அமுதமொழி – விளம்பி – பங்குனி – 29 (2019)


பாடல்

வெடிக்கும் பரவை முரசதிர் காமனை வீறழியப்
பொடிக்கு கனல் விழிப்புண்ணியனே புவியோர்கள் நெஞ்சம்
துடிக்கும் பொல்லாத பிசாசுகள் தம்மைத் துரத்திவெட்டி
அடிக்கும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

*கருத்துகாமனை அழித்தவனே, தன்னை பிசாசுகளிடத்தில் இருந்தும் காக்க வேண்டும் என்பது பற்றிய பாடல்.*

பதவுரை

கைகளில் தண்டாயுதம் கொண்டு, புவியினில் வாழ்பவர்கள் நெஞ்சம் துடிக்குமாறு செய்வதும், எப்பொழுதும் தீமை தரத் தக்கதும் ஆன  பொல்லாத பிசாசுகளை துரத்தியும் வெட்டியும் அடித்தும் செய்யக்கூடியவனாய் ஆன காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மிகப் பெரிய கடல்பரப்பு போன்றதும், முரசு அதிர்வடைவது போன்றதும் ஆன காமத்தினை உருவாக்கும் காமனை அவந்து தனிப்பட்டசிறப்பு, அழகு, பொலிவு, பெருமை அனைத்தும் பொடியாகுமாறு கனல் விழி கொண்டு அழித்த புண்ணியனே! எம்மைக் காக்க வேண்டும்.

விளக்க உரை

  • பரவை – பரப்பு; கடல்; உப்பு; ஆடல்; பரவல்; மதில்; பரவிநிற்கும்நீர்; திடல்; சுந்தரர்மனைவி
  • வீறு – தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 27 (2019)


பாடல்

ஆறேறு சடையானை யாயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஇறைவன் வடிவம் விவரித்து அதை வரித்துக் கொண்டதைக் கூறும் பாடல்.

பதவுரை

கங்கை ஆற்றினை சடையில் தாங்கியவனும், ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாகவும், உலர்ந்தும், இறந்து பட்டதுமான மண்டையோட்டில் யாசித்து ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் இருப்பவனும், திருநீறு அணிந்த திருமேனியை உடையவனாகவும், இயல்பில் தூயோனாய் இருப்பவனும், நீண்ட வாலினை உடைய காளையை உடைய பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.

விளக்க உரை

• திருக்கச்சியேகம்பம் எனும் தொண்டை மண்டலத் திருத்தலம்
• பாறு – உலர்தல், வற்றுதல்
•ஆயாயிரம்பே ரம்மானை – எண்ணிக்கை வைத்து கணக்கிட இயலாத அளவு உள்ளவர்களால் வணங்கப்பட்டவன் என்பது ஒரு பொருள். இந்திரன் ஆயிரம் கண் உடையவன். இந்திரனால் வணங்கப்பட்டவன் என்பதும் ஒரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 25 (2019)


பாடல்

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்துதிருக்கருவூரானிலை திருத்தலத்து இறைவனின் வடிவழகை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கருவூரானிலை எனும் திருத்தலத்தில் உறையும் தலைவனும் இறைவனும் ஆனவர் தாமரை போன்ற திருவடிகளை உடையர்; தம்முடைய திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர்; ஆலகால விடம் தாங்கியதால் நீல மணி போன்ற கண்டத்தினை உடையவர்;  ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வரும் கங்கையைத் தாங்கியவர்;  அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை கொண்டவர்.

விளக்க உரை

• திருக்கருவூரானிலை எனும் கொங்கு நாட்டுத் திருத்தலம்
• பங்கயம் – தாமரை
• பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர்
• வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர்
• அம் – அழகு
• ஆடு அரவம் – ஆடுகின்ற பாம்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 24 (2019)


பாடல்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசெல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை என்று கூறும் பாடல்

பதவுரை

தமது நிழல் ஆனது தம் வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டும்,  அறிவிலாதவர்களாகிய வறியவர்கள், தமது செல்வமானது தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். உணரப்படுவதாகிய உயிர், காணப்படுவதாகிய உடம்பு இரண்டும் ஒன்றாய்ப் பிறந்தாலும், உயிரானது உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. அவ்வாறு இருக்க வினைகளுக்கு வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்! ஆகவே நிலை பெறுவது செய்வதாகிய மெய்ப் பொருளைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

விளக்க உரை

• முதல் தந்திரம் – செல்வம் நிலையாமை
• காணொளி – அகக் கண்ணால் காணக்கூடிய ஒளி. குரு முகமாக அறிக.
• ‘கண்ணது காணொளி’ – பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
• ‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே
எனும் அருணகிரிநாதர் கந்தரலங்காரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
• மாடு – செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 23 (2019)


பாடல்

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன்  உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.

விளக்க உரை

• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம்
• கமலத்தோன் – பிரமன்
• உரு ஆர்ந்த – அழகு நிறைந்த
• வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள்
• மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய.
• திருவான் – மேன்மையை உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)


பாடல்

இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே

தாயுமானவர் சுவாமி பாடல்கள்

கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு  கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!

விளக்க உரை

  • நீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 18 (2019)







பாடல்

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅவர் திருவடி சேர்தலை ஈசனாருக்கு நாம் பிறவி எடுத்ததற்கு செய்யும் கைமாறு எனும் பாடல்.

பதவுரை

ஊண் எனப்படுவதாகிய உடலாகிய சதைப்பகுதியை சுவராகச் வைத்து, ஒன்பது துவாரங்களையும் வாயிலாக அமைத்து, வெள்ளி போன்றதும், ஒளி உடையதும் ஆன எலும்புகளைத் தூணாக அமைத்து ரோமங்களை மேலே பரப்பி தாமே படைப்பித்த உடலாகிய குடில் நீங்கும்படி செய்து, தாவுகின்ற மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய்,  கபாலம் ஆகிய மண்டை ஓட்டினை ஏந்திய தலைவராகி, எல்லாத் தத்துவங்ளையும் கடந்து, வானில் நிலை பெற்ற உலகங்களை எல்லாம் கடந்து விரைவாக வீடுபேறு ஆகிய அவரது திருவடியை அடைதலுக்கு  செல்லும் வழியை அமைத்துக் கொடுத்து, தோகைகளைப் விரித்து ஆடும் மயில்கள் உடையதும்,  சோலைகளை உடையதும் ஆன திருக்கழிப்பாலைத் தலத்தில் இருந்து தாமே வலியச் சென்று அருள் செய்கின்றார்; இந்த உடம்பு பெற்றதனால் ஆன பயன் என்னவெனில் அவர் வகுத்து வைத்த வழியிலே செல்வது மட்டுமே அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.

விளக்க உரை

• ஊன் – தசை
• உடுத்தி – வளைத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 17 (2019)

பாடல்

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
   புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
   பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
   கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
   நாட்டியத் தான்குடி நம்பீ

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துநீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)

விளக்க உரை

  • நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)

பாடல்

காலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கி பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி               

தாயுமானவர்

கருத்துசிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்;  பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?

விளக்க உரை

  • மறலியையும், எமனையும்  இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
  • நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
  • பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
  • ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க  சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019)

பாடல்

மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்
வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்
பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதிருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.

பதவுரை

இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான  பிசாசங்கள் ஆகியவைகளை  தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக  தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
  • தாமம் – பூமாலை; கயிறு; வடம்; பரமபதம்; நகரம்; ஊர்; மலை; இடம்; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ளமாதர்இடையணி; முடியுறுப்புஐந்தனுள்ஒன்று
  • தண்டா – தொந்தரை, சண்டை, சிக்கல், கதவையடைத்து இடும் இரும்புத் தடி, தண்டால்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

  • அமர்தல் – விரும்புதல்
  • இடி – மா.
  • கன்னல் – கரும்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)

பாடல்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துநந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.

பதவுரை

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை  நன்றாக ஆற்றியதே ஆகும்.  ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.

விளக்க உரை

  • அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
  • நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
  • நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
  • ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச்  தம் வரலாற்றையே கூறுகின்றார்.
  • சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
  • எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
  • தண் – அமைதி.
  • அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் (  நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 9 (2019)

பாடல்

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துவினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப்  வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.

விளக்க உரை

  • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
  • உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல்
  • வெள்குதல் – வெட்குதல், அஞ்சுதல், கூச்சப்படுதல், மனங்குலைதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)

பாடல்

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல்  சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.

விளக்க உரை

  • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  • கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)

பாடல்

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே

திருநெறி 7 – உமாபதி சிவம்

கருத்துமனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள்,  பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள்,  ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல்  அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில்  கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.

விளக்க உரை

  • கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
  • கேவலஞானம் – முக்கால் அறிவு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 3 (2019)

பாடல்

பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துசிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.

பதவுரை

தோழியே,  உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.

விளக்க உரை

  • மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
  • ஈசன் தலைமை கொண்டது  அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
  • ‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’  என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது  தடைக்கு விடை.
  • கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 2 (2019)

பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்துதிருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.

பதவுரை

அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாய அண்டம் – சிவலோகம்
  • சாதித்தல் – நிறைவேற்றுதல்; நிலைநாட்டுதல்; விடாதுபற்றுதல்; மந்திர சித்திபெறுதல்; தேய்த்தல்; கண்டித்தல்; அழித்தல்; அளித்தல்; பரிமாறுதல்; சொல்லுதல்; மறைத்தல்; அருள்புரிதல்; வெல்லுதல்
  • நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 30 (2019)

பாடல்

செம்மலை மீதினில் சாமள கஞ்சுகம் சேர்வடிவம்
அம்மலை போலும் நற்றண்டாயுதமும் கொண்டன்புடனே
எம்மலை வேதம் தவிர்த்தருள்வாய் கடுவேந்தி விண்ணோர்
தம்மலை வோட்டும் தமிழ்க்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஆபதுத்தாரணனின் வடிவமும் அவன் அருள வேண்டிய முறையும் குறித்து போற்றி புகழ்ந்த பாடல்.

பதவுரை

செம்மலை போன்ற மேனியில் கருமையும், பசுமையும் கலந்த நிறமொத்த சட்டைய ஆடையாக அணிந்தவனே, மலை போன்ற மேனியில் கூரியதும், நல்லவை அருளும் தண்டாயுதம் எனும் ஆயுதத்தையும் கைகளில் ஏந்தி, விண்ணில் இருப்பவர் ஆன பிரம்மனை பயமும் திகைப்பும் கொள்ளுமாறு அவனை அழித்து அவன் தலையை திருவோடாக ஏந்தி, தமிழ் மொழி கொண்டு விளங்கும் காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மலை போன்றதும், எழுதா மறை ஆகிய வேதத்தினை போன்றதுமான வார்த்தைகள் பிறர் எனக்கு உபதேசம் செய்யாமல் தவிர்த்து அருள்வாய்.

விளக்க உரை

  • சாமளம் – கருமை, பசுமை
  • கஞ்சுகம் –  அதிமதுரம் கஞ்சுகம் வாய்த்த கவளந்தன்கைக்கொண்ட குஞ்சரம், சிலந்திக்கோரை, சட்டை கஞ்சுகமுதல்வர், பாம்புச்சட்டை, முருக்கு
  • கடு – கடுக்காய்மரம், கசப்பு, நஞ்சு, முள், கார்ப்பு, துவர்ப்பு, முதலை, பாம்பு
  • மலை – அணி, அணிந்து கொள், திகைப்பு-பயம்

 

விளக்க உரைக்கு உதவி செய்த திரு. அனந்த சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.

 


இறை அன்பரின் குறிப்பு

இதில் கஞ்சுகம்வாயத்த என்பது கஞ்சி இஞ்சி – அதாவது கருணை பொங்கும் மனம் கொண்டவன். ஆனால்இஞ்சியைபோல் காரம் கொண்டவன் இறைஞ்சினால் கருணை வடிவானவன்  என பொருள்படும்.

குஞ்சரம் என்பது யானை – அதாவது இவ்வளவு பெரிய கருணை மனம் கொண்டவன் எனப் பொருள்படும்.

சிலந்திக்கோரை என்பது சிலந்தி பூச்சியானது தன்வலை பின்னி மற்ற பூச்சிகளை அதில் சிக்கவைக்து உணவாக்கும்; இப்படி மனிதன் உன்னைக் கட்டநினைந்தாலும் அதில் சிக்காது அவனையே சிக்க வைப்பாய் என பொருளாகும்

சட்டைக்கஞ்சுகமுதல்வர் எண்பது ஜீவன்கள் தன் உடலாகிய சட்டையை கழற்றவைத்து தன்னுடன் சேர்த்து கொள்பவர் என அர்த்தமாகும்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)

பாடல்

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துஅட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.

பதவுரை

கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை,  கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

விளக்க உரை

  • சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 27 (2019)

 

பாடல்

பிறைகொள் வாள்நுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஈசனின் திருமேனி அழகினை விளம்பும் பாடல்.

பதவுரை

வாய்மொழியாக காலம் கடந்து வரும் வேத மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடைய வன்னியூர்த் தலத்து இறைவனானவர், பிறையின் வடிவத்தை உடைய ஒளி பொருந்திய நெற்றியினை உடையவர்; வளையல் அணிந்த கைகளை உடைய பெண்களின் கற்பினை மதித்து அவர்களை கொண்டாடுபவர்; நீறு எனும் திருநீறு அணிந்த திருமேனி கொண்டவர்; ஆலால விஷம் அருந்தியதால் திருநீல கண்டத்தர்; ஒளி வீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.

விளக்க உரை

  • ‘வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்’ என்று பெரும் மதிப்பு உரிய பதிப்புகளில் காணப்படுகிறது. கஜசம்காரமூர்த்தி வடிவம் என்று கொண்டாலும் ரிஷி பத்தினிகளின் கற்பினை அவர் கவரவில்லை என்பதால் இப் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கொள்ளுதல் – எடுத்துக்கொள்ளுதல், பெறுதல், விலைக்குவாங்குதல், உரிமையாகக்கொள்ளுதல், மணம் செய்துகொள்ளுதல், கவர்தல், உள்ளே கொள்ளுதல், முகத்தல், கற்றுக்கொள்ளுதல், கருதுதல், நன்குமதித்தல், கொண்டாடுதல், அங்கீகரித்தல், மேற்கொள்ளதல், மனம் பொறுத்தல், ஒத்தல், பொருந்துதல், உடலிற் காயம்படுதல், எதிர்மறை ஏவல் ஒருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை

Loading

சமூக ஊடகங்கள்

error: Content is protected !!