ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சாலி
பொருள்
- நெற்பயிர்
- நெல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!
நெல்லை காந்திமதி பிள்ளைத் தமிழ்
கருத்து உரை
நீ வராது இருந்தால் உன் வேல் போன்ற விழிகளில் மை இட்டு எழுத மாட்டேன்; கூர்மையான வாள் போன்று இருக்கும் நெற்றியில் திலகம் இட மாட்டேன்; மணியால் கோர்க்கப்பட்டவைகளை கொண்டு அவைகளை உன் கழுத்தில் இட்டு அழகு பார்க்கும் பணிகளை செய்ய மாட்டேன். தானாக முந்திச் சென்று காணும் உன்னிடம் பேச மாட்டேன்; முகத்தினையும் காணமாட்டேன். தாய்மைக்கு உரித்தான தனங்களில் இருந்து பால் ஊட்ட மாட்டேன்; தேர் ஊர்ந்து செல்லும் வீதிகளைக் காட்ட மாட்டேன்; மன மகிழ்வோடு முத்தமிட மாட்டேன்; மணிகள் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலில் இட்டு சீராட்ட மாட்டேன்; இமவானின் மார்பில் தவழும் குழந்தையும், நெற்கதிர்களால் சூழப்பட்டிருக்கும் தலைவன் வாழும் இடத்தில் வாழும் காந்திமதித் தாயே வருக வருக.
விளக்க உரை
- பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், ஆச்சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டதும் பாவனையே ஆகும்.
- நெல்லை காந்திமதி அன்னையை குழந்தையாக பாவித்து எழுதப்பட்ட பாடல்.