பாடல்
காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
பதவுரை
அறிதல் எனும் பொருள்தரும் காணுதல் தொழிலையுடையதும், அறிவிக்க அறியும் தன்மை உடையதுமான ஆன்மாவைத் அகத்தில் தரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமல் காண்கின்றோம் என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். காணாமல் காண்பது எவ்வாறு எனில், காண்பவன் ஆகிய ஆன்மா, காண்கின்றவனால் காணப்பட்ட பொருள்களாகிய சிவம் என்கிற இரண்டு தன்மையும் இல்லாமல் இரண்டும் சிவத்துடன் ஒன்றாகி ஞான அறிவாகிய மெய்ப்பொருளை உள்ளவாறு காண்கையினாலே கண்டவர்கள் என்று அறிவாயாக.
விளக்க உரை
- காண்கின்ற பொருள் என்பது சத்து, அசத்து என்னும் இருதிறப்பொருள்கள்.
- நிலைபெற்ற சத்தாக உள்ள ஆன்ம நாட்டத்தின் இறையோனாகிய சிவபரம்பொருளை காணுதல். அஃதாவது தற்போதம் கெடத் திருவருளோடு உடனின்று ஒன்றியுணர்தல்.