பாடல்
பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்
தாயுமானவர்
பதவுரை
முதலும் முடிவாகி இருப்பது போன்றும், நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருள் துணையால் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுபவர்களுக்கு மெய்ப்பொருளாகிய சிவன் தோற்றம் ஒன்று மட்டுமே காணப்படும்; அதனால் முதல்வனே, அடியேன் விருப்பம் கொள்ளும் சிந்தையினைப் பெரிய பனை ஏடாகக் கொண்டு அதில் எண் குணங்களைக் கொண்டு நிற்கும் நின் பொதுநிலையினை மறவாத நினைவால் எழுதிய தன்மை கண்டும், அடியேனைத் தடுத்துத் வைத்துக்கொண்டு முதலும் முடிவுமாக உன் அருள் அல்லாமல் மேலொன்றும் அறிய முடியாதவனாகி, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்தி, மிகமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளம் போல உருகி, அவ்வெள்ளப் பெருக்கால் கண்ணீர் சேர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.
விளக்க உரை
- பார் – நிலம்
- விண் – விசும்பு
- மடல் – பனைஏடு
- பூராயம் – முதலும்முடிவும்
- எண்குணங்கள் – தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை