பாடல்
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்க உரை
- இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
- சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.