நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்கஉரை
நடலை – துன்பம்
சுடலை – இடுகாடு
ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்கஉரை
இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்
இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, மிருகண்ட மகரிஷிக்கும், அவருடைய மனைவி ஆகிய மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு, அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ, ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.
விளக்கஉரை
மாடு – செல்வம்
நும்முளே – உங்களுக்குள்
கூடு – உடல்
செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்; அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.
விளக்கஉரை
மனன் ( மன்மதன் ) பாறை
மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.
பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்கஉரை
கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.
மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.
விளக்கஉரை
திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான், அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி பிச்சை ஏற்றவர் ஆவார்.
மெய்ப் பொருளாய் இருப்பவனும்,திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும்,படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
விளக்கஉரை
‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.
‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.
ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய், பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.
மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.
விளக்கஉரை
உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.
கொங்குநாட்டுத் திருத்தலங்களில் முதல் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் ஐந்து மணிகளில் வைரமணி இது (மற்றவை சிவப்புமணி திருவண்ணாமலை, மரகதமணி திருஈங்கோய்மலை, மாணிக்கமணி திருவாட்போக்கி, நீலமணி பொதிகைமலை)
மிகவும் குட்டையான திருமேனியும், சதுர வடிவும் ஆன ஆவுடையாரில் சிகர வடிவும், அகத்தியர் விரல் தழும்பும் கொண்ட திருக்காட்சியுடன் மூலவர்.
மூலவர், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கிய திருக்காட்சி
சுந்தரர் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்
பாண்டியமன்னனின் விரல்கள் வளர்ந்து அவனது குறைநீங்கிய தலம்
சித்திரை பௌர்ணமி தினத்தில் பரத்வாஜருக்கு சிவன் முயலகன் இல்லாமல் குஞ்சிதபாத நடராஜராக சதுர்முகதாண்டவக் கோலத்தில் காட்சியளித்த தலம்.
காவிரி கண்ட விநாயகர் சந்நிதி
திருவடியில் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு பதிலாக ஒரே ஒரு முனிவர் மட்டும் கொண்டு, ஜடாமுடி மற்றும் ரிஷபத்துடன் திருக்காட்சி கொண்ட தட்சிணாமூர்த்தி
திசை மாறியுள்ள மயிலுடன் கூடிய சுப்பிரமணியர் வடிவம்
தல விருட்சமான மிகப்பெரிய வன்னிமரத்தினடியில் பிரம்மா மூன்று முகங்கள் கொண்ட திருகாட்சி
பூக்கள் பூத்து, காய் காய்க்காது இருக்கும் வன்னி மரத்தின் பூக்கள், ஒருபக்கம் முள்ளுடனும் , மறுபக்கம் முள் இல்லாமலும் கொண்ட தோற்றம்; எத்தனை நாட்கள் நீரில் இட்டாலும் கெடாத தன்மையை தரும் வன்னிமர இலைகள்
கோரப்பற்களுடன் கூடியதும், வாலில் மணி கட்டப்பட்டுள்ளதும் ஆன ஆஞ்சநேயர்
காவிரியாற்றின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் விநாயகர் காக வடிவில் அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்து காவிரியை பெருகச் செய்த திருத்தலம்
பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரி
திருமால் வழிபட்டதால் அரிகரபுரம்
கருடன் வழிபட்டு தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவரும் வலிமைபெற்ற தலமாதலால் அமுதபுரி
காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:3௦ வரைஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம்.
PIN – 638151. 04204-222375
பாண்டிக்கொடுமுடி இறைவனானவர், இந்திரன் மற்றும் ஏனைய தேவர்கள் பலரும் போற்றி துதிக்குமாறு நிற்பவர்; மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் வருந்துமாறு செய்து பின் அருள் செய்தவர்; கரிய நிறமுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினை உடையவர்; அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை காற்றில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 48
திருமுறை எண் 8
செம்மை நிறம் ஒத்த சடையை உடையவனே , திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தவனே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோலைகளில் கிளைகளின் மேல் அமர்ந்து குயில்கள் கூவவும், சிறந்த மயில்கள் ஆடுகின்றதும் ஆன ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனாகிய சிவனே, உன்னை நான் மறந்தாலும், என் நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால் காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.
விளக்கஉரை
காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
தண்ணுமை (மிருதங்கம்)
இது தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
‘மதங்கம்’ – பழந்தமிழ்ச் சொல் திரிந்து ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்