இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்)
மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.
வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.
உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.
‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.
வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.
பாடல்
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ!
அழுகணிச் சித்தர்
பதவுரை
அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால் தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.
விளக்க உரை
- ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
- இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.
பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.