‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – சேமம்
பொருள்
- நல்வாழ்வு
- இன்பம்
- காவல்
- அரணானவிடம்
- சிறைச்சாலை
- புதைபொருள்
- ஓலைச்சுவடியின்கட்டு
- பகைவரது அம்பு தன் மேற்படாமல் காக்கும் செயல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
அபிராமி அந்தாதி
கருத்து உரை
அபிராமி அன்னையே! நீ அணிந்து இருப்பது கடம்ப மாலை, உன்னுடைய படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); உன்னிடத்தில் இருப்பதோ கரும்பு வில்; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உனக்கு உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
விளக்க உரை
- படை பஞ்சபாணம் தனுக் கரும்பு – உலக உயிர்களை படைப்பவள் எனும் பொருள் பற்றியது இவ்வரிகள். இவ்வாறான அருள் பெற்றே மன்மதன் தன் தொழில் செய்கிறான். மோக வடிவமாகவும், அதை நீக்கும் வலிமை பெற்றவள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கனை அழிக்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றி காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி அவனைக் கொன்று அழித்தாள்.)
- யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – ‘உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அஃதாவதான இரவுப் பொழுதில் (மாயைக்கு உட்பட்டு இருக்கும் காலங்களில் எனும் பொருள் பொருத்தமாக தோன்றுகிறது) அதை விலக்கி நல்வாழ்வு தருபவள்.
- ஒன்றோடு இரண்டு நயனங்களே – நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள் – அம்மை அப்பர் திருக்கோலம் (சிவசக்தி சொருபம்).
- திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
எனும் திருமந்திரப் பாடலும்,
‘சிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம்‘ என்று தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமமும் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
விட்டு விலகாமல் உடன் நிகழும் இயல்புக்கு பெயர் என்ன?
அவிநா பாவம்