சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்