அமுதமொழி – விளம்பி – வைகாசி – 20 (2018)

பாடல்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
     குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
     பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
     தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
     அப்ப னிடந்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்கால் அம்மையார்

பதவுரை

மார்பகங்கள் தளர்ந்து சுருங்கி, நீர் வற்றியதால் நரம்புகள் மேலே தெரியும் படியாக எழுந்து, கண்கள் குழி விழுந்து,வெண்மையான பற்கள் விழுந்து, வயிற்றில் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பு நிறம் கொண்டு, இரண்டு கோரைப் பற்களும் நீண்டு, நீண்ட உயரமான கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி,  அலறி, எரித்தப்பின் எதுவும் மீதம் இல்லாத காரணத்தால் காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.

விளக்க உரை

  • திரங்குதல் = தளர்தல், உலர்தல், திரண்டு சுருங்குதல், சுருங்குதல்
  • பங்கி = ஆடவரின் மயிர், விலங்குகளின் மயிர் வகை, பாகம் பெற்றுக்கொள்வோன், சாதிலிங்கம்
  • அனல் ஆடுதல் – சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல்
  • இவ்வாறு ஆடுபவன் ஆயினும் அவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு எனும் கருத்து.
  • முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன். இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன் என்று சிவன் உமையிடம் உரைத்தது ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. ( உமா மகேஸ்வர ஸ்ம்வாதம், மகாபாரதம்)

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *