பாடல்
அழியச் சனை அலைமுழுது
அலையும் மனத்தை நிலைநிறுத்தி
ஆறாதார அடிநடுவுள் அருணா
சலத்தின் வேரினுள்ளே
சுழியைத் திறந்து வாயுவதாற்
கூழ்ரே சகபூ ரகத்தாலுந்
தோன்றுங் கும்ப காதியுடன்
சோதி படரும் ஞானவெளி
விழியுந் திறக்கும் மதிக்குழப்பு
மிகுந்து சுரக்கும் நவக்கிரக
வெளியா மேலே வெளிபடர்ந்து
விம்மித் தனையாய்ந் திருக்கஅருள்
வழியைப் பொருத நாயடியேன்
மனதா மரையுள் நீவருவாய்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, பிறவிகள் தோறும் எதிலும் நிலைபெறாமல் அலைவதை மட்டுமே கொண்டிருக்கும் மனதை நிலைநிறுத்தி, மூலாதாரம், சுவாதிடானம், மணிபூரகம், அநாசுதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றின் அடியிலும், நடுவிலும், சுழுமுனை நாடிகளின் உச்சியிலும், சுழுமுனை நாடிகளின் வேராக இருக்கும் இடகலை, பிங்கலை நாடிகளின் வழியாக செல்லும் சுழுமுனை நாடியின் அடியைத் திறந்து வாயுவைத் திறந்து வெளியிடுவதாகிய நிறைத்தலும், வெளியிடச் செய்தலும், அதனால் உண்டாகும் சோதியாகிய ஞானவெளியில் விழிதிறந்து, ஞானம் அளிக்கும் கண் திறந்து, அமுத தாரகை மிகுந்து சுரக்கும் ஒன்பது துவாரங்கள் உடையதாய், ஒன்பது கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பூமி ஆகிய உடலைக் கடந்து துவாத சாந்த பெருவெளியை அடைய வழி பெற இயலாத நாய் போன்றவனாகிய என் மனத் தாமரையுள் நீ வந்து அருள்புரிவாயாக.
விளக்க உரை
- யோக சித்தி அருள வேண்டுதல் குறித்தது இப்பாடல்.
அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.
குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.