அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அக்கு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அக்கு

பொருள்

  • எலும்பு
  • சங்குமணி
  • எருதின் திமில்
  • கண்
  • உருத்திராக்கம்
  • உரிமை
  • எட்டிமரம்
  • அகில்
  • ஒரு சாரியை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
  தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
  ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
  புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
  நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருநெய்த்தானம் எனும் தலத்தில் உறைபவனே! நீ மேம்பட்ட கயிலாயத்தில் உறைபவன் என்றும், ஆக்கூர் எனும் தலத்தில் தான்தோன்றி ஈசன் என்றும், புள்ளிருக்குவேளூர் எனும் வைத்திஸ்வரன் கோயில், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும், எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் வாழும் ஏழு உலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோர்களகிய நாங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிருக்கு உடனாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?
பேதா பேதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திரிகை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  திரிகை

பொருள்

  • அலைகை
  • எந்திரம்
  • குயவன் சக்கரம்
  • இடக்கை மேளம்
  • கூத்தின் அங்கக்கிரியை வகை
  • முந்திரி, கொடிமுந்திரி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வழிபடுவார்க்கு நேரில் வந்து அருள் புரிகின்றவளும், அழகிய தேவி ஆனவளும் ஆகிய அந்த நவாக்கரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் எனில், மழை தரும் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அவ்வண்ணம் நீ நட; அப்பொழுது நீ மனதால் நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும். 

விளக்க உரை

  • இச்சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்.
  • திரிகை என்பது கடைக்குறைந்து ‘தரு’ என நின்றது

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிருக்கு வேறாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?
பேதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அண்டவுச்சி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அண்டவுச்சி

பொருள்

  • கண்
  • புருவ மத்தி
  • துரியாதீதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

காகபுசுண்டர் ஞானம்

கருத்து உரை

நமது தலைக்கு மேல் உள்ள அண்டஉச்சி எனப்படும் துரியாதீதம் கண்டு அதை மௌவுனமாகவும் உறுதியாகவும் பார்ப்பவர்களுக்கு, முத்தி பெறுவதற்குரிய வழிகளில் ஒன்றான சமாதி கூடும். பரப்பிரம யோகம் எனும் இவ்வழியினால் அண்டங்களை எல்லாம் நம் மனத்தால் சுற்றி வராலாம், நம் காதுகளில் சிலம்பொலி கேட்கும், பாரபரையின் நடனம் காணலாம். இவ்வாறு குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி பரபிரமத்துடன் இணைக்கும் செயலால் ஞானம் அல்லது பேரறிவு ஆகிய போதமும் மேன்மை பெறும். 

விளக்க உரை

  • விந்து நாதம்  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்  –  ‘சுக்கிலம் கெட்டிப்படும்’ என்று பல இடங்களில் பதிவு இடப்பட்டிருக்கிறது. சுக்கிலம் கெட்டிப்படுதல் என்பது இடை நிலை என்பதாலும்,  யோக மரபில் இறுதி நிலை சமாதி என்பதாலும், சமாதி கண்டவர்களுக்கே இந்த அனுபவங்கள் வாய்க்கும் என்பதாலும் இங்கு சமாதி நிலை என்ற பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அண்டவுச்சி என்பதற்கான பொருள் விளக்கம் அவரவர் குரு மூலமாக அறிக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு கலந்த நிலைக்குப் பெயர் என்ன?
அபேதம் (பேதம் இல்லாதது)

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சரக்க

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சரக்க

பொருள்

  • விரைவாக

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

நிறைந்த புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் எம்பெருமானே! இராவணனை விரலால் நெறித்த நீர் எளியேன் பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராக உள்ளீர்! விரைந்து வந்து இக்கதவினைத் திறப்பித்து அருள்வீராக. 

விளக்க உரை

  • பத்துத் திருப்பாடல்கள் பாடியும் கதவு திறவாமையைக் கண்ட திருநாவுகரசர் ‘இரக்கமில்லையோ’ எனக்கூறிய இப்பாடலின் உரை கேட்டு திருநாவரசரின் பாமாலை இன்னிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தான்
  • அடர்த்திட்ட – நெருக்கி அருள் செய்த
  • இரக்கமொன்றிலீர் – இரக்கம் சிறிதும் என்பால் இல்லாதவர்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உயிர்களை இறைவன் படைக்கிறானா?
இல்லை.( அவைகள் அநாதி)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொற்றம்

 

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொற்றம்

பொருள்

  • வெற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள சிறப்புடைய மயிலையில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தல் நில மக்கள் உடையுயதும், மழைவளம் பெருகியதால் வளர்ந்த சோலைகளும் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • மார்கழித் திருவாதிரை விழாச் சிறப்பு உணர்த்தும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உலகைப் படைக்கும் நிமித்தக் காரணன் யார்?
சிவபெருமான்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தொழுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  தொழுதல்

பொருள்

  • வணங்குதல் (மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல்)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை ஆக்கிக் கொண்டு இன்அருளைச் செய்கின்ற எம் தலைவனே!  இனிய ஓசைகளை எழுப்பும் வீணையை உடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கத்திலும், வேதங்களோடு தோத்திரம் கொண்டு துதிப்பவர்கள் ஒரு பக்கத்திலும், நெருக்கி தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்திலும், வணங்குதலை உடையவர்களும், அழுகை உடையவர்களும், துவளுதலை உடையவர்களும் சூழ்ந்து ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் வணங்குபவர்கள் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கு எல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொளுவுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொளுவுதல்

பொருள்

  • கொள்ளச்செய்தல்
  • தீமூட்டுதல்
  • பூட்டுதல்
  • தூண்டிலிடுதல்
  • அகப்படுதல்
  • மிதியடிமுதலியனஅணிதல்
  • வேலையில்அமர்தல்
  • சிக்குதல்
  • தந்திரஞ்செய்தல்
  • குடல்தூக்கிகொள்ளதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
   யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
   தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
   நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
   நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
   விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
  விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
  தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
  தணிமலையு லாவு …… பெருமாளே.

திருப்புகழ் (திருத்தணிகை) – அருணகிரிநாதர்

 

கருத்து உரை

ரிஷபத்தை வாகனமாகப் பூட்டிச்  செல்பவரும், குற்றமற்றவரும், தூயவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக உயர்ந்தவரும், மேலான யோகம் படைத்தவரும், பிறைச்சந்திரன், வில்வத் தளிர், சிறிய பூளை / தேங்காய்ப்பூக் கீரை / சிறுபீளை என்று அழைக்கப் பெறும் பூளாப்பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே,  செல்வம் படைத்தவர்கள் எவர் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழுமாறு அவர்கள் மீது எதுகை மோனையுடன் கூடிய ஆசுகவிகளைப் பாடி, ‘உன்னுடைய புகழ் மேருமலை அளவு உயர்ந்தது’ எனக் கூறியும், அவர்களை வலிமையான புகழ்ச்சி மொழிகளைப் பேசியும், பல முறை நடந்து பலநாள் போய்ப் பழகியும், அவர்கள் தனம் ஈயாததால் தரித்திரர்களாகவே மீண்டு, ‘நாளைக்கு வா’ என்றே கூற, அதனால் அகம் வாடி,முகம் தனது களை இழந்து, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு?
சிறப்பு இயல்பு(சொரூப இலக்கணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – காசம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  காசம்

பொருள்

  • ஆகாயம்
  • மயிர்ச்சாந்து (தைலம்)
  • பிரகாசம்` என்னும் வடசொல் மருவி , காசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யோகி ஆனவன்,  பூசுத்தக்கவற்றைப் பூசி, நல்ல வாசனை மலர்களை சூடி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடுவான் ஆயினும், அவனது மனம் ஊசித் துளை அளவுடைய  பிரமந்திரத்திலே நிற்கும் ஆயின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும் எனும் பொருள் பற்றி)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு ஒன்றாகவும்,  வேறாகவும் மற்றும் உடனாகவும் கலந்திருத்தல் என்ன இயல்பு?
பொது இயப்பு (தடத்த இலக்கணம்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்துறையூர்

 தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்துறையூர்

  • சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
  • சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
  • சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
  • சிவன், சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம்.
  • சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு
  • அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி.
  • அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயில் – மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள்புரிந்த அம்மன் அமையப்பெற்றத் தலம்
  • சிற்ப சிறப்புகள்
  1. உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம்
  2. கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பம்
  3. தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம்

 

தலம் திருத்துறையூர்
பிற பெயர்கள் திருத்தளூர்
இறைவன் சிஷ்டகுருநாதேஸ்வரர்,பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்
இறைவி சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி
தல விருட்சம் கொன்றை மரம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம். 607205
04142-248498, 94448-07393
வழிபட்டவர்கள் நாரதர், வசிஷ்டர், அகத்தியர், சூரியன், ராமர், சீதை, திருமால், பிரம்மன், பீமன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 205 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  15    வது தலம்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 2             

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

பொருள்

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 6        

பாடல்

மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.

பொருள்

தேன் நிறைந்த மலர்களை உடைய கொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முறித்து, அவற்றின் அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரையில், வாத்திய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது விளங்குகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே, உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலவரை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குலவரை

பொருள்

  • எண்குலமலை
  • சிறந்தமலை
  • நாகம்
  • மந்தாரச்சிலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
   அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
   மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
   திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
   பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பெரும் தவமுடையவர்கள் தொழுது போற்றும் தந்தையானவன், தேவர்களின் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமல் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு வழங்கி உதவிய வலிமையுடையவன், எப்போதும் அலைமடியப் பெற்ற கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற சூரியன், சந்திரன், அக்னி மற்றும் இன்ன பிறவும் ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவனாகவும், புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்த தில்லையில் உறைபவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • பிறவா நாளே  – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி;  அறம், பொருள், இன்பங்களாகிய உலகியல் பயனுள்ளவை என்னும் ஐயத்தினை அறுத்து  அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமை உடையவை, இறையின்பமாகிய பெரும்பயனொடு ஒப்பு நோக்கப் பயன் எட்டாது  எனத் தெளிவித்தலின் பொருட்டு இப்பாடல்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

பதியின் வடிவ நிலைகள் யாவை?
அருவம், உருவம், அரு உருவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அநந்தம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அநந்தம்

பொருள்

  • முதலில்லாது
  • அளவில்லாதது
  • முடிவிலி
  • அளவற்றது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது

கருத்து உரை

எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், முதலில்லாததாகவும், அளவில்லாததாகவும், முடிவில்லாததாகவும், அளவற்றதாகவும் கொண்ட அநந்தக் குணங்கள் எவன் இடத்தில் இருந்து தோன்றுமோ, அவ்வாறான நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இருந்து இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும் லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.

விளக்க உரை

  • சிவனின் எண்குணங்களில் ஒன்று

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

பதி எனும் சொல்லுக்கான பொருள் என்ன?
பசுவுக்கும், பாசத்துக்கும் தலைவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அந்தித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அந்தித்தல்

பொருள்

  • சந்தித்தல்
  • நெருங்குதல்
  • முடித்து வைத்தல்
  • முடிவு செய்தல்
  • இறத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

முதலில் சந்திர கலை ஆகிய இடநாடியின் வழியும், பின்பு சூரிய கலை  நாடி ஆகிய வல நாடியின் வழியும், பிராண வாயுவை அடக்கியும், வெளி விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டன.

விளக்க உரை

  • தாச மார்க்கம் வழி சிறப்பு நிலை எய்துதல் குறித்து கூறப் பட்டப்பாடல்.
  • சரியை ஆகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவரது சரியைத் தொண்டு சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் மூன்று வகைகள் யாவை?
தந்திரச் சொல், மந்திரச் சொல், உபதேசச் சொல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மெய்ஞ்ஞானம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மெய்ஞ்ஞானம்

பொருள்

  • உண்மை அறிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மேவியே எங்குமாய் நிறைந்தோம் என்றீர்
   மெய்ஞ்ஞான முழுவதையும் பெற்றோ மென்றீர்
ஆவியே மும்மூலம் கொள்ளா மற்றான்
   அதிசயமாய் சிரஞ்சீவி யருளு முண்டேன்
தாவியே வாசியதைப் பாரா மற்றான்
   தனவானே யவனாகும் தகைமை செய்வீர்
ஆவியே அறுமுகமே குருவே சுவாமி
   ஐயனே யிந்தவகை யருளு வீரே

முருகன் அகத்தியருக்கு உபதேசித்து அருளிய யோகஞானம் 500

கருத்து உரை

தானே அணுவாகவும், அதன் பொருட்டான அசைவாகவும் ஆகி அண்டம் முதல்  பிண்டம் வரை அனைத்திலும் நிறைந்த வஸ்துவானது,  அணு இல்லா இடம் ஏதும் இல்லாமையால் பிரபஞ்சம் எங்கிலும் நிறைந்தது.  வினைகளின் வழியே வரும் அஞ்ஞானம் விலகும் பொழுது மெய்ஞானம் என்று ஒன்றுள்ளது என்பது புலனாகும். மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்தவர் கந்தக் கடவுள்.  மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கும என்பது நடைமுறை. ஆனால் கந்தனே  மும்மூல வடிவாக ஆனதனால் அவ்வாறான மும்மூல வடிவம் கொண்டப்பின் கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை.  சிரத்தில் இருக்கும் பூரணமான  மெய்ப்பொருள் மலங்களை களையறுத்த பின்  கிட்டும் உன்னத நிலையே சிரஞ்சிவி தன்மையாகும். தான் யார், தன் தன்மை என்ன என்ற உண்மை அறியாது தேகம் விடுதலையே இறப்பு என்பர்.  மாறாகத் தான் யார் எனும் தன்மையினை அறிந்து கொண்டோர் இவ்வுடலை விலக்கும் காலம் ‘இது ஆடை மாறுதல் போல்’  என்று அறிவர்.  இவ்வாறு காயம் நீக்குதலை தாமற்ற மாற்றொன்று என அறிந்தவரே  சிரஞ்சிவி ஆவார்.  உண்மையின் வடிவமாக கந்தன் உருக் கொண்டு நின்றதால் மும்மூலம் கொள்ளாது  சிரஞ்சிவி ஆனான்.  மும்மூலம் கொள்ளுவதன் காரணமாக வாசி கூடி நிலை மாறி வாசியானது சிவா என்று மாறும். இவ்வாறான சிவமே கந்தனானதால் மாறுதலுக்கு உட்படவும் கொள்ளவும் எதுவுமில்லை.  நிதியிலோ நிலையிலோ இல்லை என்ற நிலையில்லாதவரை உலகம் தனவானென்று கூறும். ஆனால் ‘தான் இல்லை’ என்ற உண்மையை அறிந்தவரே உண்மையில் தனவான் ஆவார்கள். ‘தளர்ச்சி இல்லா தேகம்’, ‘நரை முடி இல்லாமை’ ஆகியவை கொண்டிருப்பதுவே அறிவீலிகளால் இளமை என்று குறிக்கப்பெறும். உண்மையில்  ‘தளர்ச்சி இல்லா செயல் ஆக்கம்’, ‘மருட்சி அற்று தீர்மான முடிவு எடுக்கும் நிலை’ ஆகியவையே இளமை ஆகும்.  இவர்களை குமரன் என்றும் கூறுவார்கள். வயதில் முதியவர்கள் செயலில் வேகம் காணும் போது அவரை குமரன் என்று கூறுவார்கள். அந்த நிலையை யாம் வேண்டி நின்றோம். இந்த நிலையை அருளக் கடவீர் என அகத்தியெம்பெருமான் தனது குருவாகிய கந்தக் கடவுளிடம் வேண்டுகிறார்.

விளக்க உரை

  • அகத்தியர் முருகனிடத்தில் ‘அருள்வீர்’ என வேண்டும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் இரண்டு வகைகள் யாவை?
தன்பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்

(இப் பாடலுக்கான விளக்கம் முழுவதும் சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அயில்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அயில்

பொருள்

  • இரும்பு
  • சத்திரம் வைக்கும் கத்தி.
  • அழகு
  • கூர்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கூரிய அம்பு எய்து முப்புரங்களையும் அழித்து, குயில் போன்ற இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகி, மயில்கள் நிறைந்து வாழும்  சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றவர்களுக்குப் பாவம் எதுவும் இல்லை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் நான்கு வகைகள் யாவை?
வாயில் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அணங்கு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அணங்கு

பொருள்

  • அழகு; வடிவு
  • தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்
  • வருத்தம்; நோய்; மையல்நோய்
  • அச்சம்
  • வெறியாட்டு
  • பத்திரகாளி
  • தேவர்க்காடும் கூத்து
  • விருப்பம்
  • மயக்க நோய்
  • கொலை
  • கொல்லிப்பாவை
  • பெண்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
   அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
   ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
   அவன் எம்மை அளித்துக் காப்பான்

கம்பராமாயணம் – பால காண்டம்

கருத்து உரை

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயுவினை குல தெய்வமாக கொண்ட கேசரீ எனும் வானரத் தலைவரின் மைந்தனானவர் அனுமன்; ஐந்து பூதங்களில் ஒன்றான (கடல்) நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக, ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு, ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான இலங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.

விளக்க உரை

  • அனுமனின் சேவை சிறப்பாக  காட்ட கம்பனால் எழுதப்பட்டப் பாடல்
  • ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் வைத்து சிறப்பாக பாடல் அமைத்தது போற்றுதலுக்கு உரியது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயக்கி அறியும் அறிவு எது?
திரிபு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எத்தால்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  எத்தால்

பொருள்

  • எக்காரணம்பற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும்  அவளுடன்  கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஆப்த வாக்கியம் என்பது என்ன?
சான்றோர் செய்த நூல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேமம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சேமம்

பொருள்

  • நல்வாழ்வு
  • இன்பம்
  • காவல்
  • அரணானவிடம்
  • சிறைச்சாலை
  • புதைபொருள்
  • ஓலைச்சுவடியின்கட்டு
  • பகைவரது அம்பு தன் மேற்படாமல் காக்கும் செயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

அபிராமி அன்னையே! நீ அணிந்து இருப்பது கடம்ப மாலை, உன்னுடைய படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); உன்னிடத்தில் இருப்பதோ கரும்பு வில்; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உனக்கு உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

விளக்க உரை

  • படை பஞ்சபாணம் தனுக் கரும்பு – உலக உயிர்களை படைப்பவள் எனும் பொருள் பற்றியது இவ்வரிகள். இவ்வாறான அருள் பெற்றே மன்மதன் தன் தொழில் செய்கிறான். மோக வடிவமாகவும், அதை நீக்கும் வலிமை பெற்றவள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கனை அழிக்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றி காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி அவனைக் கொன்று அழித்தாள்.)
  • யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – ‘உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அஃதாவதான இரவுப் பொழுதில் (மாயைக்கு உட்பட்டு இருக்கும் காலங்களில் எனும் பொருள் பொருத்தமாக தோன்றுகிறது) அதை விலக்கி நல்வாழ்வு தருபவள்.
  • ஒன்றோடு இரண்டு நயனங்களே – நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள் – அம்மை அப்பர் திருக்கோலம் (சிவசக்தி சொருபம்).
  • திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
    பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
    இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
    வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.

எனும் திருமந்திரப் பாடலும்,

சிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் என்று தொடங்கும்  லலிதா சஹஸ்ரநாமமும் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

விட்டு விலகாமல் உடன் நிகழும் இயல்புக்கு பெயர் என்ன?
அவிநா பாவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிராதாரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  நிராதாரம்

பொருள்

  • ஆதாரமின்மை
  • சார்புவேண்டாமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

மனம் பலவழிகளிலும் புறத்தில் வியாபிக்காமல் ஆறு ஆறாதாரங்களிலும் அதற்கான உபாசனைத் தேவதைகளைத் தியானித்து நிராதாரமாகிய மனசலனமற்ற இடத்தே சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; அப்படிப்பட்ட அந்த கர்த்தாக்களுக்கு இருப்பிடம் அந்தத் திருவருளே.

விளக்க உரை

  • நிராதாரத யோகம் – ஆன்மா தன்னறிவு இழந்து அறிவே வடிவமான சிவனை அடைந்து பற்றற்று நிற்கும் நிலை

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொறையார்தரு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொறையார்தரு

பொருள்

  • சுமையாகப் பொருந்திய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

ஆலகால விடத்தை உண்டு அதனால் உண்டான கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது கங்கையாற்றையும் அணிந்தவனுமாய சிவ பெருமானுக்கு உரித்தான தலம் சிறகுகளுடன் கூடிய மது உண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது என்ன அளவை?
உரை அளவை (நூல் அளவை)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரம்

பொருள்

  • மேலானது
  • திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று –முதல் நிலை
  • கடவுள்
  • மேலுலகம்
  • திவ்வியம்
  • மோட்சம்
  • பிறவி நீக்கம்
  • முன்
  • மேலிடம்
  • அன்னியம்
  • சார்பு
  • தகுதி
  • நிறைவு
  • நரகம்
  • பாரம்
  • உடல்
  • கவசம்
  • கேடகவகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து,  தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.

விளக்க உரை

  • உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
  • ‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்