பாடல்
தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே
திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்
பதவுரை
தணிகை மலையில் வீற்றிருப்பவனே, உன்னை நினைத்து புகழ்ந்து உன்னைக் காணவில்லை; அருள் இல்லாமையால் சிறுமை கொண்டும், இழி செயல்கள் செய்து கொண்டும் காலங்களை கழிக்கின்றேன். நீ வந்து எனக்கு அருள்வாய் எனில் நாயினும் கடையவன் ஆகிய நான் அஞ்சவோ, நடுங்கவோ, ஒடுங்கவோ மாட்டேன்; ஆதலின் பெருமை உடைய அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். ஆகவே எனக்கு நிலைப் பேற்றினை எனக்கு அருள் செய்வாயாக;
விளக்க உரை
- தாணு – சிவன், குற்றி, தூண், நிலைபேறு, மலை, பற்றுக்கோடு, செவ்வழி யாழ்த்திறவகை,
- தாவரம்
- புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்