அமுதமொழி – விளம்பி – பங்குனி – 2 (2019)

பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்துதிருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.

பதவுரை

அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாய அண்டம் – சிவலோகம்
  • சாதித்தல் – நிறைவேற்றுதல்; நிலைநாட்டுதல்; விடாதுபற்றுதல்; மந்திர சித்திபெறுதல்; தேய்த்தல்; கண்டித்தல்; அழித்தல்; அளித்தல்; பரிமாறுதல்; சொல்லுதல்; மறைத்தல்; அருள்புரிதல்; வெல்லுதல்
  • நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *