ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மறுத்தல்
பொருள்
- தடுத்தல்
- திருப்புதல்
- இல்லையென்னுதல்
- நீக்குதல்
- வெட்குதல்
- திரும்பச் செய்தல்
- இல்லாமற்போதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறிந்து கொள்ளாது அதனை வேண்டாவென்று மறுத்தேன்; என் கண்மணியே, நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ?(விடமாட்டாய் – மறைபொருள்) மேன்மை நிலையில் உள்ளவர், (வினையின் காரணமாக) சிறு நாய் கொண்டிருக்கும் குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? (அதுபோல்) நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.