்களின் கற்பையும் சூறையாடினான். அதனால் ஹிங்கோலி மக்கள் பவானி மாதாவின் மீது பக்தி செலுத்தி, வழிபட்டு, அரசனின் தவறான எண்ணத்திலிருந்து தங்களைக் காக்க தேவியிடம் உதவி கோரிப் ப்ரார்த்தித்தனர்.
 
ஒரு நாள் தேவியானவள் அவனை காட்டிற்கு அழைத்து வந்து தோன்றி, மறைந்து, மீண்டும் தன் எட்டுக் கரங்களிலும் வாள், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி சிவந்த கோபமான கண்களுடன் இருள் சூழ்ந்திருந்த தோன்றிளாள்.
 
தனது இறுதி கணம் அறிந்து தேவியிடம் மன்னிப்பு வேண்டி பின் ஒரு, சிலை அமைத்து தன் பெயரிலே வழங்க வேண்டும் என்றும், யார் இவ்விடத்தில் தேவியை உண்மையான பக்தியுடன் வணங்குகிறார்களோ அவருக்கு மீண்டும் பிறவாத வரமருள வேண்டுமெனவும் , மனந்திருந்தி நல்லெண்ணத்துடன் இங்கு வருவோர் நல்லவரோ கெட்டவரோ நீ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டினான்.அவனை அழித்த அன்னை அவ்விடத்திலேயே என்றும் நீங்காது அமர்ந்தாள்.
 
புராணம் – 3
 
கிராமம் ஒன்றில் மூன்று சகோதரர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தனர். ஒருவன் துணி தைப்பவன். ஒருவன் போர்வீரன்.  மற்றொருவன் பொற்கொல்லன்  (சோனி ஸொனி) இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்னையை பூஜித்து அவளின் ஆசி பெற்று தம் வேலையைச் செய்து அவரவர் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.
 
போர் வீரனால் மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்ப ‘யாருக்கு என் கையிலுள்ள குங்குமத்தை முதலில் வைக்கிறேனோ அவனே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன்’ என்று சொன்னாள்.
 மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் தேவி தோன்றினாள்.
 
துணி தைப்பவன் கைகால் அலம்பச் சென்றான். பொற்கொல்லன் பூப்பறிக்கச் சென்றான். தேவி போர்வீரனை நோக்கி வந்து குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தாள். பின் பொற்கொல்லனுக்கும், துணி தைப்பவனுக்கும் குங்குமம் வைத்தாள்.

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

உறு பொருள்


என்னை முழுவதுமாய் அறிந்தாலும்
விளையாட்டாய் ஆரம்பிக்கின்றன வார்த்தைகள்
சொல் ஒன்றில் விஷம் ஒன்றை ஏற்றி
இதயத்தில் நுழைக்கிறாய்.
கடக்கும் காலமொன்று
கட்டளை இடப்பெற்று கட்டப்படுகிறது.
உனக்கான நாள் ஒன்றில்
மீன்களால் உண்ணப்பட்டு
காத்திருக்கும் எச்சங்களை
கைகளில் எடுத்துக் கொள்.
தேவைகள் அற்று கடலால் வீசி எறியப்பட்ட
பொருள்களில் எனக்கான நினைகளும் இருக்கலாம்.
இரண்டும் இணையும் தருணங்களில்
உனக்கான கண்ணீரில்

முழுமை அற்ற மரணத்தில் முழுமை அடைவேன்.

* புகைப்படம் :  Karthik Pasupathy* உறு பொருள் – தியானிப்பவர்க்கு வந்து உறுவதாகிய பரம்பொருள். – திருமந்திரம் – 4ம் தந்திரம். 952 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகாளத்தி

•மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. கங்கைநீர் மட்டும் படுமாறு அமைப்பு
•மிகவும் உயரமான சிவலிங்கத் திருமேனி. அடிப்பாகம் –  சிலந்தி வடிவம், மத்தியில் யானையின் இருதந்தங்கள், வலப்பக்கம் கண்ணப்பர் கண் அப்பிய வடு,  மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி அமைப்பு. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது கரம் தீண்டாமல் இருக்க இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட தங்கக் கவசம். அகழி அமைப்புடைய  கருவறை  
•அம்பாள் – ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்த மேரு ‘. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் ‘கேது ‘ உருவம்.
•அகத்தியர் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்ற தலம் – பாதாள விநாயகர் சந்நிதி
•பஞ்சபூத தலங்களுள்  – வாயுத் தலம் ஆதலால் மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு
•சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி
•நக்கீரர் இங்கு தங்கி பொன்முகலி  நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றத் தலம்
•ராகு, கேது க்ஷேத்ரம்
•வேடனான (திண்ணன்) கண்ணப்பருக்கு அருள் காட்சி கிடைத்தத் தலம்
•சிலந்தி – பாம்பு – யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்
•சண்டேசுவரர் சந்நிதி – மூலவர் பாணம் (முகலாயர் படையெடுப்பின்போது மூல விக்ரகங்களையும்,செல்வத்தையும் காப்பாற்றுவதன் பொருட்டு அமைக்கப்பட்டது)
•கோயில் அமைப்பு –  அப்பிரதக்ஷண வலமுறை(வலமிருந்து இடம்)
•இரு கொடி மரங்கள் –  ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரம்
•சர்ப்ப தோஷம் நீங்கும் தலம்
•ஸ்படிகலிங்கம் – ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது
•‘இரண்டு கால் மண்டபம் ‘  – 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாக
•சொக்கப்பனை கொளுத்தி, எரிந்தவற்றை அரைத்து  (ரக்ஷை) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடும் வழக்கம்
•பிரதான கோபுரம் ‘தக்ஷிண கோபுரம்’
•சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.
•அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். 
•சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
•நதி-நிதி-பர்வதம். நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலி ஆறு, நிதி – அழியாச் செல்வமான இறைவி, இறைவன், பர்வதம் – கைலாசகிரி.
•நம் ஆறு ஆதாரங்களில்  விசுத்தி(இதயம்) − திருகாளத்தி என்று பரஞ்சோதி முனிவரால் குறிப்பிடப்படும் இடம்
 
தலம்
சீகாளாத்தி, திருகாளாத்தி, காளஹஸ்தி
பிற பெயர்கள்
தட்சிண (தென்) கயிலாயம், கைலாசகிரி, கண்ணப்பர் மலை, அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம்
இறைவன்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்
இறைவி
ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
தல விருட்சம்
மகிழம்
தீர்த்தம்
ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.
விழாக்கள்
மாவட்டம்
சித்தூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
காளஹஸ்தி – அஞ்சல் – 517 644
சித்தூர் மாவட்டம் – ஆந்திர மாநிலம்.
வழிபட்டவர்கள்
பாம்பு, யானை, சிவகோசரியார், கண்ணப்பர் ,கிருஷ்ணதேவராயர், சிலந்தி,  அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், அர்ஜுனன், வியாசர்,முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி,
பாடியவர்கள்
வீரைநகர் ஆனந்தக் கூத்தர் – திருக்காளத்திப் புராணம்; கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம், திருஞான சம்மந்தர் – 2 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா – கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   19 வது தலம்.
ஞானப் பூங்கோதை உடனாகிய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருநாவுக்கரசர்    
திருமுறை               6     
பதிக எண்               08   
திருமுறை எண்          7    
பாடல்
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்              
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்   
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்     
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்     
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொருள்
கரிய நிறமுடைய கண்டத்தை உடையவனாகவும், எனது விழிகளுக்குள் இருப்பவனாகவும், (அடியவர்களுக்காக அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு) வரையறைப்பட்டவனாக இருப்பவனாகவும், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூக்களை சூடியவனாக இருப்பவனாகவும், ஒளி வீச்சுடைய பவள வண்ணனாக இருப்பவனாகவும், ஏகம்பனாக இருப்பவனாகவும், எட்டு திசைகளையும் தன் குணமாக கொண்டவனாக இருப்பவனாகவும், முப்புரங்களையும் தீயினால் எரித்து அவ்வண்ணம் எரித்த பின்னரும் அதில் கூத்து நிகழ்த்துபவனாக இருப்பவனாகவும், எனது தீவினைகளை அழித்து என் சிந்தனையின் இருப்பவனாகவும், யானையின் தோல் உரித்து அதை தனது ஆடையாக அணிந்தவனாக இருப்பவனாகவும், காபால கூத்து ஆடுபவனாக இருப்பவனாகவும் இருக்கும் காளத்தியான் என் கண் உள்ளான்.
கருத்து
 
·         கரி உருவு-கரிபோன்ற நிறம்; கரிந்த உருவம்
·         ‘எம் கண் உளான்’ – எம்மைப் போன்ற அடியவர் கண்ணில் உள்ளான்
·         கண்டன்-வரையறைப்பட்டவன்
·         எரி பவளவண்ணன்-நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன்
·         ‘குணம்’ – முற்றும் உணர்தல். இயக்குதலும் தானே எனப் பொருள் பெறப்படும்.
·         தீர்த்திடும்’  –  எச்சம்,  தீர்த்திடுவான்
பாடியவர்            சுந்தரர்        
திருமுறை           7      
பதிக எண்           26        
திருமுறை எண்      8          
பாடல்
நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.
பொருள்
திருநீறு அணிந்த திருமேனியை உடையவனே, தூயவனே, மிகவும் உயர்ந்தவனே, முதன்மையானவனே, தசை நீங்கிஎலும்பு மாத்திரமாகிய தலை பிச்சை பாத்திரமாக ஏற்று திரிபவனே,எட்டு வகையான குணங்கள் கொண்டவனே அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆகவே நீ எனக்கு அருள் செய்தல் வேண்டும்
கருத்து
கொழுந்து – உச்சிக்கண் நிற்பதாகலின்  உயர்ந்த பொருளை –  கொழுந்து  உவமம்
என் குணக் கடலே  – எட்டு வகையான குணங்களுக்கு உரியவன், சிவன்
Reference
·         ‘அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ‘ எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
·         ‘கயிலை பாதி காளத்தி பாதி ‘ என்று நக்கீரரால்  பாடப்பட்டபெருமை உடைய தலம்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Loading

சமூக ஊடகங்கள்

கூடு அடைதல்

தனித்து பறக்கும் பறவை ஒன்று
கானகத்தின் இருளில்
தன் குரலில் ஒலினை மீட்டு எழுப்பி
தன்னை விட்டுச் சென்றது.

புகைப்படம் : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!