காலபாசம் – பாசக்கயிறு – (பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு. இரண்டு / மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்)
படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கைகளை உடைய நம் தூதுவர்களே! நம்முடைய ஈசன் அடியரை சென்று அடையாதீர்கள்; நீங்கள், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழுமத்தின் பக்காமல் போகாமல் அவர்களை வழிபட்டு செல்வீராக!
விளக்கஉரை
பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஒருவகை ஆயுதம்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
மறைந்து நிற்கும் பொருளை அறிந்த ஒன்றின் மூலம் அறிவது என்ன அளவை? கருதல் அளவை
நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை காட்சி அளவை
இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும் உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில் இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓரு ஊருக்கு மட்டும் உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன? ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்
‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
கருதல் அளவையின் வேறு பெயர் என்ன? அனுமானப் பிரமாணம்
அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம்தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் ;- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்; முருகா என்று ஒதுவார் முன்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்துஉரை
‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.
விளக்கஉரை
எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
யோக மார்க்கம் முறைப்படி
சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.
கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்
கருத்துஉரை
மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.
விளக்கஉரை
முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.
மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.
விளக்க உரை
ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.
செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
விளக்க உரை
சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு விழாக்களின்போது திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சிவக்கொழுந்தே! வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.
விளக்க உரை
எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
ஒரு காரிய நிகழ்ச்சிக்கு முதல் காரணம், துணை காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் தேவைப்படும். இவைகளில் முதல் காரணமும், துணை காரணமும் தனியே தனித்து இயங்காது. காட்சிக்கு புலப்படும் குடம் முதலிய காரியத்திற்கு பஞ்ச பூதத்தில் ஒன்றான மண் முதல் காரணமாகவும், குலாச் சக்கரம் எனும் திரிகை துணைக் காரணமாகவும் இருக்கும். குயவன் நிமித்த காரணமாக இருப்பான். ஆராய்ந்து பார்ப்பின் மண் மாயையாகவும், திரிகை அருட்சக்தியாகவும், குயவனை சிவனாகவும் எடுத்து உலகம் தோற்றுவிக்கப்படும்.
விளக்க உரை
உலக படைப்பிற்கு சிவனே நிமித்த காரணம் என்பதை விளக்கும் பாடல்
மாயையில் இருந்து சிவன் தனது அருள் தன்மையினால் உலகங்களை தோற்றுவிக்கிறான் என்பது விளங்கும்.
புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் கொள்கைகள் மறுதலிக்கப்பட்டு அகச்சமய கருத்துக்கள் நிலை நிறுத்தப் பெறும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அளவை எனும் பிரமாணத்திற்கு அடிப்படை எவை? அளவை, அளக்கும் கருவி
எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.
விளக்க உரை
துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..
கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பரதுரியம்
பொருள்
முத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)
விழிப்பு, கனவு, உறக்கம் எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பரதுரி யத்து நனவும் படிஉண்ட விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து) உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே.
எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
பரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.
விளக்க உரை
‘அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.
நின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.
நனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.
அதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை? பரிணாமம், விருத்தி
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்; மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப் பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!
கம்பராமாயணம் – யுத்த காண்டம்
கருத்துஉரை
ஒரு குற்றமும் இல்லாத ஒருவன் மனைவியை அழகிய சிறையில் அடைத்து வைப்போம்; குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; மற்றவர்கள் பெருமைப்படும் படியாக பேசுவதோ வீர உரைகள்; அதற்கிடையிலே விரும்புவது காமம்; மானிடர்களைப் கண்டு அஞ்சுகிறோம்; நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.
விளக்க உரை
இராவணனைப் பார்த்து கும்பகர்ணன் கூறியது இப்பாடல். ‘நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதே நம் பெருமை, என்ன ஓர் ஆட்சி!’ என இடித்துரைக்கிறான்.
வாக்கிய அமைப்பில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் / மனிதர்களின் மனநிலையை எடுத்துக்காட்டும் பாடல்
அசையும் பாம்பினை மார்பில் சூடி, வெண்ணிறக் காளையில் அமர்ந்து உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், ஆரவாரிக்குமாறு இருக்கும் கங்கையைச் சடையில் சூடியவராய், பார்வதி பாகராய், ஆண்மையின் இலக்கணம் கொண்டவராய், காமவேட்கையை தரும் ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணில் இருந்து தீப் புறப்பட விழித்த பெருமானாய், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்து அருளுகின்றார்.
கோடிக்கரையில் எழுந்தருளியுள்ள அழகனே! இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்?
இல்லை நின்கழற் கன்ப தென்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும் வல்லை யேயெனக் கின்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
நான் எதனைக் கருவியாகக்கொண்டு (ஐம் புலன்கள்) எத்தீய செயலைச் செய்தாலும் (புலன் வழி தொழில்கள்), இனியும் உன்னுடைய திருவடியை எனக்குக் காட்டி மீட்டு ஆட்கொள்ளவும் ஆற்றலுடையவனே! ‘மறு இல்லாத வானம் எனப்படும்’ ஐம் பெரும் பூதங்களும் பொருள் பிரபஞ்சமாகத் தோன்ற இடம் தந்து நிற்கும் குற்றமில்லாத வானமாகிய சிவலோகத்தை உடைய சிவமே! வாசனை திரவியங்கள் பொருந்திய அழகிய கூந்தலையுடைய தேவியை தன்னுடைய ஒருபாகமாக உடையவனே! எம் பெருமானே! உன்னுடைய திருவடியை போற்றுவதற்கு உரிய அன்பு என்னிடம் இல்லை (எனினும்) கல்லை உண்பதற்கு ஏற்ற பழமாகச் செய்கின்ற வித்தையைக் கொண்டு என்னை உன்னுடைய திருவடிக்கு அன்புடையனாகச் செய்தாய் உன்னுடைய திருவருளுக்கு ஓர் அளவுவே இல்லை.
விளக்க உரை
இதனால், பசு கரணத்தை, பதி கரணமாக மாற்றித் ‘திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன்’ என்பது கூறப்பட்டது.
எட்டுவகையான குணங்களில் ஒன்றான ‘பேரருள் உடைமையை’ முன்வைத்து சிவபெருமான் தான் படைத்த எல்லா உயிர்கள் மீதும் வைத்த எல்லையில்லா பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு அவனே தலைவன் ஆகிறான்.
‘கல் நார் உரித்தென்ன’ எனவும் ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிகல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் ” எனும் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘விச்சைகொண்டு’ – வித்தை கொண்டு – கல்லை மென்கனியாக்குதல் வித்தையால் நிகழ்தப் பெறும். அதைப் போல எனது வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளுக்கு உரிய அன்பனாக்கியது பெரிய வித்தை எனும் பொருள் பற்றி.
‘வல்லையே’ எனும் ஏகாரம் தேற்றம் பற்றி நின்றதால் `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையவன் ஆனேன்` எனும் பொருள் பற்றி.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியத்தை உண்டாக்கும் கர்த்தா எது? அதன் வேறு பெயர் என்ன? நிமித்த காரணம், காரண கர்தா.