அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

  • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *