சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –
•இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
•இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
•வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
•சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
•அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
•அச்சுமுறி விநாயகர்”  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
•பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
•திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
•சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
•சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்
தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.
ஆட்சீஸ்வரர்
ஆட்சீஸ்வரர்
 
இளங்கிளி அம்மை
 
இளங்கிளி அம்மை
புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         
பாடல்
 
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்
இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  
பாடல்
நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
பொருள்
அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.
கருத்து
 
·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.
·         நோற்றலார் – தவஞ்செய்யாதவர். வேட்டலார் – யாகஞ் செய்யாதவர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 2

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – செயற்கையாக உருவாக்கப்படவை.
 

வாழ்வின்அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட)  பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.

தேசத்தில்சில நிறுவனங்கள் ஏமாற்றம் செய்யும். தற்பொழுது பெரும்பாலான ஒன்றாக கூடி ஏமாற்றும் வேலையை செய்கின்றன. அதன் பொருட்டே accelerated depreciation.
<< 
Accelerated depreciation is a depreciation method whereby an asset loses book value at a faster rate than the traditional straight-line method. Generally, this method allows greater deductions in the earlier years of an asset and is used to minimize taxable income.
>> 
ஒரு நிறுவனம் ஏன் இதை மேற்கொள்கிறது?
இதன் மூலம் (உண்மை நிலை தவிர்த்து) நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறது.
மேலும் இது வரிகளையும்  வருமானங்களையும் கருத்தில் கொண்டு இவ்வழி பாதுகாப்பு செய்கிறது..
இதம் மூலம் அதிக தேய்மான செலவுகள், குறைவான நிகர லாபம் தருகின்றன. உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு கணக்கு காட்டி தேய்மானம் குறிப்பிடபட வேண்டிய நிறுவனங்கள் 10 வருடத்தில் அதை கணக்கில் காட்டி விடுகின்றன.

Subsequently, the government put out a draft roadmap that sought to rationalize exemptions such as those given to aid scientific expenditure, capital expenditure and the benefits of accelerated depreciation—mainly benefitting sectors like infrastructure and information technology and those who undertake research and development activities in India. [1]

2013 – 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 – 2015ம் ஆண்டில் 62,399 கோடியாகஉயர்ந்துள்ளது. [2]

கடந்த 5 வருட காலங்களில்  மிகப் பெரிய நிகர லாபம் ஈட்டிய அனைத்து நிறுவங்களும் தங்களது வரவு செலவு கணக்கில் மிகப் பெரிய நஷ்டம் சந்தித்ததாகவே குறிப்பிடுகின்றன. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவங்களுக்கும்  இது பொருந்தும்.
அதாவது10 ஆண்டுகளில் பெறவேண்டிய பணம் முழுவதையும் 5 ஆண்டுகளில் சம்பாதித்து 5ம் ஆண்டு முடிவில் தாங்க முடியா நிதி நிலைமை காரணமாக மூடி விடுவதாக கூறுகின்றன நிறுவனங்கள். (அதாவது மூடிய பின் வந்த லாபத்தை கொண்டு வேறு நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். )

குறிப்புரை இணையங்கள்

 
புகைப்படம் : Karthik Pasupathi
 

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரியங்கரீ

ப்ரியங்கரீ_Pawan
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நீர்
யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
‘யார் நீ‘ என்கிறேன்.
‘பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்‘ அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.
 
புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 1

உமாமகேஸ்வரஸம்வாதம்
(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  
சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :  அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?
சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

வினை ஒறுத்தல்

ஊன் எங்கும் ஆரத் தழுவி இருக்கின்றன
தழும்புகள்
கண்ணுக்கு தெரியா காலமொன்றில்
ஒன்று தான் இருந்தது.
காலமாற்றத்தில் பெருகிப் போனது.
ஆடை ஒன்றை அணிகிறேன்
ஆடைகள் பல்கி பெருகுகின்றன.
பிறிதொரு நாளில்
காயங்கள்

முற்றுப் பெருகின்றன
நான் நிர்வாணமாகிறேன்.

வினை ஒறுத்தல் –  வினை அனைத்தையும் அழித்தல்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்

தகவல் தொழில் நுட்பம் – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்
 
தகவல் தொழில் நுட்பம் அதன் தனித் தன்மையை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே.
பொருளாதார போட்டிகள்
உலகெங்கிலும் பொருளாதார முரண்பாடுகளாலும், உலகமயமாக்கல் காரணமாகவும் வளர்ச்சி பெற்றது தகவல் நுட்பத் துறை. மேல் மட்டத்தில் இருக்கும் தலைவர்களாலும், போட்டி காரணமாகவும்   வியாபார நெறிமுறைகள் அனைத்தும் களைந்து போட்டி ஆரம்பம் ஆகிறது.
உதாரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன்    வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கலாம். அதில் 10% அதிகரித்து ஒவ்வொரு வருடமும் வியாபாரம் நடக்கும்.
புதியதாக சந்தையில் நுழையும் ஒரு நிறுவனம் வியாபாரம் பெருகுவதற்காக முன் குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிக குறைவான விலை குறிப்பிட்டு வியாபாரத்தில் பங்கெடுக்கும்.
இதில் இரண்டு பொருளாதார பாதகங்கள்
·         முதல் நிறுவனம் தனது 5 வருட வியாபார வாழ்வினை இழந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதில் வேலை பார்ப்பவர்கள்,
·         இரண்டாவதாக புதியதாக சந்தையில் நுழைந்த நிறுவனம் இதில் ஏற்படும் குறைக்கப்பட்ட பண பரிமாற்ற அளவிற்காக இருக்கும் தனது ஆட்களிடம் மிக அதிக வேலை பளுவினை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு கீழ் கணக்கினை எடுத்துக் கொள்வோம்.
முதல் நிறுவனம் வியாபாரம்
முதல் வருடம்          110000
இரண்டாம் வருடம்       121000
மூன்றாம் வருடம்        133100
நான்காம் வருடம்         146410
ஐந்தாம் வருடம்         161051
ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது நிறுவனம் தனது வியாபாரம் ஆரம்பிப்பதாக கொள்வோம்.
‘சார், நீங்க நம்ம கம்பெனிக்கு 100000 குடுங்க, உடனே வியாபார ஒப்பந்தம் போட்டு விடலாம்’ என்பார்கள்.
இவ்வாறான பொருளாதார போட்டிகள் இரு நிறுவனங்களில் இருந்தும் ஆட்களை குறைத்து பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன.
மற்ற துறைகளில் இது இல்லையா என்பவர்களுக்கு – தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பொருளாதார போட்டிகள் கைப்புண் கண்ணாடியாக இருக்கின்றன.
தொடரும்…
புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும்

( நீண்ட கால விருப்பம் இது. இது குறித்து எழுத நினைக்கும் போதெல்லாம் இதன் எல்லை அற்ற விரிவு என்னை மௌனமாக்கி விடும். காரணங்கள் அற்று ஒரு உந்துதலில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனை எழுத எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நீக்க மற நிறைந்திருக்கும் சிவனும், சக்தியும், சிவனுக்கு நிகரா இருப்பினும் என்றும் தன்னை தன்னை வெளிப்படுத்தாது அருள் காட்டும் எனது குருவருளும் துணை செய்யட்டும் )
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்.
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு முறை அனைத்தும் அறிந்த தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். உலகத்தினை நிறைவு செய்யும் பிரளம் போன்ற நிகழ்வு உண்டானது. எனவே சிவனிடத்தில் இருந்து பிரளயாக்கினிக்கு நிகரான ஒளி நிரம்பிய மூன்றாவது கண் உண்டானது.
அந்த ஒளி இமயமலையை எரித்துவிட்டது. இதனால் உமை துயருற்றாள். சிவன் குளிர்ந்த மனத்துடன் மீண்டும் இமயமலையை முன்போல் தோற்றுவித்தார்.
உமை : பகவானே, இது எனக்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது. அக்கினி என்பிதாவான இமயமலையை எரித்து விட்டது, மீண்டும் நீங்கள் பார்த்தவுடன் அது முன்போல் ஆனது. அது எவ்வாறு?
சிவன் : நானே எல்லா உலகங்களுக்கும் முதல்வன் என்றறி. எல்லா உலகங்களும் விஷ்ணுவுக்கு எப்படியோ அப்படியே எனக்கும் உட்பட்டவை. விஷ்ணு படைப்பவர், நான் காப்பவன். சிறுமி ஆகிய நீ இதை அறியாமல் என் கண்களை மூடினாய்.சந்திர சூரியர்கள் இல்லாமையால் உலகம் இருளில் மூழ்கியது. எனவே உலகை காக்க மூன்றாவது கண்ணை தோற்றுவித்தேன்.
(யோக மார்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றாவது நேத்ரம் எத்தனை முக்கியமானது என்று அறிவார்கள். இது குறித்து குருமுகமாக அறிக.)
உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 25/25 கங்காதர மூர்த்தி

·         வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·         பாவங்கள் விலக்கும் மூர்த்தம்
·         பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள சிவனின் வடிவம்
வடிவம்
·         யோகபட்டம்
·         ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலம்
·         விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் கரங்கள் மான், மழு, சின் முத்திரை, கீழ்க் கை வரத முத்திரை
·         வேறு வடிவம் – கங்காதரமூர்த்தி நான்கு கரங்கள் (சதுர்புஜம்), நின்ற நிலையில் (ஸ்தானகநிலை) மூன்று பங்கங்களுடன் (திரிபங்க நிலையில்) முன் வலது கை அபய கர கீழ்நோக்கி, பின் வலது கை அக்கமாலை, பின் இடது கை சடாமுடியின் சடையை பிடித்தவாறு. இடது புறம் கங்கை மண்டியிட்டு வணங்கிய நிலையில் சிவனின் சடை முடியை நோக்கி வருவது போன்ற வடிவம். கந்தஹாரம் வாஸ்த்ரா யக்ஞோபவீதம், கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும்.
வேறு பெயர்கள்
·         கங்கைப் புனலுடையான்
·         கங்கையைப் பெற்றவன்
·         கங்கையைக் கறந்தான்
·         புனலுடையான்
·         கங்கையை அங்கே வாழவைத்த கள்வன்
வடிவம் அமையப் பெற்ற கோயில்கள்
·         காஞ்சி கைலாசநாதர் கோயில்
·         மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்
·         புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில்
·         திருச்சி  உச்சிப் பிள்ளையார் கோயில்
பிற குறிப்புகள்
·         இது யோக மார்கத்தில் இறை வழிப்பாடு செய்வதைக் குறிக்கும். துரியாதீதத்தில் இருந்து அருள் ஆற்றல் பெறுவதை குறிப்பிடுகின்ற வடிவம்.
·         மகாபாரதத்தில் பகீரதனின் கதை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)
 
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

தீப்புகு விட்டில்

பாரம் கடந்த இரவொன்றை
இருவர் கடந்தனர்
அவனுக்கான பயணம் கிழக்கானது
அவளுக்கான பயணம் மேற்கானது.
வரும் காலங்களின் திட்டங்களோடு அவன்;
கடந்த காலங்களின் அசைவுகளோடு அவள்.
குளிர் இடத்தில் வளரும் போன்சாய்
மரங்களின் இலைகளை வருடியபடி அவன்.
மாற்றம் கொண்ட
குளிர் இடத்தில் வளரும் பாம்பூ
செடிகளின் இலைகளை வருடியபடி அவள்.
நாளொன்றின் முடிவில்
பாரம் கடந்த பகலொன்றை
இருவரும் கடந்தனர்.
பின்னொரு பொழுதுகளில்

இருள் தனித்து இருந்தது.

* தீப்புகு விட்டில் – நெருப்பில் புகுந்த விட்டில் பூச்சி  – திருவாசகம் / நீத்தல் விண்ணப்பம்
புகைப்படம் : Jothi Vel Moorthi 

Loading

சமூக ஊடகங்கள்

முக்தி பவன்

நீண்ட நாட்களுக்கு பிறகு
அமைகிறது உனக்கும் எனக்குமான சந்திப்பு.
உன் பாதத்தை தொட்டுச் செல்லும் ஆடைகள்
ரத்தம் சார்ந்த நிறமாய் இருக்கிறது.
சுடர் தரும் விளக்கின் ஒரு புறத்தில் நீயும்
மறு புறத்தில் நானும்.
மெல்லிய பூங்காற்று நம் இருவருக்கும் பொதுவாய்.
‘ஏன் இந்த விலகல்‘ என்கிறேன்.
‘எது விலகல்‘ என்கிறாய்.
‘என்னை உன்னிடத்தில் தர நினைக்கிறேன்‘ என்கிறேன்
‘நீரில் இருந்து நீர் பிரிந்தால் அலை
எதிர்முகமாய் எனில் கடல்‘ என்கிறாய்.
‘நாம் இப்போது கடலாகிவிட்டோம்‘ என்கிறாய்
மயக்கம் தரும் சம்மங்கிப் பூவின் வாசம்
காற்றில் கரைகிறது இருவருக்கும் பொதுவாய்.
பிறகு

காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.

*முக்தி பவன் – காசியில் இருக்கும் ஒரு Lodge ன்  பெயர். தன் விருப்பமுடன் இறக்க விருப்பம் உள்ளவர்கள் 5 நாட்கள் மட்டும் இங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள். 5 நாட்களுக்குப் பிறகு உயிர் இருப்பின் Lodge ஐ விட்டு வெளியேறி விடவேண்டும்.



Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 24/25 பைரவர்

ஸ்ரீ காலபைரவர் – காத்மாண்டு
புகைப்படம் : இணையம்

பெயர்க் காரணம்
பைரவர் என்னும் வட மொழி சொல் பீரு என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டது. இதற்கு அச்சம் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களைக் காப்பவர் என்பது பொருள்.
ப – (பரணம்) – உலக உயிர்களை தோற்றுவித்து  படைப்புத் தொழில் செய்பவர்
ர் – (ரமணம்) – தோன்றிய உயிர்களைக் காப்பவர்
வ – (வமணம்) – வலியுடன் வாழ்ந்து சலித்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கிக் கொள்பவர்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் காலங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அப்படிப்பட்ட காலத்தை இயக்கும் பரம்பொருளே பைரவர் ஆவார்.
பைரவர் சிவபெருமானின் இருபத்து ஐந்து மூர்த்தங்களில் / அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.
சில்ப சாஸ்திரப்படி 64 பைரவர்கள் வகைபடுத்தப்பட்டாலும், 8 பைரவர்கள் திசைக்கு ஒருவராக காவல் புரிகிறார்கள். அசிதாங்க பைரவர்,ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவர்களே 64 திருமேனிகளாக விரிவடைகிறார்கள்.
வேறு பெயர்கள்
சிவபெருமானுடைய பஞ்ச குமாரர்களில் ஒருவரான பைரவருக்கு வைரவர், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன்,கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும்(வடிவங்களுக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் மாறும்) நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்
கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரது அவதார தினமாகும்.
பைரவர் தோற்றம்
தோற்ற வகை : 1
அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவனை வழிபட்டு இருள் என்ற சக்தியைப் பெற்று உலகை இருள் மயமாக்கி கர்வம் கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டு அவனை அழிக்க வேண்டினார்கள். சிவன் தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றினார். எனவே எட்டு சைகளிலும் எட்டு பைரவர்கள் தோன்றினார்கள்.
தோற்ற வகை : 2
ஒரு முறை ப்ரம்மா தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். சிவன் ருத்ரனிடம் ப்ரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்குமாறு கூறினார்.  இதனால் ப்ரமாவின் கர்வம் நீங்கியது. ப்ரம்மாவின் தலையை எடுத்ததால் பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் சிவன் பைரவரை பூலோகத்தில் சென்று யாசகம்(பிச்சை) எடுக்குமாறு கூறினார். இந்த தோஷம் திருவலஞ்சுழியில் அவருக்கு நீங்கியது.
பூசிக்க உகந்த மலர்கள்
தாமரை, செவ்வரளி, அரளி, வில்வம், தும்பைப்பூ, சந்தனம் செண்பகம், செம்பருத்தி, நாகலிங்கப்பூ,சம்மங்கி (மல்லிகை விலக்க வேண்டும்)
பிடித்த உணவுப் பொருட்கள்
சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், செவ்வாழை மற்றும் பல பழவகைகள்
பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
எல்லா நாட்களுமே பைரவரை வழிபட சிறந்த நாள் என்றாலும் சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அம்மாவாசை, பௌர்ணமி(வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம் ,
பைரவர் வழிபாட்டின் பலன்கள்
· ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.
·   திருமணத்தடைகள் நீங்கும்
·   சந்தான பாக்கியம் பெறலாம் (குழந்தை)
·   இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெறலாம்
·   இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிடலாம்.
·   ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
·   எதிரிகள் தொல்லை நீங்கும்
·   கிரங்களின் தோஷங்கள் மற்றும் பிதுர்தோஷம் நீங்கும்
·   வாழ்வில் வளம் பெருகும்
·   பிறவிப்பிணி அகலும்


இது சிறு குறிப்பு மட்டுமே. பைரவர் பற்றி விரிவாக அறிய திருவாடுதுறை மடத்து பதிப்பில் வெளியாகி இருக்கும் ‘மகா பைரவர்’ நூலினை வாசிக்கவும்.

Loading

சமூக ஊடகங்கள்

முகிழ்தல்

ஒரு விதை
விருட்சமாகும் தருணமொன்றில்
எவரும் அறியாமல்

இடம் பெயர்ந்து இருந்தது காற்று.

* முகிழ்தல் – தோன்றுதல்
புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

2038 – குழந்தை மனக் குறைபாடுகளை கண்டறியும் இயந்திரங்கள்

Humanoid robot works in therapy for children with autism
TecO is the name of the humanoid robot that detects neural signals using a headset or a hood, which has electrodes mounted on the child’s head and records this signals; then they are sent to a computer that translates them into information that is interpreted by a psychologist or a neurologist.
 
It detects certain intentions, such as moving an arm, if the kid is sleepy or alert, but doesn’t read thoughts; the expression must be made clear. If the robot registers sadness in the child, it then modifies its mode of action to change that feeling.
 
Emotions are measured through facial expressions, which traditionally are done by observation, but the robot uses cameras that record the number of times that the kid turns to see it. The eye contact between the two is what denotes progress.

              (இவைகள்நடக்கலாம்அல்லதுநடக்காமலும்போகலாம்.)

1.

இந்தாபா, எவ்வூட்லயும் ஒரு கொயந்த இருக்கு. நான் அதுக்கு புருசன்னு பேரு வச்சிருக்கேன். உம் மிசின வச்சி அது வியாதிய சரி செய்ய முடியுமா?

2.

இந்தா பாருமா, நாங்க neural signalsவச்சி problem identification செய்யிரோம். அதுக்காக signal சரியில்ல, call drop ஆச்சுன்னா காச திருப்பி தருவீங்களான்னு கேட்கிறது சரியில்லை.

3.

சார் நம்ம opposite கம்பெனி Sales ஐ எப்படி கொறைக்கிறது. (உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த) இதெல்லாம் ஒருமேட்டராடா, ஒரு இஸ்கூல் பொண்ணு மொபைல் வாங்கி அது எடுத்து இருக்கிற செல்பி போட்டாவ register செய்யணும்னு சொல்லுவோம். ‘Expressions are not clear’ அப்படீன்னு ஆகிடும். அவ்வளவுதான்

4.

யோவ், அறிவு இருக்கா உனக்கு, facial expressions register செய்ய ஆள் அழைச்சிகிட்டு வான்னா, கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆனவன கூட்டிகிட்டு வந்து இருக்கியே. இவனெல்லாம் வச்சி ஒரே ஒரு expression கூட எடுக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?

5.

ஏங்க, நாங்க கேமிரா வச்சி expressions எல்லாம் படம் புடிக்கிறோம். நீங்க Professional photographer ஆக இருக்கலாம். அதுக்காக Front camera எத்தனை MB, rear camera எத்தனை MB Sony’s IMX 214 13MP Exmor RS stacked image sensor இருக்கா, Auto focuses 0.3 seconds ல முடியுமான்னு கேட்கிறது நியாயம் இல்லீங்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமையும் பேரமைதி

யாரும் அறியா தருணமொன்றில்
நீ உனக்கான நடனத்தை துவங்குகிறாய்.
தாய் பசுவைத் தொடரும்
கன்றாக உன்னைத் தொடர்கிறேன்.
நீ வியப்பு காட்டுகிறாய்
நான் வியப்புறுகிறேன்.
நீ கோவம் கொள்கிறாய்
நான் தவிக்கிறேன்.
நீ கருணை செய்கிறாய்
என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
நீ குற்சை செய்கிறாய்.
நான் அழுகிறேன்.
நீ சாந்தம் கொள்கிறாய்
நான் அமைதியாகிறேன்.
நீ சிருங்காரம் காட்டுகிறாய்
நான் வலிமை பெறுகிறேன்.
நீ அச்சம் கொள்ள வைக்கிறாய்.
நான் மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன்.
நீ வீரம் காட்டுகிறாய்.
நான் எதிர்க்கிறேன்.
நீ புன்னைக்கிறாய்.
கணத்தின் தொடக்கத்தில்
‘நான்‘ அழிந்திருந்தேன்.
*குற்சை– இழிவுச்சுவை
நவரசங்கள் முன்வைத்து  – ஒன்பது வகையான பாவங்கள்.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர் ‘உலகத்திற்கு முதல் காரணம் “பிரகிருதி“‘, அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?
ஆசிரியர்:
அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.
மாணவன்:
அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.
மாணவன்:
நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?
ஆசிரியர்:
நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 23/25 ஏகபாதர்

வடிவம்(பொது)
·   உருவத்திருமேனி
·   வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·   ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிக்கும் மூர்த்தம்
·   வலது கை – அபய முத்திரை
·   இடது கை – வரத முத்திரை
·   பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·   ஆடை – புலித்தோல்
·   கழுத்து – மணிமாலை
·   ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும் கங்கை
வேறு பெயர்கள்
·         ஒரு பாதன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         திருக்காளத்தி – மலைப்பாறை புடை சிற்பங்கள்
·         திருவண்ணாமலை கோயில்
·         திருவொற்றியூர்
புகைப்படம் :  ta.wikipedia
(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

வல்வினை நோய்

தந்தையின் தோள் பற்றி இருக்கும்
பெண் குழந்தை ஒன்று
தலை திருப்பி
‘எனக்கு இப் பொம்மை வாங்கி தருவாயா’ என்கிறது.
காரணம் விளக்காமல்
மறுதலித்து
நடக்கத்துவங்குகிறான் தகப்பன்.
சில வினாடிகளுக்குப் பின்
தகப்பன் மனம் மாறலாம் என
பொம்மை விற்பவன் தலை திருப்புகிறான்.
தொலை தூரத்தில் குழந்தையும்
தலை திருப்புகிறது
நிறைவேறா நிமிடங்களுக்காக

காலம் உறைந்திருக்கிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கழுகுன்றம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கழுகுன்றம்
•மூலவர் –  சுயம்புலிங்க மூர்த்தி
•ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக,அதர்வணவேத பாறை உச்சியில்  – சிவபெருமான் கோவில்
•  க்ருத யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், த்ரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், வாப்ர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், கலி யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் ழிபட்டுப் பேறு பெற்றது இத்தலம். இவர்கள் பிரம்மனின் மானச புத்திரர்கள்
•கருவறை கஜப்பிரஷ்ட அமைப்பு
•மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
•கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்
•சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்றத் தலம்
•மாணிக்க வாசகருக்கு அருட்காட்சி கிடைக்கப்பெற்ற தலம்
•சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் காட்சி
•மலைக் கோவில் சுற்றி 12 தீர்த்தங்கள். இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம்,ருத்ர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம்
•பெயர்க்காரணம் – கழுகுகள் வழிபாடு –  கழுகாச்சலம், கோடி ருத்ரர்கள்  வழிபாடு  – உருத்திரக்கோடி, மகாவிஷ்ணு வழிபாடு  – வேதநாராயணபுரி, இந்திரன் வழிபாடு  –  இந்திரபுரி, இறைவன் மலை உச்சி – கொழுந்து வடிவம் – மலைக் கொழுந்து
•சு‌ப்பையா சுவா‌மிக‌ள்(கடையனோடை சுவா‌மி, ‌பி.ஏ. சுவா‌மி, ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி ) முக்தி அடைந்த தலம்
 
தலம்
திருக்கழுகுன்றம்
பிற பெயர்கள்
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
இறைவன்
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
இறைவி
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
தல விருட்சம்
வாழை
தீர்த்தம்
சங்கு தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை – தேர்த்திருவிழா, கார்த்திகை – சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் – லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
வழிபட்டவர்கள்
இந்திரன், மார்க்கண்டேயர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 270  வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28  வது தலம்.
 
மலைக்கோயில் மூலவர் – வேதபுரீஸ்வர்
 
 
 
மலைக்கோயில்  அம்மன் – சொக்க நாயகி
 
 
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்    
திருமுறை               1ம் திருமுறை      
பதிக எண்                103   
திருமுறை எண்     8  
பாடல்
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே.

பொருள்
அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை கயிலை மலையின் கீழ்ப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி,  அவனுக்கு துன்பத்தை விளைவித்தவனும், பிறகு அவனுக்கு வரங்கள் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
கருத்து
நொடிவரை – நொடிப்பொழுது
பாடியவர்           சுந்தரர்       
திருமுறை             7ம் திருமுறை           
பதிக எண்             81       
திருமுறை எண்       8        
 
 
பாடல்
 
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே
பொருள்
 
எண்ணிக்கை அற்ற அடியார்களது மனதில் அவரவர்க்கும் தகுந்தவாறு உறைபவனும், திருமாலும் நான்முகனும்  தினமும் வழிபடும் செய்யும் வண்ணம் இருப்பவனும், மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே
கருத்து
அந்தம் இல்லா அடியார்  – எண்ணிக்கை இல்லா அடியார்
Reference
 
1.வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்
2.தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் – நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – உணவகங்கள்

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
என்னா சார், சாப்பாட்டு டோக்கனோட ஜெலுசில் மருந்து தரீங்க.
எங்க ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டா வயறு சரியில்லாம போகும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. அப்புறம் எப்படி எங்க மெடிக்கல் ஷாப்பை நடத்துறது?
2.
என்னா சார், ரவா தோசையோட பூதக்கண்ணாடி  தரீங்க.
அத வச்சித்தான் நீங்க தோச எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்,
3.
எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க எல்லாம் ஓட்டல் வாசல்ல உக்காந்து இருக்காங்க?
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஹாஸ்பிடலோட ரெப்ரசன்டேட்டிவ். குடுக்குற காசுக்கு தகுந்த மாதிரி சாப்பிட்ட ஒடனே ஆர்யபட்டா ஹாஸ்பிடல் மாதிரி  ஹாஸ்பிடல்ல சேர்ப்போம்.
4.
அடுத்த தடவைல இருந்து கார்த்திகேயன் ஒட்டலுக்கு சாப்பிட போகக்கூடாதுடா?
ஏண்டா?
இல்லடா, ஊசி பின் முனைய கரண்டியா மாத்தி வச்சிருக்காங்க, அதால சாம்பார் ஊத்ராங்க. இன்னும்         கொஞ்சம் வேணும்னா, கைய கழிவிட்டு Rs. 10312.21 க்கு பில் வாங்கிகிட்டு வரச்சொல்றாங்க.
5.
என்னா சார், சாப்பாட்ல உப்பு, ஒரப்பு ஒண்ணுமே இல்ல.

‘சன்யாசத்துக்கு முதல் நிலை எங்களது ஓட்டல்‘ அப்படீன்னு போர்டு எழுதி போட்ருக்கோமே, அத பாக்கலயா நீங்க.

Loading

சமூக ஊடகங்கள்

மெருகேறும் மௌனம்

செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக்க வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!