அமுதமொழி – குரோதி – மார்கழி – 19 (2025)


பாடல்

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
   மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்
“தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
   செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
   நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
   கடுமையொடு களவு அற்றோமே

தேவாரம் ‍ – ஆறாம் திருமுறை ‍ – திருநாவுக்கரசர்

கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அயன், ஹ‌ரி, ஹ‌ரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆன‌வனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.

விளக்கஉரை

  • மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடுமை – கடிதாய செயல், பிறரை நலிதல்

#அந்தக்கரணம்  #அமுதமொழி #சைவம் #தேவாரம் ‍ #திருமுறை #ஆறாம்_திருமுறை ‍ #திருநாவுக்கரசர் #பொது #மறுமாற்றத் திருத்தாண்டகம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *