பாடல்
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர் சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
சிவபெருமான், பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும் வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர்; படர்ந்து விரிந்த சடையினை உடைய அச்சிவபெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், சிறந்த புகழையுடைய அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, மேல் சென்று, அழகு மிகுந்த தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படி செய்யும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
விளக்க உரை
- ஏன எயிறு – பன்றியின் கொம்பு
- இளைஞர் – வாலிபர் (சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க.)
- உழுவை அதள் – புலித்தோலை.
- காணி – உரிய இடம்
- மூசு – மூடுகின்ற மயிலாடுதுறை.