
ஒவியங்கள் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – விசுத்தி
பொருள்
- ஆறு ஆதாரங்களில் ஒன்று
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.
அகத்தியர்.
கருத்து உரை
இதுவரையில் அனாகத சக்ரத்தினை ஆட்படுத்தும் முறையினை சொன்னோம். இப்பொழுது விசுக்தியைப் பற்றிக் கேளு. மேல் குறிப்பிட்ட சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலம் மேலும், பதினாறு இதழ் தாமரை வடிவமும் கொண்டது இச்சக்கரம். பாலகனே, இதற்கான அட்சரம் பஞ்சாட்சரத்தில் ஒன்றான ‘வ’காரம். அதன் நடுவில் சதாசிவனும் சாகினியும் வீற்று இருப்பார்கள்.

விளக்க உரை
- மூலக்கூறு : ஆகாயம்
- பீஜமந்திரம் : ஹம்
- ஐம்பது எழுத்துக்களில் விசுக்தி 16 எழுத்துக்களால் குறிக்கப்பெறும். (எழுத்துக்கள் அவரவர் குரு உபதேச முறைக்கு தக்கவாறு மாறி இருக்கின்றன. சரியான எழுத்தும் பொருளும் குரு முகமாக அறியவும்).
- அறு கோணவடிவம். அதை சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட வடிவமும், அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்பட்டும் உள்ளே அடர் நீல நிறத்தையுடையதும் ஆன சக்கரமாகும்.
- இது, பஞ்சாட்சர எழுத்துகளில் ஒன்றான “வ” என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் சக்கரம் ஆகும்.
- யோக மரபுகளில் விசுக்தியும் அதற்கு மேல் அனைத்து சக்கரங்களும் ஞான சக்கரங்களாக உணர்த்தப்படும். அதன் பொருட்டே ஈசன் ஆலகால நஞ்சு உண்ட போது அவர்தம் நிலை மாறாது இருக்க அன்னை பராசக்தி ஈசனின் கண்டத்தில் விஷத்தை தடுத்தி நிறுத்திய வரலாறு உணர்த்தும்
- ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்
- மேனி : நீல நிற மேனி
- ஆடை : புலித் தோல்
- கரங்கள்: நான்கு கைகள். . திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
- பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி எனும் பெயர் தாங்கி சிகப்பு நிற தாமரையில் அமர்ந்த கோலம்.
- மேனி : இளம் ரோஜா நிறம்
- ஆடை : நீல நிற புடவை
- கரங்கள்: நான்கு கைகள், மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
![]()