அமுதமொழி – விளம்பி – வைகாசி – 23 (2018)

பாடல்

சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத்தாரணனே.

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

நடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.

விளக்க உரை

  • சாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்
  • பச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).
  • வேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில்  ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *