‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – மெய்ஞ்ஞானம்
பொருள்
- உண்மை அறிவு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மேவியே எங்குமாய் நிறைந்தோம் என்றீர்
மெய்ஞ்ஞான முழுவதையும் பெற்றோ மென்றீர்
ஆவியே மும்மூலம் கொள்ளா மற்றான்
அதிசயமாய் சிரஞ்சீவி யருளு முண்டேன்
தாவியே வாசியதைப் பாரா மற்றான்
தனவானே யவனாகும் தகைமை செய்வீர்
ஆவியே அறுமுகமே குருவே சுவாமி
ஐயனே யிந்தவகை யருளு வீரே
முருகன் அகத்தியருக்கு உபதேசித்து அருளிய யோகஞானம் 500
கருத்து உரை
தானே அணுவாகவும், அதன் பொருட்டான அசைவாகவும் ஆகி அண்டம் முதல் பிண்டம் வரை அனைத்திலும் நிறைந்த வஸ்துவானது, அணு இல்லா இடம் ஏதும் இல்லாமையால் பிரபஞ்சம் எங்கிலும் நிறைந்தது. வினைகளின் வழியே வரும் அஞ்ஞானம் விலகும் பொழுது மெய்ஞானம் என்று ஒன்றுள்ளது என்பது புலனாகும். மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்தவர் கந்தக் கடவுள். மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கும என்பது நடைமுறை. ஆனால் கந்தனே மும்மூல வடிவாக ஆனதனால் அவ்வாறான மும்மூல வடிவம் கொண்டப்பின் கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை. சிரத்தில் இருக்கும் பூரணமான மெய்ப்பொருள் மலங்களை களையறுத்த பின் கிட்டும் உன்னத நிலையே சிரஞ்சிவி தன்மையாகும். தான் யார், தன் தன்மை என்ன என்ற உண்மை அறியாது தேகம் விடுதலையே இறப்பு என்பர். மாறாகத் தான் யார் எனும் தன்மையினை அறிந்து கொண்டோர் இவ்வுடலை விலக்கும் காலம் ‘இது ஆடை மாறுதல் போல்’ என்று அறிவர். இவ்வாறு காயம் நீக்குதலை தாமற்ற மாற்றொன்று என அறிந்தவரே சிரஞ்சிவி ஆவார். உண்மையின் வடிவமாக கந்தன் உருக் கொண்டு நின்றதால் மும்மூலம் கொள்ளாது சிரஞ்சிவி ஆனான். மும்மூலம் கொள்ளுவதன் காரணமாக வாசி கூடி நிலை மாறி வாசியானது சிவா என்று மாறும். இவ்வாறான சிவமே கந்தனானதால் மாறுதலுக்கு உட்படவும் கொள்ளவும் எதுவுமில்லை. நிதியிலோ நிலையிலோ இல்லை என்ற நிலையில்லாதவரை உலகம் தனவானென்று கூறும். ஆனால் ‘தான் இல்லை’ என்ற உண்மையை அறிந்தவரே உண்மையில் தனவான் ஆவார்கள். ‘தளர்ச்சி இல்லா தேகம்’, ‘நரை முடி இல்லாமை’ ஆகியவை கொண்டிருப்பதுவே அறிவீலிகளால் இளமை என்று குறிக்கப்பெறும். உண்மையில் ‘தளர்ச்சி இல்லா செயல் ஆக்கம்’, ‘மருட்சி அற்று தீர்மான முடிவு எடுக்கும் நிலை’ ஆகியவையே இளமை ஆகும். இவர்களை குமரன் என்றும் கூறுவார்கள். வயதில் முதியவர்கள் செயலில் வேகம் காணும் போது அவரை குமரன் என்று கூறுவார்கள். அந்த நிலையை யாம் வேண்டி நின்றோம். இந்த நிலையை அருளக் கடவீர் என அகத்தியெம்பெருமான் தனது குருவாகிய கந்தக் கடவுளிடம் வேண்டுகிறார்.
விளக்க உரை
- அகத்தியர் முருகனிடத்தில் ‘அருள்வீர்’ என வேண்டும் பாடல்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
கருதல் அளவையின் இரண்டு வகைகள் யாவை?
தன்பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்
(இப் பாடலுக்கான விளக்கம் முழுவதும் சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)
மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.