பாடல்
பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – ஈசன் அன்பு கிடைத்ததால் இவ்வுலக வாழ்வினை விட்டு இறைவன் திருவடியை அடையும் காலம் வந்து விட்டது எனும் பாடல்
பதவுரை
மலர்கள் நிறைந்த திருமுடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான்; அவன் திருவடி குறித்த சிந்தனை குன்றிய எண்ணங்களால் சிறியவர்களாகிய ஆனபோதும், நம்முடைய உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று நம்மீது இரங்கி அருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்ட செய்தவன்; அவன் அன்பு கொண்டதால் நிலையில்லாத இந்த வாழ்க்கையை விட்டு நம்மை ஆட்கொண்டவனாகிய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். மாறுதல் இல்லா ஒருநிலையான மனநிலையோடு வாருங்கள்
விளக்க உரை
- புயங்கம் – பாம்பு,ஒருவகை நடனம்
- சிறியோமை ஓவாது – குற்றம் உடைய வாழ்வின் குணங்களை விட்டு நீங்காது.
- என்னப்பட்டு – என்று இரங்கி அருள் செய்யப்பட்டு
- பொய் – நிலையில்லாத உடம்பு