பாடல்
உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே
தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்
பதவுரை
சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.
விளக்க உரை
- ‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
- ‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.