பாடல்
மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
இரண்டாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
தோழி, கங்கை, சந்திரப் பிறை, ஊமத்தமலர்கள் ஆகியவை பொருந்திய சடையை உடையவரும், இயல்பிலேயே மலம் என்னும் குற்றம் இல்லாதவரும், தூண்டுதல் எவரும் இன்றி எரியும் தூங்காமணி விளக்கின் சுடர் போன்ற மேனியை உடையவரும் பிறருக்கு வருந்தம் தரும் ஒரு சொல்லும் சொல்லாமல் இனிமையான இனிமையான மொழி பேசுபவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தார்; எனவே இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன்.
விளக்க உரை
- இறைவனிடத்தில் உண்டான காதல் உறவு கை கடந்து பெருகி ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டதை குறிப்பிடும் பாடல்.
- மந்தாகினி – கங்கை ஆறு.
- வான்மதி – வானத்தில் ஒளிரும் சந்திரன் – பிறைத் திங்கள்
- மத்தம் – ஊமத்தை மலர்.
- நுந்துதல் – தூண்டுதல்