ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அனாகதம்
பொருள்
- பிற ஒன்றால் தோற்றுவிக்கப் படாதது
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து உரை
அடுத்தது “சி”கார ” எழுத்தாகவும், சிகாரத்தின் நடுவில் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் ருத்திரனாரை தலைமையாக கொண்ட அனாதகத்தை, முக்கோணச் சக்கரம் சுற்றிலும் (இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கி) பன்னிரண்டு இதழ்களை வரைந்து, செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் புள்ளியாகவும், சக்திதத்துவம் உடையதாகவும் சிறியதாகவும் உள்ள பிந்துவினை இட்டு குரு உபதேசித்த படி ஜபிக்க வேண்டும்.
விளக்க உரை
- இது அக்னி நிறமுடையது.
- விசுத்தி காற்றுடனும். ஆக்ஞா நெருப்புடனும் சம்மந்தம் உடையவை.
- மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவே அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி. இது பற்றியே மனிதர்கள் கீழ் நிலை அடைவதும், மேல் நிலை அடைவதும்.
- 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானது.
- நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
- ஒன்றின் மூலத்திலிருந்து வந்தது.
- ‘ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா – ‘ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்று பிரகாசிப்பது’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவளி இதைக் குறிக்கிறது. ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும் இருப்பதை குறிக்கிறது. அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாக ருத்ர சியாமளம் கூறுகிறது.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)