
பாடல்
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனே அனைத்துமாகி இருப்பதை உரைத்தும், அதன் பொருட்டு அரசனிடத்தில் பயம் கொள்ளமாட்டோம் எனவும் உரைக்கும் பாடல்.
பதவுரை
நிற்பன என்றழைக்கபடும் மனிதனாகவும், நடப்பன என்றழைகப்படும் மிருகங்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும் , காற்றாகவும், நீண்ட வானமாகவும் (பஞ்ச பூதங்கள்), மிகசிறிய அளவில் இருக்கக்கூடியதாகவும், பெருமை தரதக்கவனாகவும், அருமை உடையவனாகவும், தன்னிடத்தில் அன்பு கொண்டவர்களுக்கு மிகவும் எளியவனாகவும், அளக்க இயலாததான தற்பரம் ஆனவனாகவும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானாகவும் அவன் நன்மைகளையும் பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றவரன் ஆனோம். சிறந்த உணர்வு இல்லாமல் அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்ப தன்மை உடையவர்கள் பேசுமாறுபோல யாம் பேசுவமோ?
விளக்கஉரை
- பரம் – மேலான பொருள்
- தத்பரம் – உயிருக்கு மேற்பட்டது
- சதாசிவம் – சதா சிவதத்துவம்
- தானும் யானும் – இறைவனது பொருள் தன்மையையும் கலப்பினையும் உணர்த்தியது.