தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருப்பாண்டிக்கொடுமுடி
- கொங்குநாட்டுத் திருத்தலங்களில் முதல் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
- ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் ஐந்து மணிகளில் வைரமணி இது (மற்றவை சிவப்புமணி திருவண்ணாமலை, மரகதமணி திருஈங்கோய்மலை, மாணிக்கமணி திருவாட்போக்கி, நீலமணி பொதிகைமலை)
- மிகவும் குட்டையான திருமேனியும், சதுர வடிவும் ஆன ஆவுடையாரில் சிகர வடிவும், அகத்தியர் விரல் தழும்பும் கொண்ட திருக்காட்சியுடன் மூலவர்.
- மூலவர், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கிய திருக்காட்சி
- சுந்தரர் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்
- பாண்டியமன்னனின் விரல்கள் வளர்ந்து அவனது குறைநீங்கிய தலம்
- சித்திரை பௌர்ணமி தினத்தில் பரத்வாஜருக்கு சிவன் முயலகன் இல்லாமல் குஞ்சிதபாத நடராஜராக சதுர்முகதாண்டவக் கோலத்தில் காட்சியளித்த தலம்.
- காவிரி கண்ட விநாயகர் சந்நிதி
- திருவடியில் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு பதிலாக ஒரே ஒரு முனிவர் மட்டும் கொண்டு, ஜடாமுடி மற்றும் ரிஷபத்துடன் திருக்காட்சி கொண்ட தட்சிணாமூர்த்தி
- திசை மாறியுள்ள மயிலுடன் கூடிய சுப்பிரமணியர் வடிவம்
- தல விருட்சமான மிகப்பெரிய வன்னிமரத்தினடியில் பிரம்மா மூன்று முகங்கள் கொண்ட திருகாட்சி
- பூக்கள் பூத்து, காய் காய்க்காது இருக்கும் வன்னி மரத்தின் பூக்கள், ஒருபக்கம் முள்ளுடனும் , மறுபக்கம் முள் இல்லாமலும் கொண்ட தோற்றம்; எத்தனை நாட்கள் நீரில் இட்டாலும் கெடாத தன்மையை தரும் வன்னிமர இலைகள்
- கோரப்பற்களுடன் கூடியதும், வாலில் மணி கட்டப்பட்டுள்ளதும் ஆன ஆஞ்சநேயர்
- காவிரியாற்றின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் விநாயகர் காக வடிவில் அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்து காவிரியை பெருகச் செய்த திருத்தலம்
- பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரி
- திருமால் வழிபட்டதால் அரிகரபுரம்
- கருடன் வழிபட்டு தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவரும் வலிமைபெற்ற தலமாதலால் அமுதபுரி
- கன்மாடன் வழிபட்டு அருள்பெற்ற தலமாதலால் கன்மாடபுரம்
- மலையத்துவஜ பாண்டியன் வழிபட்டு அஅருள்பெற்ற தலமாதலால் பாண்டிக்கொடுமுடி
- பரத்வாஜர் சிவனாரின் நடனக்காட்சி கண்ட தலமாதலால் பரத்வாஜக்ஷேத்திரம்
- மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர்; தமிழில் கொடுமுடிநாதர்
- ஆதிஷேசனால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்
- கிழக்கு நோக்கிய அமைப்பு கொண்டது இத்திருக்கோவில் (சுமார் 640 அடி நீளம், சுமார் 484 அடி அகலம் )
புகைப்படம் : தினமலர்
தலம் | திருப்பாண்டிக்கொடுமுடி |
பிற பெயர்கள் | கொடுமுடி, பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், பாண்டிக்கொடுமுடி, பரத்வாஜக்ஷேத்திரம் |
இறைவன் | மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தீசர் |
இறைவி | மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி , பண்மொழிநாயகி , வடிவுடைநாயகி |
தல விருட்சம் | வன்னிமரம் |
தீர்த்தம் | தேவதீர்த்தம், பிரம்மதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், காவிரியாறு |
விழாக்கள் | ஆடிபெருக்கு, பங்குனி மாதம் – காவடி உற்சவம் |
மாவட்டம் | ஈரோடு |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை மாலை ௦4:௦௦ முதல் ௦8:3௦ வரைஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம். PIN – 638151. 04204-222375 |
வழிபட்டவர்கள் | பரத்வாஜர், அகத்தியர் |
பாடியவர்கள் | திருஞான சம்பந்தர் 1 பதிகம் ,திருநாவுக்கரசர் 1 பதிகம்,சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர், வள்ளலார் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | ஈரோட்டில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவு; கரூரில் இருந்து சுமார் 34 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் |
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 69
திருமுறை எண் 8
பாடல்
புரந்தரன் றன்னொடு வானோர்
போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங்
காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
பாண்டிக் கொடுமுடி யாரே
பொருள்
பாண்டிக்கொடுமுடி இறைவனானவர், இந்திரன் மற்றும் ஏனைய தேவர்கள் பலரும் போற்றி துதிக்குமாறு நிற்பவர்; மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் வருந்துமாறு செய்து பின் அருள் செய்தவர்; கரிய நிறமுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினை உடையவர்; அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை காற்றில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 48
திருமுறை எண் 8
பாடல்
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே
பொருள்
செம்மை நிறம் ஒத்த சடையை உடையவனே , திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தவனே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோலைகளில் கிளைகளின் மேல் அமர்ந்து குயில்கள் கூவவும், சிறந்த மயில்கள் ஆடுகின்றதும் ஆன ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனாகிய சிவனே, உன்னை நான் மறந்தாலும், என் நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)