‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – தொழுதல்
பொருள்
- வணங்குதல் (மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல்)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை ஆக்கிக் கொண்டு இன்அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசைகளை எழுப்பும் வீணையை உடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கத்திலும், வேதங்களோடு தோத்திரம் கொண்டு துதிப்பவர்கள் ஒரு பக்கத்திலும், நெருக்கி தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்திலும், வணங்குதலை உடையவர்களும், அழுகை உடையவர்களும், துவளுதலை உடையவர்களும் சூழ்ந்து ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் வணங்குபவர்கள் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக்கு எல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.