எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
விளக்கஉரை
எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி (தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து (ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து (உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.
அருணகிரிநாதர்
பதவுரை
‘திதத்த ததித்த’ என்னும் தாள வாத்திய இசைகளை தன்னுடைய திரு நடனத்தின் மூலம் நிலைபடுத்துமாறு செய்கின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறைகளை முழுவதும் முதலில் அறிந்ததால் கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் கொண்ட படம் விளங்குமாறு இருக்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகில் இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டும், தயிர், மிகவும் இனிப்பாக இருப்பதாக சொல்லி அதை மிகவும் வாங்கி உண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப்பொருளே, பெரும் தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானையின் தாசனே, பல தீமைகள் நிறைந்ததும் தோல், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆன எலும்பை மூடி இருக்கும் தோல் பை ஆகிய இந்த உடம்பு, நெருப்பினால் தகிக்கப்படுவதாகிய எரியுட்டப்படும் அந்த அந்திம நாளில், உன்னை இத்தனை நாட்களாக துதித்து வந்த என்னுடைய சித்தத்தை உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
விளக்கஉரை
புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்ற போது இனி போட்டி வைத்து எவர் காதையும் அறுக்கலாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்ததால் அதன் பின் மகாபாரதத்தைத் தமிழில் வில்லிபாரதமாக எழுதினார்
ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில் இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து) அவனாகை ஆதார மாம்
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
பதவுரை
தன்னிலே தன்னை விளங்குமாறு செய்து விசாரித்தினால், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் பிரபஞ்சத்திலே உண்டான விஷயங்களை விசாரித்து அறிந்து இவையெல்லாம் பலப்பல மாயைகள் தான் என அறிந்து அவைகளை அன்னியமாக்கி அணுவிலும் அணுவானவற்றைக் காணும் போது, நம்முடைய ஞானத்தினாலே உயிர்வாழ்கிறோம் எனும் தன்மை கெட திருவருளோடு ஒன்றாவன் எனும் தன்மை இதற்கு ஆதாரமாக விளங்கும்.
இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.
விளக்கஉரை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்
ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.
கச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்
திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்
தாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்
குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை
வரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது
தட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது
சிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்
மனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.
1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்
1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்
Temple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.
திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,
சோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு
வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும், திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 123
திருமுறை எண் 8
பாடல்
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே
பொருள்
கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
பொன்னின் மேல் வெண்மையான திருநீற்றை அணிந்து போல் என்று அருளாளர்களால் போற்றிக் கூறப்படுவதும், வெகு நீண்ட தொலைவிற்கு பனி சூழ்ந்து இமய மலையின் பகுதியில் உள்ளதும், அன்பர்கள் விடுத்து பிறர் எவராலும் அறிவதற்கு அரிய சிவபெருமான் எந்நாளும் நிலைபெற்று வீற்றிருந்து அருளும் பெருமை பொருந்தியதுமானது திருக்கயிலாய மாமலையாகும்.
அபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க உபய சரணம் உதவும் – சபைநடுவுள் ஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு கோடுமுகத் தானை குறித்து
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
அஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
‘இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் மாளாச் செகத்தைப் படைத்தவளாம்’ என்று பொருள் மாற்றி வாசிக்கலாம். அஃதாவது மானிடப் பிறப்பே மற்ற மேம்பட்ட நிலைகளை அடையச் செய்கிறது எனப் பொருள் கொண்டு ‘மானுடன் கோட்டை இடித்தவளாம்’ என்று இருந்திருக்கலாம். யுகங்கள் தோறும் உலகம் அழிக்கப்பட்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. ஆனால் தவ முனிவர்கள், ரிஷிகள் மற்றும் சித்தர்கள் வாழும் லோகங்கள் எந்த வகையிலும் மாறுபாடு அடைவதில்லை. அந்த வகையில் இவர்கள் இருக்கும் உலகங்கள் படைத்தவள் என்பதற்காகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து பிழை பொறுத்தருள வேண்டும்.
மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு மூர்த்தி
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
அகழி அமைப்பு கொண்ட கருவறை
பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
‘நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
‘…அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும் ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5
பதிக எண் 44
திருமுறை எண் 1
காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே ஆவார்கள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
நடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.
விளக்கஉரை
சாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்
பச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).
வேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.
தோழி, கங்கை, சந்திரப் பிறை, ஊமத்தமலர்கள் ஆகியவை பொருந்திய சடையை உடையவரும், இயல்பிலேயே மலம் என்னும் குற்றம் இல்லாதவரும், தூண்டுதல் எவரும் இன்றி எரியும் தூங்காமணி விளக்கின் சுடர் போன்ற மேனியை உடையவரும் பிறருக்கு வருந்தம் தரும் ஒரு சொல்லும் சொல்லாமல் இனிமையான இனிமையான மொழி பேசுபவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தார்; எனவே இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன்.
விளக்கஉரை
இறைவனிடத்தில் உண்டான காதல் உறவு கை கடந்து பெருகி ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டதை குறிப்பிடும் பாடல்.
மந்தாகினி – கங்கை ஆறு.
வான்மதி – வானத்தில் ஒளிரும் சந்திரன் – பிறைத் திங்கள்
எங்கும் விரிந்து எதையும் தாங்கும் உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் இடையறாது தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, தேவலோகத்தைத் தாங்குபவனே, கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு உரியவையாக கிடைக்கும் படி தகுதி உடைவனாகும்படி செய்து, எனக்கு உபதேசமும் செய்து அருளி உணர்த்திய பெருமையை என்னவென்று சொல்வது?
விளக்கஉரை
விரி தாரண – தனக்கு அருள் செய்தது போல் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்
முருகன் எல்லாவற்றையும் அருளிக் காப்பாற்றுவதை குறித்த பொருள்.
மார்பகங்கள் தளர்ந்து சுருங்கி, நீர் வற்றியதால் நரம்புகள் மேலே தெரியும் படியாக எழுந்து, கண்கள் குழி விழுந்து,வெண்மையான பற்கள் விழுந்து, வயிற்றில் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பு நிறம் கொண்டு, இரண்டு கோரைப் பற்களும் நீண்டு, நீண்ட உயரமான கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி, அலறி, எரித்தப்பின் எதுவும் மீதம் இல்லாத காரணத்தால் காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.
பங்கி = ஆடவரின் மயிர், விலங்குகளின் மயிர் வகை, பாகம் பெற்றுக்கொள்வோன், சாதிலிங்கம்
அனல் ஆடுதல் – சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல்
இவ்வாறு ஆடுபவன் ஆயினும் அவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு எனும் கருத்து.
முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன். இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன் என்று சிவன் உமையிடம் உரைத்தது ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. ( உமா மகேஸ்வர ஸ்ம்வாதம், மகாபாரதம்)
ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை ஆகியவை கொண்டு நீரின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம் ஆகியவை கொண்டு நெருப்பின் தத்துவமாகவும், ஒலி,தொடு உணர்வு கொண்டு ஆகியவை கொண்டு காற்றின் தத்துவமாகவும், ஒலியினை அடிப்படையாக கொண்டு ஆகாயத்தின் தத்துவமாகவும் இருக்கும் போற்றுதலுக்கு உரிய அந்த கணபதியை அன்பினால் சரணம் அடைகின்றோம்.
விளக்கஉரை
மண்ணில் ஐந்து வகையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது போன்று சில இடங்களில் விளக்கங்கள் நீள்கின்றன. மூலாதார மூர்த்தி என்பதாலும், மனித உடலில் அனைத்து தத்துவங்களும் உறைவதாலும், இப்பாடல்கள அனைத்தும் சூட்சமானது என்பதாலும் இது போன்ற விளக்கங்கள் விலக்கப்படுகின்றன.
எண்ணிக்கை முன்வைத்து எழுதப்படும் பாடல்களில் இறங்கு முகத்தில் இருக்கும் பாடல் இது. ஐங்குணமாகிய நிலம் ஸ்தூல ரூபம், ஒரு முகமாகிய ஆகாயம் சூட்சம ரூபமாக இருப்பதாகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். அஃதாவது ரூபத்தில் இருந்து அருபம் வரை அனைத்துமாக இருப்பவன் எனும் பொருளில் எழுதப்பட்டு இருக்கலாம்.
சிவபெருமானை விலக்கி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயின பின்னர், அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்த போது, தண்டனை பெற்று ஒளி இழந்த சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றத் தலம்
பனையைத் தல விருட்சமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று.(மற்றவை வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருப்பனையூர், திருப்பனந்தாள், திருவோத்தூர்)
புறாவுக்காக உயிரைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி முக்தி பெற்ற தலம்
சூரியன் கண்ணொளி பெற்றதால் இறைவன் நேத்ர உத்ராரனேஸ்வரர் (கண்களை காத்து அருளியவர்)
ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு செய்யும் தலம்
திருநீலகண்டர் தம் மனைவியுடன் சேர்ந்து, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் சிலா ரூபங்கள் கொண்ட அமைப்பு
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 605603
94448-97861, 99420-56781
வழிபட்டவர்கள்
சூரியன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
விக்கிரவாண்டியில் (திண்டிவனம் – விழுப்புரம் சாலை) இருந்து 2 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து சுமார் 1௦ கிமீ தொலைவு. முண்டியம்பாக்கம் அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 210 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 20 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 53
திருமுறை எண் 1
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் நிறைந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெய்யும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக அமர்ந்தவனாய், இராவணனின் தோள்களை அடர்த்து, அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே எனப்போற்றும் அடியவர்களுக்கு அருள்புரிவாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.
விளக்கஉரை
ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும் காட்டானை மேலேறி என் கண்ணம்மா! கண்குளிரக் காண்பேனோ
அழுகணிச் சித்தர்
பதவுரை
உலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ?
(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.
விளக்கஉரை
உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.
விளக்கஉரை
‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.
மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.