மௌனச் சொற்கள்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நிலம்

விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்என்கிறேன்.
என்னைக்கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறதுகாளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீஎன்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.
புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

சமூக ஊடகங்கள்

மேலாம் எழுத்து

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு

காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும்  தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும்  வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும்  சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
  

* மேலாம் எழுத்துபரநாத ஒலிதிருமந்திரம் – 1212
புகைப்படம் :  Virtualcitizen India

சமூக ஊடகங்கள்

வியோமம்

கைகளில் இருக்கும் குழந்தை ஒன்று
விழி உயர்த்தி ஆகாயம் காட்டுகிறது.
ஆகாயத்தின் கூறுகள்
என்னில் பிரதிபலிக்கின்றன
காற்று மண்டலம் தாண்டிய
அது பேசத் துவங்குகிறது.
ஒலிகளின்மூலப் பிரதி நானே,
ஒளிகளும்என்னுள் அடங்கும்என்கிறது.
வார்தைகள் மௌனத்தில் உறைகின்றன.
என்னில்கரையாதவை எவையும் இல்லைஎன்கிறது
‘நானே முதல் படைப்பு.
எல்லை கடந்த பொருள்’ என்றும் கூறுகிறது
உன் உலகம் என் உலகம்
உன் படைப்பு என் படைப்புஎன்கிறது.
‘எனில் எப்பொழுது உன் முழுமையை உணர முடியும்’ என்கிறேன்
‘ஓடு உடைத்தால் நீயே நான்’ என்கிறது.

தொடர்கிறது சங்க நாதம்.

வியோமம் – ஆகாயம், திருமந்திரம் – 1152

புகைப்படம் : Gayu

சமூக ஊடகங்கள்

பரப்பினன்

பஞ்ச பூத கவிதை வரிசையில்காற்று


கனத்த மௌனம் கொண்ட

நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
மற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
‘யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது’ என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்

கலந்திருக்கிறது பிண வாடைகள்.

பரப்பினன்பரப்பினள் என்பதன் ஆண்பால்ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் – 1070

புகைப்படம்இணையம்

சமூக ஊடகங்கள்

முகத்துவாரம்


பஞ்ச பூத கவிதை வரிசையில் – நீர்

வழிந்தோடும் ஆற்றில்
மூழ்குதலும் எழுதலும் முதல் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
காற்றுக் குமிழ்கள் பின் தொடர்ந்து பேசத் துவங்குகின்றன.
நாங்கள் உன்னைச் சார்ந்தவர்கள்
உன் நினைவுகள் என்கின்றன.
‘யவன பருவத்தில் நீ விளையாடிய
விளையாட்டுகள்’ என்று கூறி
உடைகிறது ஒரு குமிழ்
‘உனக்கான பள்ளி நாட்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘கொண்ட காதல் நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘நண்டின் கால் உடைத்து
நறுமணம் கொண்டு உண்ட நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘பெற்ற பேரும் அதன் பொருட்டான பெரும் துயரமும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
மூழ்குதலும் எழுதலும் இரண்டாம் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
பணிவில் பெற்ற வெற்றிகளும்,
பணிந்து பெற்ற வெற்றிகளும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘தேவைகளின் பொருட்டு நீ கொண்ட வேஷங்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘நிறம் மாறிய குடும்ப அமைப்புகளே நான்’
என்று கூறி உடைகிறது பிறிதொரு குமிழ்.
‘உருண்டோடி உடையும் குமிழ்கள் எனக்கானவை எனில்
எது நான்’ என்கிறேன்.
சொற்கள் அழிந்து சூன்யம் தொடங்குகையில்
மூழ்குதல் மூன்றாம் முறை நிகழ்கிறது

பின் தொடர்கிறது பிரணவ ஒலி

*முகத்துவாரம் – ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் :  SL Kumar

சமூக ஊடகங்கள்

நித்ய யாசகன்

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நிலம்

ஒரு விடியலில்
பாதையினில் தனித்த பயணம் தொடர்கிறது.
பிரதிபலிப்பில் நிழல் விழுந்த நிலம்
என்னைத் தெரிகிறதா
எனப் பேசத் தொடங்குகிறது.
ஆமாம்நான் தான் நீ‘ என்கிறது.
வினாக்கள் விழி அசைவுகளை நிறுத்தி வைக்கின்றன..
முன்னொரு தினத்தில்
நீ எருவாக இருந்தாய்,
பின் விதையானாய்,
பின் மரம் ஆனானாய்,
பூவானாய்காயானாய்கனியானாய்,
பின் மாண்டு எருவானாய்’ என்கிறது.
படைப்பின் நோக்கம் குறித்து வினவுகிறேன்.
படைப்புகள் படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்
எனும் பதில் வருகிறது.
படைப்புகளின் நேர்த்தியும், நேர்த்தியின்மை குறித்தும்
கேள்விகள் எழுகின்றன.
காலங்களுக்கு கட்டுப்பட்டது தானே
அனைத்து பிரபஞ்சங்களும் அதன் உட்பொருள்களும்
என்றாய் பதில் வருகிறது.
சுழற்சியின் காலம் பற்றி வினவுகிறேன்.
நீயும் நானும் ஒன்று எனில்
காலம் குறித்து என்ன சொல்லமுடியும்‘ என்கிறது.
முன்னே தவழ்ந்து செல்லும் குழந்தை ஒன்று
தன் கைகளால் நிலம் கீறி எழுதிச் செல்கிறது
ஓம் சிவோகம்‘.


புகைப்படம் : இணைய தளம்

சமூக ஊடகங்கள்