பாடல்
ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே
திருநெறி 7 – உமாபதி சிவம்
கருத்து – மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள், பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள், ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில் கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.
விளக்க உரை
- கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
- கேவலஞானம் – முக்கால் அறிவு