அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மூங்கை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மூங்கை

பொருள்

  • ஊமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே

திருமந்திரம் – 7ம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வாக்கு, மனம் என்னும் இரண்டாலும் மௌனமாக இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அவ்வாறு இல்லாமல் மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது இருத்தல்தான் மௌனம் எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன நோன்பு மேற்கொண்டவர்களாக ஆகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருங்கு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மருங்கு

பொருள்

  • பக்கம்.
  • உடல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

சிலப்பதிகாரம்

கருத்து உரை

இருபக்கமும் வண்டுகள் மிக்கொலிக்க, அழகிய பூவாடையைப் போர்த்து கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், காவேரி நீ வாழ்வாயாக; அங்ஙனம் நடந்த செயல் எல்லாம், நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே  அறிந்தேன் வாழி காவேரி.

 

  • இன்று ஆடிப் பெருக்கு.
  • கரை புரண்டு ஓடும் காவிரியினைக் கண்ட நாம் அடுத்த தலைமுறையும் அவ்வாறு காண இறையிடம் பிராத்தனை செய்வோம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னார்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துன்னார்

பொருள்

  • பகைவர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நேடுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நேடுதல்

பொருள்

  • தேடுதல்
  • எண்ணுதல்
  • விரும்புதல்
  • சம்பாதித்தல்
  • இலக்காகக்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சூழல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சூழல்

பொருள்

  • நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
  • நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்

பாடல்

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

சிவஞான போதம் – மெய்கண்டார்

கருத்து உரை

மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவின் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? காணவில்லை. மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் காணவில்லை. எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயைக்கு உட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண இயலாது.

விளக்க உரை

மாயையை விலக்கும்வரை சிவதரிசனம் கிடையாது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னுதல்

தமிழ் அன்னை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னுதல்

பொருள்

  • அடைதல்
  • பொருந்துதல்
  • மேவுதல்
  • அணுகுதல்
  • செறிதல்
  • செய்தல்
  • அடைதல்
  • ஆராய்தல்
  • தைத்தல்
  • உழுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
தன்இயல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
துன்னிய நின்அருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே!

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

விளக்க உரை

அருட் பெருஞ் சோதியையுடைய ஆண்டவனே! நிலை பெற்ற நினது திருவருளாகிய அருமையான ஞானாமுதத்தை எனக்குத் தந்து என்னையும் நின் திருவருளில் வாழ்வித்து நான் எண்ணிய எல்லாவற்றையும் அடைய உதவி செய்து என் உள்ளத்தில் சிவமாய்க் கலந்து இப்பொழுது எனக்கு நினது அருளைச் செய்தாய்; என்னையடைந்த நினது திருவருள் வாழ்க.

கருத்து உரை

  • உன்னிய உன்னிய எல்லாம் உதவல் – எண்ணிய எல்லாம் எண்ணியவாறு உதவுதல்.
  • என் உள்ளத்திலே தன்னியலாகிக் கலந்து தயவு செய்தாய் – உள்ளத்தில் ஞானமாய்க் கலந்து கொள்ளுதல் சிவத்தின் இயல்பு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடிஞ்சில்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இடிஞ்சில்

பொருள்

  • அகல்

பாடல்

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

அகல் இருப்பினும் சுடரை அணைத்து விட்டால், அந்த அகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்துவிடும். அது போல்வதே உடம்பின் வாழ்நாளும்,  இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர்கள் ஆரவாரம் செய்வார்கள். விடியல் கண்ட பிறகும் இருளில் கிடப்பதை ஒத்து வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, உடம்பின் நிலையாமை இயல்பு கண்கூடாக விளங்கி நிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப் பற்றி அதில் அழுந்திக் கிடந்து, அதன் மேல் நிலைக்கு வராமல் துயருறுதல் இரங்கத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆக்ஞை

தமிழ் அன்னை

ஓவியங்கள் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆக்ஞை

பொருள்

  • ஆக்ஞை’ என்ற சொல்லானது “ஆக்கினை’ என்ற சொல்லின் மருவு. “கட்டளை’ அல்லது “ஆணை’.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

திருமந்திரம்

கருத்து உரை

நெற்றியின்கண் நேர்நடுவில் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். இதைக் கண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்சிவசிவஎன்னும் செந்தமிழ்த் திருமறையாகும். எல்லா பற்றறுகளையும் விட்ட பற்றவர்களாகிய பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேலே கூறப்பட்ட புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன்.

ஆக்ஞை

விளக்க உரை

  • வடிவம் வட்டம். இதழ்கள் 96
  • இச் சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.
  • வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம், “ஷாம்’என்று அழைக்கப்படுகின்றன. அக்ஷ்ரங்கள் முறையே (‘ஹ’,’க்ஷ’). அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
  • இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.
  • ஆக்ஞை சக்கரம் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டது.
  • சதாசிவனாரும், மனோன்மணி ஆகிய ஞானத் தாயும் கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே “ஆக்ஞை” என்ற தலமாகும்.
  • இதன் சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன.
  • தெய்வம் – மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
  • வண்ணம் – இண்டிகோ
  • பீஜா மந்திரம் – “அம்’ (ஆன்ம்)
  • வாகனம் – நாதம். இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.
  • அதிதேவதை – ஹாகினி தேவி
  • குணம்- சாத்விகம்.
  • லோகம்- தபலோகம்.
  • கோசம்- விஞ்ஞானமய கோசம்
  • தெய்வம் – சிவன். இந்த சக்கரத்தில் அவர் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார். பேதங்கள் மறைந்த பரிபூரண நிலை
  • புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்) ஆகிய அனைத்துமே “மனம்’
  • நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’, ‘ஆளுமைச் சக்கரம்’,’ ப்ரம்ஹக்ரந்தி ‘ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது
  • ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம் அல்லது திரிகால ஞானி’ எனும் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்ந்த நிலை ஏற்படும்.
  • ப்ரம்ஹக்ரந்தி எனும் இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர்.
  • இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தன், ஹாகினீ தேவியோடு திருவருள்பாலிக்கிறார்கள். இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல “துரீயலிங்கம்” என உபாசகர்கள் அழைப்பர்.
  • உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். (உன்மனீ பாவம் -சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம்  செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து  அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்).

பல்வேறு நூல்களில் குறிப்புகள்

லலிதா ஸஹஸ்ரநாமம்ஹாகினீ தேவி (ஆக்ஞை)

ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ

புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள் புரிபவள்.

ஆதிசங்கரர்

இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்கு கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும். இச்சக்கரத்தில் தேவதேவியர்  பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.

காளிதாஸன்லகுஸ்தவம்

நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும்.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – புயங்கன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  புயங்கன்

பொருள்

  • பாம்பு
  • பாம்பணியுடையசிவபிரான்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்

விளக்க உரை

1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம்.
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.

2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது

3.
அட்டமா நாகங்களை – அட்டமா சித்தி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்மம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தன்மம்

பொருள்

  • தருமம்
  • சலாசனவகை
  • நீதி
  • நன்மை
  • அறம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

விளக்க உரை

  • உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
  • அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உய்வு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உய்வு

பொருள்

  • உய்தி
  • உயிர்தப்புகை
  • பிழைப்பு
  • ஈடேற்றம்
  • இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்
  • உய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டு  அருள்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடுதல்

பொருள்

  • கொல்லுதல்
  • தீயிற் பாகமாக்குதல்
  • சமைத்தல்
  • வருத்துதல்
  • போராடுதல்
  • வெல்லுதல்
  • காய்ச்சுதல்
  • குற்றுதல்
  • உருக்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

உலகத் தொகுதியின் வினைகள் அழித்தலை விரும்பினவனும், வானில் இருந்த மூன்று மதில்கள் கெட்டு அழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், ‘திருப்பழமண்ணிப் படிக்கரை’ என்னும் தலமே.

Loading

சமூக ஊடகங்கள்

மௌன மரம்

மௌன_மரம்_Iyyapa_Madhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குழகர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  குழகர்

பொருள்

  • இளையர் / இளையோன்
  • அழகன்
  • பிறர்க்கு இணங்குபவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

கங்கை ஆற்றைச் சடையில் சூடி மறைக் காட்டில் உறையும் பெருமானே! உடலின் ஒரு கூறை பெண்ணாகிய உமையம்மைக்கு ஈந்த அழகரே! விடையேறிய எம்பெருமானே! இந்த ஒப்பில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 17

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

சிவன்

உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத  தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும்,  ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.

உமை

ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.

சிவன்

உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.

உமை

ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?

சிவன்

ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும்  மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.

  • பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
  • வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
  • பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.

ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.

ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.

உமை

மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதன்

பொருள்

  • மூலகாரணன்
  • ஆதிகாரணன்
  • முதல்வன்
  • கடவுள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மூலக்காரணனனாகவும், ஆதிகாரணனனாகவும், முதல்வனனாகவும் இருப்பவன்; குற்றம் அற்று இமையாது இருக்கும் யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன்; வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்; மிகுந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பம் எனும் ஊரில் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் அறுந்து கெடுமாறு ஏத்துமின்.

விளக்க உரை

ஏதன் – குற்றமுடையவன் எனும் பொருளில் ‘நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன்’ எனும் விளக்கம் பட இடங்களில் தென்படுகிறது. ‘ நமது குற்றங்களுக்கு ஈசன் என்றும் காரணமாகான்’ எனவே இவ்விளக்கம் இதில் இடம் பெறவில்லை. ஆன்றோரும் பொருள் அறிந்தோரும் உரைத்தால் பொருள் அறியும் வாய்ப்பு எமக்குக் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பரம்

பொருள்

  • உடல்
  • கவசம்
  • பாரம்
  • மேலானது
  • திருமால்நிலைஐந்தனுள்ஓன்று
  • கடவுள்
  • மேலுலகம்
  • திவ்வியம்
  • வீடுபேறு
  • பிறவிநீக்கம்
  • முன் மேலிடம்
  • அன்னியம்
  • சார்பு
  • தகுதி
  • நிறைவு
  • நரகம்
  • குதிரைக்கலணை
  • அத்திமரம்
  • பரதேசி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.

சிவவாக்கியர்

கருத்து உரை

ஈசனே, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ ஊக்கத்துடன் கொடுத்த கூடிய  வலிமை எது  எனில்  என்னுடைய  சிரம்  தாழ்த்தி   சிரசின் மேல் கரம் குவித்து பஞ்சாட்சரத்தை  எனது  கண்ணில்  நீர்  பெருக  நெஞ்சுருக  உன்னை  நினைத்து  வழிபடுவது ஒன்று தான்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மறுத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மறுத்தல்

பொருள்

  • தடுத்தல்
  • திருப்புதல்
  • இல்லையென்னுதல்
  • நீக்குதல்
  • வெட்குதல்
  • திரும்பச் செய்தல்
  • இல்லாமற்போதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறிந்து கொள்ளாது அதனை வேண்டாவென்று மறுத்தேன்; என் கண்மணியே,  நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ?(விடமாட்டாய் – மறைபொருள்)  மேன்மை நிலையில் உள்ளவர், (வினையின் காரணமாக) சிறு நாய் கொண்டிருக்கும் குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? (அதுபோல்) நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கேடிலி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கேடிலி

பொருள்

  • அழிவில்லாதவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6ம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து உரை

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், மேல் எழும் பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விசுத்தி

தமிழ் அன்னை

ஒவியங்கள் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விசுத்தி

பொருள்

  • ஆறு ஆதாரங்களில் ஒன்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.

அகத்தியர்.

கருத்து உரை
இதுவரையில் அனாகத சக்ரத்தினை ஆட்படுத்தும் முறையினை சொன்னோம். இப்பொழுது விசுக்தியைப் பற்றிக் கேளு. மேல் குறிப்பிட்ட சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலம் மேலும், பதினாறு இதழ் தாமரை வடிவமும் கொண்டது இச்சக்கரம். பாலகனே, இதற்கான அட்சரம் பஞ்சாட்சரத்தில் ஒன்றான ‘வ’காரம். அதன் நடுவில் சதாசிவனும் சாகினியும் வீற்று இருப்பார்கள்.

விசுத்தி

விளக்க உரை

  • மூலக்கூறு : ஆகாயம்
  • பீஜமந்திரம் : ஹம்
  • ஐம்பது எழுத்துக்களில் விசுக்தி 16 எழுத்துக்களால் குறிக்கப்பெறும். (எழுத்துக்கள் அவரவர் குரு உபதேச முறைக்கு தக்கவாறு மாறி இருக்கின்றன. சரியான எழுத்தும் பொருளும் குரு முகமாக அறியவும்).
  • அறு கோணவடிவம். அதை சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட வடிவமும், அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்பட்டும் உள்ளே அடர் நீல நிறத்தையுடையதும் ஆன சக்கரமாகும்.
  • இது, பஞ்சாட்சர எழுத்துகளில் ஒன்றான “வ” என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் சக்கரம் ஆகும்.
  • யோக மரபுகளில் விசுக்தியும் அதற்கு மேல் அனைத்து சக்கரங்களும் ஞான சக்கரங்களாக உணர்த்தப்படும். அதன் பொருட்டே ஈசன் ஆலகால நஞ்சு உண்ட போது அவர்தம் நிலை மாறாது இருக்க அன்னை பராசக்தி ஈசனின் கண்டத்தில் விஷத்தை தடுத்தி நிறுத்திய வரலாறு உணர்த்தும்
  • ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்
  1. மேனி : நீல நிற மேனி
  2. ஆடை : புலித் தோல்
  3. கரங்கள்: நான்கு கைகள். . திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
  • பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி எனும் பெயர் தாங்கி சிகப்பு நிற தாமரையில் அமர்ந்த கோலம்.
  1. மேனி : இளம் ரோஜா நிறம்
  2. ஆடை : நீல நிற புடவை
  3. கரங்கள்: நான்கு கைகள், மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை  ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்