பாடல்
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும் கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ‘ஒற்றியூர்‘ என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்‘ என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனி‘ என்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் ‘கண்ணிலியே நீ என்ன அறிவாய்; போ‘ என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? இது முறையோ!
விளக்க உரை
- சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
- சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
- நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.