( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)
மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண், சிவத்தினை உணரத் துணை செய்யும் போது திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.
பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து வாராயோ என்ப்ராண நாதா என்பேன் வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு பூராய மாமேலொன் றறியா வண்ணம் புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே நீராள மாயுருகிக் கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்
தாயுமானவர்
பதவுரை
முதலும் முடிவாகி இருப்பது போன்றும், நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருள் துணையால் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுபவர்களுக்கு மெய்ப்பொருளாகிய சிவன் தோற்றம் ஒன்று மட்டுமே காணப்படும்; அதனால் முதல்வனே, அடியேன் விருப்பம் கொள்ளும் சிந்தையினைப் பெரிய பனை ஏடாகக் கொண்டு அதில் எண் குணங்களைக் கொண்டு நிற்கும் நின் பொதுநிலையினை மறவாத நினைவால் எழுதிய தன்மை கண்டும், அடியேனைத் தடுத்துத் வைத்துக்கொண்டு முதலும் முடிவுமாக உன் அருள் அல்லாமல் மேலொன்றும் அறிய முடியாதவனாகி, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்தி, மிகமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளம் போல உருகி, அவ்வெள்ளப் பெருக்கால் கண்ணீர் சேர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.
விளக்கஉரை
பார் – நிலம்
விண் – விசும்பு
மடல் – பனைஏடு
பூராயம் – முதலும்முடிவும்
எண்குணங்கள் – தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை
மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
எறிபத்த நாயனார் பிறந்த தலம்
சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
கருங்கல்லால் ஆன கொடிமரம்
திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
வில்வமரம் , சீந்தில் கொடி, ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம்
பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள்
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள்
வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.
கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே
பொருள்
கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன், பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.
விளக்கஉரை
கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்) மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.
வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.
உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.
‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.
வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.
பாடல்
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க! உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! தின்றுகளைப் பாரேனோ!
அழுகணிச் சித்தர்
பதவுரை
அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால் தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.
விளக்கஉரை
ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.
பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்துமுறை என இரு மாதங்கள் நாள்தோறும் முறையாகப் பாராயணம் செய்து வந்தால், அரசர்களும் வசியம் ஆவார்கள்; தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் போன்ற சகல செல்வங்களும் வந்துசேரும் என்று விநாயகர் காசியப்பருக்கு அருளிமறைந்தார்.
தணிகை மலையில் வீற்றிருப்பவனே, உன்னை நினைத்து புகழ்ந்து உன்னைக் காணவில்லை; அருள் இல்லாமையால் சிறுமை கொண்டும், இழி செயல்கள் செய்து கொண்டும் காலங்களை கழிக்கின்றேன். நீ வந்து எனக்கு அருள்வாய் எனில் நாயினும் கடையவன் ஆகிய நான் அஞ்சவோ, நடுங்கவோ, ஒடுங்கவோ மாட்டேன்; ஆதலின் பெருமை உடைய அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். ஆகவே எனக்கு நிலைப் பேற்றினை எனக்கு அருள் செய்வாயாக;
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும் கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ‘ஒற்றியூர்‘ என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்‘ என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனி‘ என்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் ‘கண்ணிலியே நீ என்ன அறிவாய்; போ‘ என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? இது முறையோ!
விளக்கஉரை
சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும், உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு தலைமையாக இருக்கும் இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
விளக்கஉரை
மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.
தேவி இலட்சுமியால் வரமாக அருளப்பட்டதும், தேவலோகத்தில் இந்திரனுக்கு கிடைக்கப்பெற்றதும், நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று தரவல்லதும், தோல்வியை என்றும் தராததும் ஆன சங்க நிதியினையும், தரித்துக் கொண்ட ஒரு வீரனை எவர் ஒருவராலும் தோற்கடிக்க முடியாத பதும நிதியினையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியையும், மற்றும் வானுலகையும் தருபவராக இருப்பினும் தேவர்களுக்கு தலைவனாகிய சிவபெருமானிடத்தில் அன்பில்லாதவர்களாய் நிலையில்லாமல் அழிபவர்களாகிய அவர்களது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறைந்து அழுகும் தொழுநோய் உடையவர்களாகவும், பசுவை உரித்துத் தின்று அதன் காரணம் பற்ரிய வினை கொண்டு திரியும் புலையர்கள் ஆயினும் கங்கையை நீண்ட சடையில் கொண்ட சிவபெருமானுக்கு அன்பராக இருப்பவர்கள் எவரோ அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், உலகியல் பொருள்களைப் பற்றாது, மெய் நெறியையே பற்றி நிற்கும் தமது நிலையை அருளிச்செய்தது.
புலையர் – கீழ் செயல்கள் உடையோர். (வடமொழி -‘சண்டாளர்’)
தங்கும் அடியார் இதயமதில் தழைத்த மணியே தவமணியே தரணிக் கொளியாய் இரவுபகல் தானே வளர்ந்த தளிர்மணியே
மங்குங் கருத்தை நிலைநிறுத்தி வதன வெளியில் படர்மணியே மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும், சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட அமைத்துக் கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
1ஆக்கினை
2சிவசக்தி நடன சொரூபக் காட்சி
3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.
4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் தளிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.
நான்எனவும் நீஎனவும் இரு தன்மை
நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-
தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும், கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே, வஞ்சனேனே.
தாயுமானவர்
பதவுரை
நான் என்னும் நிலையும், நீ என்னும் நிலையும் கொண்டு அதை நான் நாடாமல், மௌனத்தில் அந்த இருநிலைகளுக்கும் இல்லாமல் நடுநிலை கொண்டு ஏகத்துவம் ஆகியதும், இறை கூட்டுவிக்க தானே அமரும் நிலையானதும் ஆன இந்த நிலையே உண்மை இது சத்தியம், சத்தியம் என்று எனக்கு மௌன குருவாகி என்னை கட்டினாய்; ஆனால் நான் திரும்பவும் இங்கு பிறப்பு கொண்டு குற்றம் புரிவதானதும், மனம் போன மார்க்கமாகமான மானக்கேடாகவும் உள்ள மார்கமாக வஞ்சகம் உடையவனாகி, அலைந்து இங்கு வந்து பரந்து விரிகின்றேன்.
விளக்கஉரை
சத்தியம் உரைக்கும் கால் அதுவே இறுதி என்பதை உரைக்க இருமுறை உரைத்தல் மரபு